முகக் கவசத்தில் மட்டுமல்ல; லிப்ஸ்டிக்கிலும் ஸ்மார்ட் தொழில்நுட்பம் வந்துவிட்டது. அழகுக்கலை பொருட்களை தயாரித்து வரும், 'லோ ரியால்' நிறுவனம், ஸ்மார்ட் லிப்ஸ்டிக் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது.
வழக்கமாக, நாம் ஒவ்வொரு கலர் லிப்ஸ்டிக்கையும் தனித்தனியாக வாங்க வேண்டியதிருக்கும். எங்கே செல்வ தென்றாலும், கொண்டு செல்லும் ஆடைகளுக்கு ஏற்ப, கை நிறைய லிப்ஸ்டிக்குகளை கொண்டு செல்ல வேண்டியதிருக்கும். ஆனால், இந்த சாதனத்தின் மூலம் அந்த சிரமம் இல்லாமல் ஆக்கப்பட்டிருக்கிறது.
இந்த சாதனம், செயற்கை நுண்ணறிவுடன் செயல்படுகிறது. இதனால், இந்த ஒரு சாதனம் இருந்தால் போதுமானது, நமக்கு என்ன கலர் தேவையோ அந்த கலரை, தேர்வு செய்து பயன்படுத்திக் கொள்ள முடியும்.
கிட்டத்தட்ட, பெயின்ட் நிறுவனங்கள் நமக்கு தேவையான கலரை, அடிப்படை கலர்களிலிருந்து தானாகவே கலந்து தருமே, அது போன்ற தொழில்நுட்பம்தான். இதில் இருக்கும் அடிப்படையான மூன்று வண்ண கேட்ரிஜ்களில் இருந்து, நாமே நமக்கு தேவையான கலரை தயார் செய்து கொள்ள முடியும்.
வண்ணங்களை தேர்வு செய்ய, இதற்கென இருக்கும் செயலியை, போனில் தரவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். பேட்டரியில் இயங்கும் இதில், ஒரு வாரம் வரை பேட்டரி தாக்குப் பிடிக்கும். சார்ஜ் ஏற்றிக்கொள்ளலாம். புளுடூத் வசதி கொண்ட இதன் விலை, கிட்டத்தட்ட ரூ.25000. கூடுதலாக, மூன்று கலர் கேட்ரிஜ் செட்டின் விலை, ரூ.7,500













