வாட்ஸ்ஆப் நிறுவனம் கடந்த வாரம் புதிய பிரைவசி கொள்கைகளை அறிவித்தது. அதனை ஏற்றுக்கொண்டால் மட்டுமே வாட்ஸ் ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என்பதை கட்டாயமாக்கியது. புதிய பிரைவசி கொள்கையின் படி வாட்ஸ்ஆப் தகவல்கள் பேஸ்புக் நிறுவனத்திற்கு வணிக நோக்கத்திற்காக பகிரப்படும். இதனால் வாட்ஸ்ஆப் அனைத்து உரையாடல்களையும் ஒட்டுக்கேட்குமோ என்ற அச்சம் எழுந்தது. உலகளவில் பல பயனர்கள் இதனை எதிர்த்தனர். இதனால் கோடிக்கணக்கானோர் டெலிகிராம் மற்றும் சிக்னல் செயலிக்கு மாறினர்.
அதன் பிறகு வதந்திகளுக்கு விளக்கம் அளிப்பதாக வாட்ஸ்ஆப் சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில் என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன் மூலம் உங்கள் தனிப்பட்ட மெசேஜ்களை 100% தொடர்ந்து பாதுகாப்போம் என்று கூறியுள்ளது. “வாட்ஸ்ஆப் அல்லது பேஸ்புக்கால் உங்கள் தனிப்பட மெசேஜ்கள் அல்லது அழைப்புகளை பார்க்க முடியாது. அந்த தகவல்களை நாங்கள் சேமிப்பதில்லை. உங்கள் தொடர்புகளை பேஸ்புக்கிற்கு பகிர மாட்டோம். வாட்ஸ்ஆப் குழுக்களும் தனிப்பட்டதாகவே தொடரும். பகிரப்படும் இருப்பிடங்களையும் வாட்ஸ்ஆப் அல்லது பேஸ்புக்கால் பார்க்க முடியாது.” என்று கூறியுள்ளது.
இந்த நிலையில் காங்., எம்.பி., சசி தரூர் தலைமையிலான பார்லி., தகவல் தொழில்நுட்ப நிலைக்குழு வரும் வாரங்களில் பேஸ்புக் அதிகாரிகளை அழைத்து விளக்கம் கேட்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரைவசி பிரச்னை பற்றி திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி., மஹுவா மொய்த்ரா "என்ட் டூ என்ட் என்கிரிப்ஷன் என்றால் அதனை எப்படி வாட்ஸ்ஆப் வேறொருவருக்கு பகிர முடியும்" என்று கேட்டுள்ளார். அதே போல் டுவிட்டருக்கும் சம்மன் அனுப்ப உள்ளனர்.













