1972ம் ஆண்டு வெளியான புரூஸ் லீ-யின் ‘ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி’ திரைப்படத்தை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறந்திட முடியாது. சண்டைக் காட்சிகளை புதுமையாகச் செய்து உலகம் முழுவதும் ரசிகர்களை ஈர்த்த புரூஸ் லீ-யின் அந்தப் படம், கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவின் பழங்குடி மொழியான நூங்கார் மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது.
புரூஸ் லி-யின் தீவிர ரசிகையான, மேடை நாடகங்கள், தொலைக்காட்சி, திரைப்படங்களில் நடித்துவரும் கைலி, இந்த திரைப்படத்தை நூங்கார் மொழியில் டப்பிங் செய்து வெளியிட்டுள்ளார். 1788ம் ஆண்டு முதல் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தின் கீழ் வந்த ஆஸ்திரேலியாவில், பூர்வீக மொழிகள் வெகுவாகப் புறக்கணிக்கப்பட்டன. இதுபற்றி ஆஸ்திரேலிய தேசியப் பல்கலைக்கழகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், ‘ஆஸ்திரேலியா கண்டத்தில் 300 முதல் 700 மொழிகள் வரை பேசப்பட்டு வந்ததாகத் தெரிகிறது.
2006ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி மொத்தமே 232 பேரால் மட்டுமே பேசப்பட்டது நூங்கார் மொழி. நூங்கார் சமூகத்தைச் சேர்ந்தவராக கைலி இருந்தாலும் அவருக்கு அந்த மொழியைப் பேசத் தெரியாது. 13 வயதில் தன் தாத்தாவை இழந்த கைலி, பாட்டியுடன் நேரத்தைச் செலவழித்தார். அப்போதுதான் தன் பூர்வீக மொழியின் மீது அவருக்கு ஆர்வம் ஏற்பட்டது. உடனே அதை கற்றுக்கொள்ள முயற்சி செய்தார். ஆனால், சிறு வயதிலேயே தோட்ட வேலைக்காக குடும்பத்தை விட்டுச் சென்று விட்ட அவரது பாட்டிக்கும் நூங்கார் மொழி பேசத் தெரியவில்லை.
தளராமல் தொடர்ந்து முயற்சி செய்த கைலி, பாட்டியின் சகோதரிகளைச் சந்தித்து அவர்களிடம் உரையாடத் தொடங்கியுள்ளார்.“10 ஆண்டுகளுக்கு முன், நூங்கார் மொழியில் டப் செய்யப்பட்ட திரைப்படம் வெளியிடப்படும் என்று என்னிடம் யாராவது சொல்லி இருந்தால் நானே சிரித்திருப்பேன். ஆனால், இன்று நானே அதை செய்திருக்கிறேன்! என் வேர்களைப் பற்றித் தெரிந்துகொள்ளும் முயற்சியாகவே இதை தொடங்கினேன். நாட்கள் செல்லச் செல்ல அது எனக்குள் முழுவதுமாக இறங்கிவிட்டது.
இயல்பிலேயே நான் ஒரு புரூஸ் லீ ரசிகை. அவர் படத்தை முதலில் டப் செய்ய வேண்டும் என முடிவு செய்தேன். எங்கள் மொழிக்கென்று ஒரு தன்மை இருக்கிறது. அதை அவர் படத்தின் மூலம் கொண்டுவர முடியும் என நினைத்தேன். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டியிருந்தது. என் குழுவுடன் மாதக்கணக்கில் வேலை செய்து இந்தப் படத்தை டப் செய்திருக்கிறோம். என் மொழியை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல திடைப்படங்கள் தவிர வேறு நல்ல கருவி இருப்பதாகத் தெரியவில்லை. எனவே அதை தொடர்ந்து செய்வேன்...” என்கிறார் கைலி.













