அமெரிக்காவில், 'எச் - 1பி' விசா உள்ளிட்ட, வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாக்களுக்கு, முன்னாள் அதிபர் டிரம்பால் விதிக்கப்பட்ட தடையை திரும்பப்பெற வலியுறுத்தி, தற்போதைய அதிபர் ஜோ பைடனை, செனட்டர்கள் வலியுறுத்திஉள்ளனர்.
அமெரிக்காவில் தங்கி பணிபுரியும் வெளிநாட்டு தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு, எச் - 1பி விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதனால், இந்திய தொழில்நுட்ப வல்லுனர்கள், அதிக அளவில் பயனடைந்து வந்தனர். இந்நிலையில், கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் நெருக்கடியால், எண்ணற்ற அமெரிக்கர்கள், வேலைகளை இழந்து பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
தன் நாட்டு இளைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, அப்போதைய அதிபர் டொனால்டு டிரம்ப், எச் - 1பி விசா வழங்கும் நடைமுறைகளில், பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தார். அப்போது, வெளிநாட்டினருக்கு வழங்கப்படும், எச் - 1பி, எல் - 1, எச் - 2பி, ஜே - 1 போன்ற விசாக்களை வினியோகிப்பதற்கு, தற்காலிக தடையும் விதித்தார். இந்த தடைகளால், இந்தியர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
மேலும், வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்த இயலாமல், அமெரிக்க நிறுவனங்களும் சிரமத்திற்கு உள்ளாகின. இந்த கட்டுப்பாடுகள் தொடர்ந்தால், தங்கள் வணிகம் முற்றிலும் முடங்கலாம் என அந்த நிறுவனங்கள் அஞ்சுகின்றன. டிரம்ப் விதித்த அந்த தடை, வரும், 31ம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது.
எச்1பி விசா தடை உத்தரவை திரும்பப்பெற, தற்போதைய அதிபர் ஜோ பைடனை, ஆளும் ஜனநாயக கட்சியின் செனட்டர்கள் வலியுறுத்தி உள்ளனர்.













