தனக்பூர் மற்றும் டில்லி இடையே பூர்ணகிரி ஜன் சதாப்தி ரயில் சேவை புதனன்று டில்லியிலிருந்து புறப்பட்டது. மாலை தனக்பூரை நெருங்கிக்கொண்டிருந்த வேளையில் மாடு ஒன்று தண்டவாளத்தின் குறுக்கே வந்துள்ளது. அதன் மீது ரயில் மோதியது. விபத்தின் காரணமாக ஓட்டுநர் ரயிலை நிறுத்தியுள்ளார். ஆனால் அப்பகுதியில் உள்ள தண்டவாள பாதை சாய்வானதாக இருந்ததால் ரயில் பின்னோக்கி நகர்ந்துள்ளது. ரயிலை நிறுத்த முயன்ற போதும் நிற்கவில்லை. அழுத்த குழாய்களில் ஏற்பட்ட கசிவினால் பிரேக் பழுதடைந்தது.
நீண்ட நேரமாக ரயில் பின்னோக்கி நகர்வதை கண்ட பயணிகள் பதற்றத்திற்கு உள்ளாகினர். ஓட்டுநர் உடனடியாக அருகே உள்ள ரயில் நிலையங்களுக்கும், லெவல் கிராசிங்குகளுக்கும் தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரயில் வரும் வழியில் உள்ள கேட்டுகள் மூடப்பட்டன. கோஷிகுவான் என்ற கிராமத்தில் ரயிலை நிறுத்த அதிகாரிகள் முயன்றுள்ளனர். அதற்குள் ரயில் பான்பாசா மற்றும் சக்கர்பூர் ரயில் நிலையங்களைக் கடந்தது.
பிறகு ஒருவழியாக தண்டவாளத்தில் மணலை கொட்டி காதிமா ரயில் நிலையத்துக்கு முன்பாக வண்டியை நிறுத்தினர். நிம்மதி பெருமூச்சு விட்ட பயணிகளை, பத்திரமாக பஸ்களில் ஏற்றி தனக்பூருக்கு அனுப்பி வைத்தனர்.













