தங்க பத்திரத்தில் முதலீடு - நல்ல லாபம்!

SOCIAL SHARE
Pin It

தங்கத்தில் பணத்தை சேமிப்பது, நல்ல லாபம் அளிக்கக் கூடியது. ஆனால், தங்க நகைகளாக வாங்கும் போது, செய்கூலி, சேதாரம், வரிகள் என, குறைந்தபட்சம், 10 சதவீதம் முதல், 15 சதவீதம் வரை இழப்பு ஏற்படுகிறது. அதற்குப் பதிலாக, தங்கத்தை முதலீட்டுக்காக வாங்க, பல வழிமுறைகள் உள்ளன.

மத்திய அரசு சார்பாக, ரிசர்வ் வங்கி வெளியிட்டு வரும், சாவரின் தங்க பத்திரங்கள், 'மியூச்சுவல் பண்ட்' நிறுவனங்களின் 'கோல்ட் இ.டி.எப்' மற்றும் 'கோல்ட் சேவிங்க்ஸ் பண்ட்' ஆகியவை, முக்கியமான முதலீட்டு வழிமுறைகளாகும்.

மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள், 'கோல்ட் எக்ஸ்சேஞ்ச் டிரேடட் பண்ட்' என்ற பெயரில், கோல்ட் இ.டி.எப்.,களை வெளியிடுகின்றன. இவற்றை வாங்கும் போது, தங்க நகையாக வாங்கும் போது ஆகும் செய்கூலி, சேதாரம், ஜி.எஸ்.டி., போன்ற செலவுகள் இல்லை. தேவைப்படும் நேரத்தில், இந்த பண்டுகளை, தேவைப்படும் அளவுக்கு விற்று, பணத்தை நம் வங்கிக் கணக்கில் பெற்றுக் கொள்ளலாம்.

கோல்ட் இ.டி.எப்.,பில், 50 ரூபாய் கூட, முதலீடு செய்ய முடியும். 1 கிராம் தங்கம், 1 'யூனிட்' எனப்படுகிறது. 1 யூனிட் வாங்க முடியவில்லை என்றால், 'கோல்ட் பீஸ்' என்ற முறையில், 1 யூனிட்டை, பல மடங்காக குறைத்தும் வாங்கிக் கொள்ள முடியும்.

இரண்டாவதாக, கோல்ட் சேவிங்ஸ் பண்ட். இந்த முறையில், மாதம், 100 ரூபாய் முதல், எவ்வளவு ரூபாய் வரையும் சேமிக்க முடியும். இதிலும், தங்கமாக தர மாட்டார்கள். தேவைப்படும் போது, நம் சேமிப்பை பணமாக வாங்கிக் கொள்ள முடியும்.

மூன்றாவதாக, ரிசர்வ் வங்கி, ஓராண்டில், நான்கு முறை, கோல்ட் பாண்ட் என்ற பெயரில், தங்க பத்திரங்களை வெளியிடுகிறது.  ஒருவர், 1 கிராம் முதல், 4 கிலோ வரை, தங்க பாண்ட் வாங்க முடியும். இதுவும் கையில் தங்கமாக வாங்க முடியாது. தங்கம் என்ற பெயரில், காகித பத்திரங்கள் அல்லது எலக்ட்ரானிக் பத்திரமாக வாங்கிக் கொள்ள முடியும்.

இதனால், முதலீட்டு காலத்திற்கு பின், எந்நேரம் வேண்டுமானாலும் அவற்றை பணமாக மாற்றிக் கொள்ள முடியும். முதலீட்டுக் காலம், எட்டாண்டுகள். அதற்கு முன், ஐந்தாண்டுகளில் குறிப்பிட்ட தொகைக்கு, தங்க பத்திரத்தை விற்று காசாக்க முடியும். நீண்ட காலம், எட்டாண்டுகளுக்கு காத்திருக்கலாம் என்பவர்கள், கோல்ட் பாண்ட் வாங்கலாம்.  நல்ல லாபம் அளிக்கக் கூடியது!

ARUNACHALAM