கடந்த 19ம் தேதி கேரள தேவாலயத்தின் கீழ் உள்ள கான்வென்ட்டை சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகள், அங்கு பயிற்சி பெறும் இரண்டு பெண்கள் டில்லியில் இருந்து ஒடிசாவின் ரூர்கேலாவுக்கு உத்கல் எக்ஸ்பிரஸில் சென்றனர். ஜான்ஸி ரயில் நிலையத்திற்கு வந்தபோது அந்த ரயிலில் பயணித்த பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த சிலர், ‛‛அந்த இரண்டு பெண்களையும் கன்னியாஸ்திரிகள் மத மாற்றம் செய்ய அழைத்துச் செல்கிறார்கள் எனக் கூறி அவர்களைத் அவமானப்படுத்தியதாகவும், ரயிலில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கி விட்டதாகவும் தெரிகிறது. இதுப்பற்றி விசாரித்த ரயில்வே போலீசார், கன்னியாஸ்திரிகள் மீது எந்த தவறும் இல்லை என்பதை உறுதி செய்து, அவர்களை பாதுகாப்பாக வேறு ஒரு ரயிலில் அனுப்பி வைத்துள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆனது.
இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது. சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேரள கத்தோலிக்க பிஷப் கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. அதோடு கேரள முதல்வர் பினராயி விஜயனும் இந்த சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், இந்தச் சம்பவம் சர்வதேச அளவில் நமது தேசத்தின் நன்மதிப்பையும், பாரம்பரியமான மத சகிப்புத்தன்மை, வழிபாடு ஆகியவற்றின் மதிப்பையும் கெடுத்துவிடும். இதற்கு உச்சபட்ச கண்டனத்தைத் தெரிவித்து மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் டுவிட்டரில் தேசிய அளவில் டிரெண்ட் ஆனது. #Nuns, #BajrangDal உள்ளிட்ட ஹேஷ்டாக்குகளில் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இதுவும் ஒரு வகையிலான மதத்தின் பேரிலான வன்முறை சம்பவம் தான். இதுபோன்று செய்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.













