திருவாரூர் திருவாரூர் மாவட்டம் குடல்வாசல் அருகில் உள்ளது இத்தலம். இத்தலத்து மூலவர் பாம்புரநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
இத்தலத்திற்கு சேஷபுரம் என்று பெயர் சொல்லப்படுகிறது.
ஒருமுறை ஆதிசேஷனுக்கும் வாயுவுக்கும் போர் ஏற்பட்டது. வாயு பகவான் காற்றை நிறுத்த சகல உயிர்களும் மூச்சுத் திணறின. தேவர்கள் ஆதிசேஷனையும் வாயுவினையும் போரினைக் கைவிடும்படி கேட்டுக் கொண்டனர்.
ஆதிசேஷன் போரிலிருந்து விலகி இத்தலத்திற்கு வந்து சிவபூஜை செய்து வழிபட்டார். இதனால் மூலவருக்கு சேஷபுரீஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது. ஊர் சேஷபுரம் என்றும் அழைக்கப்பட்டது.
இன்னொரு தலபுராணம்
ஒரு சமயம் கயிலாயத்தில் பார்வதியும் சிவபெருமானும் அமர்ந்திருந்த சமயத்தில் அங்கு வந்த விநாயகப் பெருமான¢ பெற்றோருக்கு வணக்கம் தெரிவித்தார்.
தனக்கும் சேர்த்துதான் இந்த வணக்கம் என்று சிவபெருமான¢ கழுத்திலிருந்த நாகம் கர்வம் கொண்டு தலையை அசைத்தது.
இதனால் நாக இனம் முழுவதும் தன் சக்தியை இழக்கட்டும் என்ற சாபம் பெற்றது.
சக்தியை இழந்த நாகங்கள், ஆதிசேஷன் தலைமையில் ஒன்று திரண்டன. வாசுகி, கார்கோடகன், தட்சகன், அனந்தன், சங்கபாலன், குலிகள், பத்மன், மகாபத்மன் என்ற நாகங்களும் இந்தக் கூட்டத்தில் இருந்தன.
அவை அனைத்தும் சிவபெருமானைச் சென்று வணங்கி நாகம் செய்த தவற்றை மன்னித்து விடுங்கள் என்று வேண்டிக் கொண்டன.
ஒருநாகம் செய்த தவறுக்காக எங்கள் அனைவரையும் தண்டிப்பதா என்று இறைஞ்சினர்.
சிவபெருமான் கருணை கொண்டு, திருபாம்புரம் தலத்திற்கு சிவராத்திரியன்று சென்று வழிபாடு செய்யுங்கள், சாபவிமோசனம் கிடைக்கும் என்று அருள் புரிந்தார்.
அனைத்து நாகங்களும் அவ்வாறே சாபநிவர்த்தி அடைந்தன.
நாகங்கள் வந்து வழிபட்ட இத்தலத்திற்கு வந்து மக்கள் வழிபாடு செய்தால் நாகதோஷம், காலசர்ப்பதோஷம், ராகு, கேது தோஷம் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கை.













