இன்று #ஆடி மாதம் #திருவாதிரை திருநாள். ஈசனுக்குகந்த இந்நன்னாளிலே தான் மாமன்னன் முதலாம் ராஜராஜ சோழருக்கும், வானவன் மாதேவி எனும் திரிபுவனமாதேவிக்கும் தமிழகத்தில் மட்டுமல்லாது பாரத தேசம் ஒட்டு மொத்தத்திற்கும் ஒப்பற்ற சிறந்த பேரரசனாக விளங்கிய மதுராந்தக தேவர் எனும் நாமகரணம் சூட்டப்பெற்ற ராஜேந்திர சோழர் பிறந்தார். நீண்ட நாட்களாக மார்கழி திருவாதிரை எனக் கருதி வந்த கூற்றை உறுதியான ஆதாரமான #திருவாரூர் கல்வெட்டைக் கொண்டு அவர் பிறந்தது ஆடிமாத திருவாதிரை தான் என நிறுவிய வரலாற்றாய்வாளர் திரு.குடவாயில் பாலசுப்பிரமணியன் ஐயா அவர்களுக்கு நன்றி கூறுதல் இத்தருணத்தில் சரியானதாக இருக்கும். இத்தகைய சிறப்பான நாளிலே ராஜேந்திர சோழர் பெற்ற எண்ணற்ற போர் வெற்றிகளை சுருக்கமாக இங்கு காண்போம்.
ராஜேந்திர சோழரின் போர் வெற்றிகள்
..........................................................................
1012ம் ஆண்டு இளவரசராக பட்டம் சூட்டப்பட்ட ராஜேந்திர சோழரது இரண்டாம் மூன்றாம் ஆட்சியாண்டு கல்வெட்டுகள் கிடைத்தாலும் 'திருமன்னி வளர' எனத் தொடங்கும் அவரது மெய்க்கீர்த்தியுடைய கல்வெட்டுகள்அவரது ஐந்தாம் ஆண்டு முதல் தான் கிடைக்கப் பெறுவதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அவரது போர் வெற்றிகள் அந்த ஐந்தாம் ஆண்டுக் கல்வெட்டுகளில் தொடக்கம் பெற்று தொடர்ச்சியான போர் வெற்றிகளால் ஒவ்வொரு ஆண்டும் வளர்ந்துக் கொண்டே செல்வதை காணலாம். ஆனி அக்கல்வெட்டுகளின் வரிசைப்படியே அவரது போர் வெற்றிகளை ஒவ்வொன்றாகப் பார்க்கலாம்.
1. இடைதுறை நாடு
-----------------------------------
#இடைதுறைநாடு என்பது கிருஷ்ணா, துங்கபத்திரை நதிகளுக்கு இடைபட்ட நாடாகும். தற்போதைய கர்னாடக மாநிலம் ரெய்ச்சூர் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய இப்பகுதி அன்றைய மேலைச் சாளுக்கிய நாட்டின் பகுதியாக இருந்துள்ளது. இடைதுறை நாட்டை வென்றதையே ராஜேந்திரர் போர் வெற்றிகளில் முதலாவதாக அவரது மெய்க்கீர்த்தியில் காண்கிறோம்.
2. வனவாசி
---------------------
#வனவாசி என்பது பனவாசி எனும் பெயரில் உத்தரகன்னட மாவட்டத்தில் திகழும் ஊராகும். இதுவும் மேலை சாளுக்கியர் ஆளுகைக்குட்பட்ட நாடாக இருந்திருக்க வேண்டும். வனவாசி பன்னீராயிரம் எனக்குறிப்பிப்படும் இப்பகுதியே ராஜேந்திரரின் இரண்டாவது வெற்றியாக குறிப்பிடப்படுகிறது.
3. கொள்ளிப்பாக்கை
-------------------------------------
கடும் மதில் அரண்களை பெற்றிருந்ததைக் குறிக்கும் வகையில் 'சுள்ளி சூழ்மதில் கொள்ளிப்பாக்கை' எனக் குறிப்பிடப்படும் பெரிய நகரம் மேலை சாளுக்கிய மன்னன் மூன்றாம் சோமேஸ்வரன் காலத்தில் சாளுக்கியரின் தலைநகரமாக இருந்த பகுதியாகும். ராஜேந்திரரின் மூன்றாவது பெரும் போர் வெற்றி #கொள்ளிப்பாக்கை வெற்றியாகும்.
4. மண்ணைக்கடக்கம்
-------------------------------------
இராஷ்டிரக்கூடர்களின் தலைநகரமாக இருந்திட்ட #மானியகேடம் எனும் நகரே #மண்ணைக்கடக்கம் என்பதாகும். தற்சமயம் மால்கெட் என அழைக்கப்படும் இவ்வூர் கர்னாடக மாநிலம் குல்பர்க்கா மாவட்டம் காகினா ஆற்றங்கரையில் திகழ்வதாகும்.
5. இலங்கை
---------------------
ராஜராஜர் காலத்திலேயே பாதிக்கும் மேற்பட்ட இலங்கை பகுதிகள் சோழர் வசம் வந்தாலும் மலைகள் சூழ்ந்த ரோகண நாட்டுப் பகுதிகள் கைப்பற்ற முடியாமல் இருந்தது. அந்தக் குறையும் ராஜேந்திரர் காலத்தில் தீர்க்கப்பட்டு #இலங்கை முழுதும் சோழர் ஆட்சிக்குட்பட்டது.
இலங்கை வெற்றியில் சிறப்பாகப் போற்றப்பட வேண்டிய மற்றொரு விஷயம் பராந்தகர் காலம் முதலே முயன்றும் முடியாமலிருந்த ஒரு விஷயம் ராஜேந்திரர் காலத்தில் வெற்றிக்கரமாக முடிவுக்கு வந்தது. சோழர்களுக்கு அஞ்சி ராஜசிம்ம பாண்டியன் என்பவனால் இலங்கை மன்னன் நான்காம் தப்புலனிடம் ஒப்படைக்கப்பட்டிருந்த புராதனமான பாண்டியர்களின் #சுந்தரமுடியும் #இந்திரன்ஆரமும் ராஜேந்திரரால் வெற்றிகரமாகக் கைப்பற்றப்பட்டது. ராஜேந்திரரின் ஐந்தாவது ஆட்சியாண்டிலேயே இப்பெருமைமிகு வெற்றியும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
6. கேரள மற்றும் பழந்தீவு வெற்றிகள்
--------------------------------------------------------------
கேரள பகுதியை ஆட்சிப்புரிந்து வந்த சேரர்களை வென்று ராஜேந்திரர் அவர்களது பெருமைமிகு சின்னங்களான மணிமுடியையும், சிவப்பு ரத்தினக் கற்கள் பதிக்கப்பபுப்ப மாலையையும் பெற்றார். அத்துடன் மிகுந்த பாதுகாப்புடையதாகக் கருதப்படும் பழந்தீவு பகுதிகள் சோழர் வசமாயிற்று. குமரிக்கு தென்திசையில் அமைந்துள்ள மாலத்தீவுகளே #பழந்தீவு என அழைக்கப்படுவதாக ஆய்வாளர் கருதுகின்றனர்.
7. சாந்திமத்தீவு
---------------------------
ராஜேந்திரரின் ஏழாம் ஆண்டுக் கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் மற்றுமொரு பகுதி சாந்திமத்தீவு ஆகும். வலிமையான கடற்படையை கொண்டிருந்த ராஜேந்திரர் ' அலைகடல் மீது பலகலம் செலுத்தி' சேரர் வசமிருந்த #சாந்திமத்தீவினை வென்று பரசுராமரது அரசமுடியென்று காலங்காலமாக சேரர்களால் பாதுகாக்கப்பட்ட புராதனமான பொன்முடியை வெற்றிச்சின்னமாக கைப்பற்றினார் ரராஜேந்திர சோழர். தற்சமயம் அரபிக்கடல் பகுதியில் உள்ள இலட்சத்தீவுகளே சாந்திமத்தீவு பகுதிகள் என ஆய்வாளர் கருதுகின்றனர்.
8. இரட்டபாடி ஏழரையிலக்கமும்
-----------------------------------------------------
மேலை சாளுக்கிய மன்னன் சயசிங்கன் என்பவனை வென்று #இரட்டபாடிஏழரையிலக்கம் எனும் பகுதியையும் பெரும் செல்வத்தையும் கைப்பற்றினர் சோழர்கள்.இப்பெரும்போர் நடந்த முசங்கி எனும் இடம் கர்னாடக மாநிலம் தாவன்கிரி மாவட்டம் ஹர்பனஹல்லி வட்டத்திலுள்ள #உச்சங்கிதுருக்கம் எனும் பகுதி என்பது ஆய்வாளர் கருத்தாகும்.
ராஜேந்திரரின் ஒன்பதாவது ஆட்சியாண்டில் பெற்ற இவ்வெற்றிக்குப் பின் அவர் தஞ்சைக்கு திரும்புவதை திருவாலங்காடு செப்பேடு விளக்குகிறது. ராஜேந்திரரின் பதினொராவது ஆட்சியாண்டு வரை இவ்வெற்றிகளே குறிக்கப்படுகின்றன. வென்ற பகுதிகளை ஸ்திரப்படுத்திவிட்டு அதே வேகத்துடன் மேலும் படைகளை பெருக்கி முழு வலிமையுடன் தன்னுடைய பதினொராவது ஆட்சியாண்டில் வடபுல படையெடுப்புகளை தொடங்குகிறார் சக்கரவர்த்தி ராஜேந்திர சோழர். வடபுல படையெடுப்பில் முன்னிலை வகிப்பது ராஜேந்திரரின் வீரப்புதல்வர்களும் அனுபவம் வாய்ந்த ராஜராஜ மாராயன் போன்ற தளபதிகளுமே.
தன் தோள்வலிமையால் கங்கை நீரை தன் நாட்டுக்கு கொண்டு வரும் எண்ணமே வடபுல படையெடுப்புக்கு முக்கிய காரணமென்று திருவாலங்காடு செப்பேடு கூறுகிறது. வடபுல போர்களில் பெற்ற பெரும் வெற்றிகளை இனி காண்போம்.
9. சக்கரக்கோட்டம்
--------------------------------
#சக்கரக்கோட்டம் எனும் ஊர் தற்போதைய சட்டீஸ்கார் மாநிலத்தில் பஸ்தார் மாவட்டத்தில் உள்ள சித்திர கூடம் (Chitra kutt) எனும் நகரே என்று ஆய்வாளர் கருதுகின்றனர்.அந்நாட்டிலிருந்தோரை விக்கிரம வீரர் என ராஜேந்திரர் மெய்க்கீர்த்தி கூறுகின்றது. அவர்களை சோழப்படைகள் வெற்றிக் கொள்கின்றன.
10. மதுரை மண்டலம்
-------------------------------------
பீகார் மாநிலத்தில் உள்ள மதுரா எனும் பகுதியாகவோ ஜார்கண்ட் மாநில பகுதியாகவோ #மதுரைமண்டலம் இருக்கலாம் என ஆய்வாளர் கருதுகின்றனர்.
11. நாமனைக்கோனை
----------------------------------------
'காமிடை வளை நாமனைக் கோனை' என மெய்க்கீர்த்தி கூறும் #நாமனைக்கோனை சட்டீஸ்கர் அல்லது ஜார்கண்ட் மாநிலத்துக்குட்பட்ட பகுதியாக தற்போது இருக்கலாம்.
12. பஞ்சப்பள்ளி
----------------------------
'வெஞ்சின வீரர் பஞ்சப்பள்ளி' என பகை வீரர்களின் வீரத்தையும் பெருமையுடன் குறிப்பிடப்படும் தற்போது ஜகத்சிங்காபூர் என அழைக்கப்படுகிறது.
13. மாசுனி தேசம்
--------------------------------
நாகர் மரபினர் ஆண்ட #மாசுணிதேசம் தற்போதைய சட்டீஸ்காரர் மாநில பகுதியாகும்.
14. ஆதிநகர்
------------------------
இந்திரரதன் எனும் மன்னனை பெரும்போருக்குப் பின் வென்ற சோழப்படைகள் #ஆதிநகரில் வெற்றிக் கொடி நாட்டியது. தற்போதைய ஒடிசா மாநிலத்தின் கான்ஜம் மாவட்டப்பகுதியாக இருக்கலாமென கருதப்படுகிறது.
15. ஒட்டவிஷயம்
--------------------------------
அணுக இயலாத காவலையுடைய #ஒட்டவிஷயம் எனும் நாட்டை வென்றது அடுத்த வெற்றியாக ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியில் குறிக்கப்படுகிறது. இது தற்போதைய ஒடிசா மாநிலத்தின் வடக்கு மற்றும் தெற்குக் பகுதியாகும்.
16. கோசலைநாடு
--------------------------------
'பூசுரர் சேர்நல் கோசலை நாடு' அதாவது பிராமணர் மிகுந்த #கோசலை நாட்டைக் கைப்பற்றியது அடுத்த வெற்றியாகும். தற்போதைய ஒடிசாவின் கிழக்கு மற்றும் ஜார்கண்ட் பகுதிகளை உள்ளடக்கிய நாடாகும்.
17. தண்டபுத்தி
----------------------------
மகாநதிக்கு கிழக்காகவும், பாகீரதி(ஹூக்ளி) நதிக்கு மேற்காகவும், வங்கக் கடலுக்கு வடக்காகவும் திகழ்ந்த நாடே #தண்டபுத்தி ஆகும். தர்மபாலன் எனும்அரசனை வென்று தண்டபுத்தியை ஆட்கொண்டது சோழப்பெரும்படைகள்.
18. தக்கணலாடம்
-------------------------------
அடுத்ததாக 'திக்கணைகீர்த்தி தக்கணலாடம்' எனக் குறிப்பிடப்படும் #தக்கணலாடம் நாட்டின் அரசன் இரணசூரன் என்பவனை வென்றன ராஜேந்திரரின் வீரப்படைகள்.
19. வங்காள தேசம்
---------------------------------
வடபுல படையெடுப்புகளிலே மிகக்கடுமையான போராகக் கடினமான வெற்றியாகக் கருதப்படுவது வங்காள தேசத்தின் மாமன்னர் மகிபாலனை வெற்றிக் கொண்டதேயாகும். கோவிந்தசந்தன் என்று குறிப்பிடுப்படும் மகிபாலனை வென்று #வங்காளதேசத்தை ராஜேந்திர சோழருக்குக் கீழ் பணிய வைத்தன மாபெரும் சோழப்படைகள். பெரும் செல்வங்களையும், யானைகளையும், குதிரைகளையும், வெற்றிச் சின்னங்களாக பாலர் மரபு சிலைகளையும் கைகக்கொண்டனர் சோழர்கள்.
20. உத்திரலாடம்
--------------------------------
வங்கதேசத்தை வென்ற பின்பு கங்கை நீரை எடுப்பதற்காக இறுதியாகக் கைப்பற்றிய நாடு தான் #உத்திரலாடம் ஆகும்.
21. ஒட்டரதேசம்
------------------------------
சோழப்படைகள் கங்கை நீரை எடுக்கும் அதே சமயத்தில் புண்ணிய நதியான கோதாவரியில் நீராடிய ராஜேந்திரர் கிழக்கு நோக்கிச் சென்று வெற்றியுடன் திரும்பும் தனது தண்டநாயகனை வரவேற்கச் சென்றார். அப்போது ஒட்டர தேசத்தின் மன்னர் தனது தம்பியுடன் வந்து சமர்புரிய அவர்களை வென்று ஒட்டர தேசத்தின் மகேந்திரகிரியில் ஜயஸ்தம்பம் நாட்டினார் ராஜேந்திர சோழர்.
அலைகடலில் பலகலம் செலுத்தி வென்ற நாடுகள்
-------------------------------------------------------------
22. கடாரம்
------------------------
#கடாரம் நாட்டின் மன்னனான சங்கிராம விஜயோத்துங்கனை வென்ற ராஜேந்திரரின் தண்டநாயகன் பெருஞ்செல்வம், பட்டத்து யானை, அரண்மனை தோரண வாயில், கலையழகுள்ள நிலைவாயில் போன்றவற்றை கைக்கொண்டான்.
23. ஸ்ரீவிஜயம்
--------------------------
தற்போதைய இந்தோனேஷிய நாட்டின் சுமத்ரா பகுதியான #ஸ்ரீவிஜயம் அடுத்து வெல்லப்பட்ட நாடாகும்.
கடல்கடந்து சோழ.படைகள் ராஜேந்திரர் ஆணைப்படி வென்ற மற்ற நாடுகள் பின்வருமாறு.
24. பண்ணை
25. மலையூர்
26. மாயிருடிங்கம்
27. இலங்காசோகம்
28. மாபப்பாளம்
29. இலிம்பங்கம்
30. வளைப்பந்தூர்
31. தக்கோலம்
32. மாதமலிங்கம்
33. இலாமூரிதேசம்
34. மானக்காவரம்
என்ன நண்பர்களே படிக்கவே மூச்சு முட்டுதா..? அனைத்து நாடுகளையும் அனாயசமாக வெற்றிக் கொண்டு தோல்வி என்பதையே அறியாது சாதித்த ராஜேந்திர சோழர் புகழை நாம் மட்டுமல்ல உலகமே போற்ற வேண்டும். உலகின் எந்த பேரரசனுக்கும் சளைத்தவனில்லை நம் ராஜேந்திரன். உண்மையில் அனைவரை விடவும் சிறந்தவன் என்பதையுணர்ந்து அவர் புகழ் அனைவரும் அறிய பரப்புவோம்...
இனியபிறந்தநாள்நல்வாழ்த்துகள் மாமன்னர் ராஜேந்திர சோழரே!
உங்கள் புகழ் உலகம் உள்ள வரை நீடித்திருக்கும்.













