கொரோனா காலத்தில் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிய பாரி வள்ளல்கள்!

SOCIAL SHARE
Pin It

I.A.B முன்னால் மாணவர்கள் சங்கம்

மதுரையிலுள்ள இந்திய பார்வையற்றோர் சங்கத்தில் படித்த முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து பணம் திரட்டி அங்கு படித்த ஏழை பார்வை மாற்றுத்திறனாளி குடும்பங்களுக்கும், வேலை தேடிக் கொண்டிருக்கும் தங்கள் நண்பர்களுக்கும் உதவியிருக்கின்றனர். அவர்கள் இது வரை 160 பயனாளிகளுக்கு உதவியிருக்கின்றனர். நான் ஒரு மாற்றுத்திறனாளி என்று கூறிக் கொள்வதில் எனக்குத் தயக்கம் இல்லை.

காரணம், எந்த மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் எங்களுக்குள் ஒரு வலைப்பின்னல் இருக்கும். யாரையாவது தொடர்பு கொள்ள வேண்டும் என்றாலோ, யாரைப் பற்றியாவது தகவலைத் தெரிந்துகொள்ள விரும்பினாலோ எங்களால் முடியும்.

 

அகவிழிதர்ம அறக்கட்டளை. சேலம்:

“எங்கள் அறக்கட்டளை மூலமாக, கொரோனா ஊரடங்கால் தங்களது வாழ்வாதாரத்தை இழந்த மதுரை, சிவகங்கை, சேலம், கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 120 பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு 200000 ரூபாய் அளவிற்கு உதவிகளைச் செய்துள்ளோம். அடுத்த கட்டமாக உதவ நன்கொடையாளர்களைத் தேடிக் கொண்டிருக்கிறோம். அதுமட்டுமல்லாது, பார்வையுள்ள ஏழை எளியவர்களுக்கும் சில அரசியல்வாதிகள் மூலம் உதவி கிடைக்கச் செய்துள்ளோம்” என்கிறார் அறக்கட்டளையின் நிர்வாகி திருமதி. உமாமகேஷ்வரி.

 

நாமக்கல் மாவட்டம் ராசி புரம் அருகில் 47 வயது மதிக்கத்தக்கப் பெண். அவருக்குப் பார்வை இல்லை; வாய் பேச முடியாது; அப்படியென்றால் காதும் கேட்காது; கால்களில்லை. என்ன? படிக்கிற உங்களுக்குப் பள்ளிக்கூடத்தில் படித்த ஹெலன்கெலர் ஞாபகத்திற்கு வருகிறாரா? அவரை நாம் நேரில் பார்த்தது கிடையாது. ஆனால் இப்பெண்மணியை நேரில் கண்டவர்கள் உண்டு. பாத்திரம் விலக்க பயன்படுத்தும் பொடியைப் பாக்கேட் போடுவதுதான் இவரது தொழில். இதன்மூலம் ஒரு நாளைக்கு 150 ரூபாய் சம்பாதிக்கிறார். இவரது கணவர் இவரைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இருந்தபோதும், தன் மகளைக் கல்லூரிவரை படிக்கவைத்துத், திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். இவருக்கு இந்த அறக்கட்டளை மூலம் உதவச் சென்ற திரு. ரஜினிகாந்திடம்டம் பேசிய போது, ‘என்னால் அவரிடம் பேச இயலவில்லை. ஏனெனில், பார்வைமாற்றுத் திறனாளியான நான் செவித்திறன் குறையுடைய அவரோடு எப்படித் தொடர்புகொள்வது. இருந்தாலும் அவருக்கு உதவியதை விட அவர் எங்களை ஆச்சரியப்படுத்திவிட்டார். அவர் தவழ்ந்து சென்று எங்களுக்கு எலுமிச்சை ஜூஸ் போட்டுக் கொடுத்து எங்களை உபசரித்தது எங்களுக்கு நெகிழ்ச்சியாக இருந்தது” என்றார். தமிழர்கள் எவ்வளவு கஷ்டத்தில் இருந்தாலும் உதவும் மனப்பான்மையும், உபசரிக்கும் பண்பாடும் இன்னும் நம்மை விட்டுப் போகவில்லை என்பதற்கு இந்த நிகழ்வுகளே சாட்சி.

 

அன்பாலயம் பள்ளி முன்னாள் மாணவர்கள் குழு-கரூர்

இந்த ஊரடங்குக் காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் வாழ்க்கை நம்முடைய மனதை உறைய வைத்தாலும் அவர்களது பிஞ்சுக் குழந்தைகள் வெறும் காளோடு 200 கி.மீ. 300 கி.மீ நடந்து வருவது அந்தக் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு எவ்வளவு மன உளைச்சலைத் தந்திருக்கும் என்பதை நம்மால் நினைக்க முடியவில்லை. சேலம் அருகில் வாழ்ந்து வரும் லோகநாதன் என்பவர் ஒரு பார்வைமாற்றுத் திறனாளி. அவர் குடும்பத்தில் அவர், அப்பா, அத்தை மூவரும் பார்வைமாற்றுத் திறனாளிகள். அவருக்குத் திருமணம் ஆகி 2 குழந்தைகள் இருக்கின்றனர். அவர் குடும்பத்தை இரயிலில் கடலை மிட்டாய் விற்றுக் காப்பாற்றி வருகின்றார். அவர் தனது வியாபாரத்தை முடித்து விட்டு வீடு திரும்புகையில் அவரது 2 குழந்தைகளும் “டேய்! அப்பா வந்துட்டார்டா! அப்பா!! என்னப்பா திங்கிறதுக்கு வாங்கிட்டு வந்த? எங்கப்பா பைய காணோம்? டேய்! நான் அப்பாவைப் புடுச்சுக்கிறேன், நீ போயி வெளியில் இருக்கானு பாரு!” ஆனால் அங்கே எதுவும் இல்லை. குழந்தைகள் தனது அப்பாவின் இடுப்பில் ஏறி அமர்ந்துகொண்டு, “என்னப்பா பாக்கேட்டில் காசை காணோம்? அப்ப இன்னக்கி திங்கிறதுக்கு எதுவும் வாங்கிட்டு வல்லையா?” என்று கேட்பார்களாம். இப்படி தனது குழந்தையின் ஏக்கம் தோய்ந்த கேள்வியை எதிர்கொள்ளவேண்டிய சூழ்நிலை எந்தத் தகப்பனுக்கும் வரக்கூடாது.

 

திரு. லோகநாதனிடம் பேசிய பேராசிரியர் முருகானந்தன் அவர்கள், மே மாதம் முழுதும் இரயில் ஓடாது சார். என்று கூறியதும் மேற்கண்ட நிகழ்வினைச் சொல்லி வருத்தப்பட்டிருக்கிறார். முருகானந்தம் அவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் 50 பார்வை மாற்றுத் திறனாளிகளை அடையாளம் காட்டி அவர்களுக்கு உதவி கிடைக்கச் செய்துள்ளார். மேலும், கரூர் அன்பாலயம் முன்னாள் மாணவர்கள் மூலம் 50 பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவி செய்துள்ளார்கள்.

 

அக தீப ஒளி பார்வைமாற்றுத் திறனாளிகளுக்கான அறக்கட்டளை:

சென்னையில் உள்ள பட்டாபிராம் என்ற இடத்தில் செயல்பட்டு வரும் இந்த அறக்கட்டளை, வியாபாரம் செய்யும் பார்வைமாற்றுத் திறனாளிகள், பார்வையற்ற முதியோர்கள், கைவிடப்பட்ட பார்வையற்றோர் போன்றோருக்கு அடைக்களம் தந்து வருகிறது. இதுவரை இவர்கள் தமிழகம் முழுவதும் 660 பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு உதவியுள்ளார்கள். அனைவருக்குமே மளிகை பொருட்களாக வழங்கியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஏன் பணமாக வழங்கவில்லை என்பதற்கு இந்த அறக்கட்டளையின் தலைவர் திரு. சந்திரசேகர் கூறியதாவது:

 

திருநெல்வேலியைச் சேர்ந்த பார்வை மாற்றுத்திறனாளி பெண் திருமதி. ரேகா கணவனை இழந்தவர். இவருக்கு 2 மகன்கள். இருவரும் பள்ளியில் படிக்கின்றனர். இவர் இரயிலில் வியாபாரம் செய்துதான் தன் வாழ்வை நடத்துகிறார். ஊரடங்கால் இரயில்கள் ஓடாததால் உணவு வாங்கக்கூட பணமின்றி, 2 நாட்கள் தன்னீரை மட்டும் குடித்து வாழ்ந்திருக்கிறார்கள். இதைக் கேட்டதுமே அவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை பொருட்களைக் கிடைக்கச் செய்தோம். பணமாக அவர்கள் வங்கியில் செலுத்தினால், ஊரடங்கு காலத்தில் வங்கி அல்லது ஏ.டி.எம். செல்லவும், அதன் பிறகு மளிகை கடை செல்லவும் உதவிக்கு ஒருவரை நாட வேண்டி இருக்கிறது. அதனால்தான் மளிகை பொருட்களைக் கொடுக்கும் முடிவை எடுத்தோம். மேலும், திருமதி. ரேகாவின் மகன்களின் கல்விச் செலவை எங்களது அறக்கட்டளையே ஏற்றுக்கொண்டோம் என நம்மிடம் கூறினார்.

 

ஐரனிபுரம் பார்வையற்றோர் பழைய மாணவர்கள் குழு-நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஐரனிபுரம் பார்வையற்றோருக்கான பள்ளியைச் சேர்ந்த பழைய மாணவர்கள் ஒன்றிணைந்து அப்பள்ளியில் படித்துவிட்டு இரயிலில் வியாபாரம் செய்யும் தங்களது நண்பர்களைக் கண்டு அவர்களுக்கு உதவியுள்ளார்கள். இதுவரை 2 கட்டமாக 50 நபர்களுக்கு உதவியுள்ளார்கள். நாகர்கோவில் கூந்தங்கோடைச் சேர்ந்த சத்தியபாமா என்ற பார்வையற்ற பெண் தூத்துக்குடியில் படித்து வருகிறார். தனது அம்மாவிற்கு டயாலிஸிஸ் செய்யவேண்டிய சூழ்நிலை. அதனால் அங்கிருந்து கிளம்பி வருகின்ற தனது தாயைக் கவனித்துக்கொள்ள வேறு யாரும் இல்லை. அந்த நேரம் பார்த்து அரசு நாடு முழுவதும் ஊரடங்கை அறிவிக்கின்றது. உதவிக்கு யாரும் இல்லை. ஒரு வழியாக அவரது அம்மாவிற்கு டயாலிஸிஸ் முடிந்தது, ஆனால், இனிமேல் இவர்களுக்கான உணவு உள்ளிட்ட தேவைகளை எவ்வாறு நிறைவேற்றிக் கொள்வார்கள்? இது இவர்களுக்கு இருக்கும் பெரிய சவால். தங்களுக்கு அரசால் வழங்கப்படும் ஓய்வூதியத் தொகையைக் கூட எடுக்க வங்கிக்குச் செல்ல துணையாய் யாரும் இல்லை என்று அவர்கள் சொல்வதுதான் நம் மனதை மேலும் நெருடச் செய்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். நாடு முழுவதும் ஊரடங்கு. உணவுக்கும் வழியில்லை. சரி சில நல்ல உள்ளங்கள் வழங்கிய பணத்தை எடுத்துப் பொருட்கள் வாங்கிச் சமைக்கலாம் என்றால் வங்கிக்குச் செல்லவும் முடியவில்லை. இவ்வாறு இருக்க எப்படி அந்த அம்மாவும் அவரது பார்வையற்ற மகளும் இந்தக் காலகட்டத்தில் உயிர் வாழ முடியும்?

 

ஐரனிபுரம் வாட்சாப் குழுவின் நிர்வாகியான திரு. ரமேஷ் பானுவிடம் பேசியபொழுது அவர் கூறியதாவது: “சத்தியபாமா என்ற பெண் ‘சார் எங்களுக்குப் பணம் வேண்டாம். காரணம், எங்களால் வங்கிக்குச் சென்று எடுக்க முடியாது, இங்கிருக்கும் அம்மா உணவகத்தில் எங்களுக்கு உணவு கிடைக்க செய்யமுடியுமா?’ என்று கேட்டார். ஆனால், அவர்கள் பகுதியில் அம்மா உணவகம் இல்லை என்று வருத்தம் கலந்த குரலில் கூறினார். ‘நாங்கள் எத்தனை பேருக்கு உதவி இருந்தாலும் இந்தப் பெண்ணிற்கு உதவ முடியவில்லை என்பது எங்களது மனதை உறுத்துகின்றது” என்றார்.

 

காவேரி பூக்கள் குழுமம்:

திருச்சி அரசு பார்வையற்றோருக்கான மகளிர் பள்ளியைச் சேர்ந்த பழைய மாணவிகள் ஒன்றிணைந்து தங்கள் சக தோழிகளுக்கு உதவியுள்ளனர். தங்கள் மூலம் சுமார் 48 நண்பர்களுக்கு ரூபாய் 72000 வரை உதவியுள்ளதாக அதன் உறுப்பினர் திருமதி. கிருஷ்ணவேனி கூறினார்.

 

மேலும் அவர் கூறியதாவது: “ராமநாதபுரம், உத்திராவையைச் சேர்ந்த சத்தியகலா என்ற 40 வயது பெண் தாய் தந்தை இல்லாமல், தங்க வீடு இல்லாமல் வாழ்ந்து வருகின்றார். இவர் தனக்கு வழங்கப்படும் ஓய்வு ஊதியத் தொகையில் 700 ரூபாய் தனது அத்தையிடம் தந்துவிடுவார். மீதம் இருக்கும் 300 ரூபாயை அவரின் அன்றாடச் செலவுக்காக வைத்துக்கொள்வாராம். கிராமங்களில் வாழும் பார்வைமாற்றுத்திறனாளிகளுக்குக் கழிப்பறை என்பது அடிப்படைத் தேவையாகும். ஆனால், இங்கு இவருக்கு இத்தேவைகூட கிடைக்கவில்லை என்றால் என்ன சொல்லுவது என்பது எனக்குத் தெரியவில்லை. பெண்கள் பொதுவாகவே பாதிக்கப்படுகின்றார்கள் என்றால் அதிலும் பார்வையற்ற பெண்கள் அவர்களைவிட அதிகமாகத் தான் பாதிப்பு அடைகின்றார்கள். மேலும், “எனக்கு நீங்கள் எந்த உதவியும் செய்ய வேண்டாம். ஒரு கழிப்பறை மட்டும் கட்டித் தருவீர்களா?” என்று கேட்டார் இந்தப் பெண். இவரைப் போன்று இன்னும் எத்தனை பெண்கள் அவர்களின் கஷ்டங்களைச் சொல்லாமல் மறைத்து வாழ்ந்து வருகின்றார்கள் எனத் தெரியவில்லை”.

 

இனையத்தென்றல் அறக்கட்டளை:

முதன்முதலில் மின்னஞ்சல் குழுவாக தொடங்கிய இவ்வமைப்பு, இந்தக் கொரோனா ஊரடங்கில் பாதிக்கப்பட்ட பார்வையற்ற வியாபாரிகளுக்கு உதவியுள்ளார்கள். இதுவரை 56 நபர்களுக்கு உதவியுள்ளதாக அவ்வமைப்பின் திரு. பார்த்திபன் மற்றும் வினோத் பெஞ்சமின் ஆகியோர் கூறினார்கள். தர்மபுரியைச் சேர்ந்த பெயர் குறிப்பிடாத நபர் இவ்வமைப்பிற்குத் தன்னைக் காட்டாமல் 10 முதல் 15 வரையிலான கஷ்டப்படும் பார்வையற்றோர்களை அடையாளம் காட்டியுள்ளார். பிறகு இவரைப் பற்றிக் கேட்டபொழுது நீங்கள் அவர்களுக்கு உதவுங்கள் சார் பார்த்துக்களாம் என்றார்.

 

ஆனால், இவர் வாரத்தில் 3 நாட்கள் வியாபாரமும், 3 நாட்கள் தேவாலயத்திலும் வேலை செய்வார். இந்தக் காலத்தில் இவை இரண்டும் இயங்கவில்லை. இவர் தனது உணவு தேவையையும், அன்றாட தேவையையும் எவ்வாறு பூர்த்தி செய்துகொள்வார்?

 

இது இணையத் தென்றல் அமைப்பினர் வழங்கிய தகவல். இவ்வளவு கஷ்டத்திலும் தான் உழைத்து வாழவேண்டும் என்ற அவரது தன்னம்பிக்கைக்கும், தனக்காக எதையும் எதிர்பார்க்காத இந்த மனிதரின் பெருந்தன்மைக்கும் ஒரு சல்யூட்.

 

தாய் பள்ளி சேலம்-பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப் பள்ளி முன்னாள் மாணவர்கள் அமைப்பு:

சேலம் பார்வையற்றோருக்கான அரசு நடுநிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அமைப்பு தங்களது பள்ளியில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருப்பவர்கள், இரயிலில் வியாபாரம் செய்பவர்கள், பொது மக்களிடம் பணம் வாங்கி தனது வாழ்க்கையை நடத்துபவர்கள் முதலியோர்க்கு இதுவரை 125 நபர்களுக்கு உதவியிருக்கிறது. இவ்வமைப்பின் தலைமை நிர்வாகி திருமதி. மதினா அவர்களிடம் பேசியபோது, “எங்களது பள்ளியில் படித்த சந்தியா மற்றும் யோகேஷ்வரன் ஆகியோரின் பெற்றோர் மிகவும் வறுமையிலிருந்து வருகிறார்கள். இவர்களது தந்தைக்குக் கூலி தொழில். அம்மாவிற்கு கிட்னி செயல் இழந்து டயாலிஸிஸ்க்குப் பணம் இல்லாததைத் தெரிந்து கொண்டு அவர்களுக்கு உதவினோம். அதன் பிறகு அவர்கள் அம்மா தொலைபேசியில் தொடர்பு கொண்டு ‘டீச்சர் நீங்கள் கொடுத்த பணத்தை வைத்துதான் அரிசி, சிலிண்டர் வாங்கினோம்’. என்று கூறியது இன்னும் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது” என்றார்.

 

மேலும், “வேறு யாரையும் விட்டுவிடக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருந்து, அனைவரையும் கண்டறிந்து உதவினோம். அரசாங்கம் அறிவிக்கும் எந்தத் திட்டம் ஒரு கடைக் கோடி கிராமத்தில் வாழும் மனிதனுக்குப் போய்ச் சேர்கிறதோ அதுவே சிறந்த திட்டமாகும். கிராமப் பகுதிகளில் வசிக்கும் பார்வை மாற்றுத்திறனாளிகள் இடையே பலரிடம் நியாயவிலைக்கடை அட்டை இல்லை. அவர்களைக் கண்டு அவர்களுக்கு உதவியது தான் எங்களுக்கு மனநிறைவைத் தந்தது” என்றார்.

 

இந்தியப் பார்வையற்றோர் சங்கம் மதுரை:

தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் புகழ்பெற்ற பார்வையற்றோர்க்கான தொண்டு நிறுவனம் இந்தியப் பார்வையற்றோர் சங்கம் IAB. இங்கு பள்ளிக்கல்வி மற்றும் பார்வையற்றோர்க்கான வேலைவாய்ப்பையும் வழங்கி வருகின்றார்கள். இந்தக் கொரோனா காலத்தில் தமிழகம் முழுவதும் 200 நபர்களுக்கு 5000 ரூபாயும், மதுரையைச் சுற்றி வாழும் பார்வையற்ற குடும்பங்களுக்கு அரிசி உள்ளிட்ட மளிகை பொருட்கள் அடங்கிய ஒரு காம்போவும் வழங்கப்பட்டுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் திருமதி. ரோஷன்ஃபாத்திமா அவர்கள் கூறினார்.

 

மதுரைK.K. நகரைச் சேர்ந்த கண்ணன் ஒரு பார்வையற்றவர். அவர் குடும்பத்தில் அவரது மனைவி, மகன் ஆகியோர் பார்வையற்றவர்கள். கண்ணன் இரயிலில் வியாபாரம் பார்த்து தான் இவர்களது குடும்பத்தைப் பார்க்க வேண்டும். இதனிடையில் இரயில் இயங்காததால் இவர்களுக்கு அடுத்தவேளை உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைக் கேள்விப்பட்ட பிறகுதான் நாங்கள் வழங்கிய 200 நபர்களில் பார்வையற்ற வியாபாரிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்கள் வங்கிக் கணக்கில் செலுத்தினோம் என நம்மிடம் கூறினார் ரோஷன் ஃபாத்திமா.

 

பார்வையற்றோர் கவனக கல்வி நல அறக்கட்டளை

[The Blind Care Educational Charitable Trust]

சென்னையில் இயங்கிவரும் இந்த நிறுவனம் பார்வையற்ற இஸ்லாமியர்களுக்கு குர்ரான், கணினிப் பயிற்சி, பிரெயில் முதலியவற்றைக் கற்பிக்கிறது. மேலும் இவர்கள் காலத்திற்கு ஏற்றார் போல ஏழை எளிய மக்களைக் கண்டுபிடித்து உதவி வருகின்றார்கள். இந்தக் கொரோனா காலத்தில் சுமார் 40 பார்வையற்ற மக்களுக்கு உதவியுள்ளார்கள். அதன் நிர்வாகி திரு. அகமது அலி அவர்களிடம் பேசியபொழுது, “மக்கள் பலர் கஷ்டப்படுகின்றார்கள். எல்லா கஷ்டங்களையும் நம்மால் தீர்க்க முடியாது. ஆனால், சிறுசிறு உதவிகளைச் செய்வதன் மூலம் அதிலிருந்து அவர்களுக்கு விடுதலை அளிக்கலாம். இது தற்காலிகமானது தானே தவிர நிரந்தரம் அல்ல. என்னிடம் ஒருவர் தனது குழந்தைக்குப் பால் வாங்கக் கூட பணம் இல்லை என்று கூறினார். ஒரு குழந்தை வளர பால் அடிப்படைத் தேவை, அதனை வாங்க அவருக்கு ஒரு மாதம் எவ்வளவு தொகை ஆகப்போகிறது? இது போன்று அவர்களின் அடிப்படைத் தேவையைப் பூர்த்திசெய்வதே எங்களது நோக்கம்” எனக் கூறினார்.

 

பார்வையற்றோருக்கான பழைய மாணவர்கள் சங்கம் பாளையங்கோட்டை

பாளையங்கோட்டையில் இயங்கிவரும் பார்வையற்றோர் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் ஒன்றிணைந்து அதே பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டும் இதுவரை 100 பேருக்கு உதவி வந்துள்ளனர். தொடர்ந்து ஐந்தாம் கட்டமாகவும் உதவுவதற்கு அவர்கள் திட்டமிட்டு வருகின்றனர். இவ்வேளையில் அவர்களை நான் தொடர்பு கொண்டு பேசிய பொழுது அவர்கள் சந்தித்த பார்வை மாற்றுத் திறனாளிகளின் கஷ்டங்களை என்னிடம் கூறினர்.

 

“பாளையங்கோட்டை பார்வையற்றோர் பள்ளியில் படித்த நாங்கள் இன்று பல இடங்களில் பணிபுரிந்து வருகிறோம். இந்தப் பேரிடர் காலத்தில் எங்கள் பள்ளியில் படித்துத் தங்கள் வாழ்க்கையை நடத்த கஷ்டப்படுபவர்களைக் கண்டறிந்து எங்களால் இயன்ற சிறு தொகையினை அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைத்து வருகிறோம். அவ்வாறு பயன்பெற்ற எனது நண்பர்கள் கூறியதாவது: எங்களுக்குப் பொருள்கள் பல தன்னார்வலர்கள் மூலமும், பல எங்களைப் போன்ற பார்வையற்றவர்கள் நடத்திவரும் குழுக்கள் மூலமும் எங்களுக்குப் பொருளுதவிகள் நிறையவே கிடைத்திருக்கிறது. இருந்தாலும், எங்களின் அன்றாட தேவைகளான காய்கறிகள், குழந்தைகளுக்குப் பால் போன்றவை வாங்குவதில் சிக்கல் இருந்து வந்துள்ளது. கையில் காசு இல்லாத பொழுது நீங்கள் கொடுத்த இந்தப் பணம் எங்களுக்குப் பெரும் உதவியாக இருக்கிறது என்று கூறினார்கள்”.

 

உன்னைப்போல் ஒருவன் பிலைன்ட்கிராம் குழு:

இங்கே பிலைன்ட்கிராம் (blind Gram) என்பது டெலிகிராம் (Telegram) செயலிக்கு மாற்றாகப் பார்வை மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்துவதற்கு தோதாக மாற்றி அமைக்கப்பட்ட செயலி தான் இது. இந்த உன்னைப்போல் ஒருவன் குழுவானது சாதாரனமாக தொடங்கப்பட்டது. 2015- ஆம் ஆண்டில் ஏற்பட்ட இயற்கை பேரிடரின் பொழுது பல்வேறு பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு இந்தக் குழுவைச் சேர்ந்தவர்கள் உதவி இருக்கிறார்கள். இந்தக் கொரோனா ஊரடங்கு காலத்திலும் மற்ற பார்வையற்றவர்கள் உடைய வாட்ஸ்அப் குழு போலவே இவர்களும் உதவி வருகின்றார்கள். இதுவரை ஏறத்தாழ 80 பார்வையற்றோர் குடும்பங்களுக்கு உதவி உள்ளார்கள் இந்த உன்னைப்போல் ஒருவன் குழு. இந்தக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. நாகராஜன் பேசியபொழுது, “வாட்சாப்பில் ஆரம்பித்த இந்தக் குழு தற்பொழுது 350 நண்பர்களைக் கொண்டு டெலிகிராமில் இயங்கிவருகிறது. இந்த ஊரடங்கு காலங்களில் நாங்கள் சிலபேருக்கு உதவி இருந்தாலும், தஞ்சாவூரைச் சேர்ந்த மாரியப்பன் என்பவருக்கு உதவியது நெகிழ்ச்சியானது. ஆம். மாரியப்பன் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி. அவரது மனைவி, அவருடைய இரண்டு குழந்தைகள் மற்றும் அவருடைய மைத்துனன், மைத்துனரின் மனைவி, அவர்களுடைய இரண்டு குழந்தைகள் என அந்தக் குடும்பத்திலேயே 8 பேர் பார்வை மாற்றுத்திறனாளிகள். இவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் ஆயிரம் ரூபாய் எவ்விதத்திலும் போதாது என்பது எங்களுக்குத் தெரியும். இருந்தாலும் வேறு வழியில்லை. இரயிலில் வியாபாரம் செய்து, அதில் வருகின்ற வருமானத்தில் தான் அவர்கள் தங்களது குடும்பத்தை நடத்துகின்றார்கள். இம்மாதிரியான காலத்தில் எப்படி அவர்கள் வாழ்க்கையை ஓட்டுவார்கள் என்பதற்கு நம்மிடம் பதில் இல்லை” என்றார்.

பார்வையற்றோர் உரிமைக்கான அமைப்பு-கோவை:

கோயம்புத்தூரில் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு அதனைச் சுற்றியுள்ள பார்வை மாற்றுத் திறனாளிகளது உரிமையை மீட்கவும், அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டுச் செயல்பட்டு வருகின்றது. இவ்வமைப்பின் தலைவர் திரு. மயில்சாமி அவர்களிடம் பேசியபொழுது, “இந்த ஊரடங்கு அறிவித்த பிறகு எங்களுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. பேசியவர் திருமதி. ஜெய ஶ்ரீ, அவர் பெரியநாயக்கம்பாளையம் என்ற பகுதியில் வாழ்ந்து வருவதாக கூறினார். மேலும், அவருக்குக் குழந்தை பிறந்து 10 நாட்கள் ஆன நிலையில் இந்த ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அவரது கணவர் இரயிலில் வியாபாரம் பார்த்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே 2 குழந்தைகள் இருக்கின்றனர். இதற்கு இடையில் தாங்கள் சாப்பாட்டிற்கு கஷ்டப்படுவதாக எங்களிடம் கூறினார். இவர் தான் நாங்கள் இந்த நேரத்தில் சுயதொழில் செய்யும் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு உதவலாம் என்ற எண்ணத்தை எங்களுக்குள் விதைத்தார்” என்று தெரிவித்தார்.

 

இதுவரை இந்த 2 மாதத்தில் 60 பார்வையற்றவர்களுக்கு உதவி செய்துள்ளோம் எனக் கூறுகின்றார். ஒரே மாதமாக மொத்தமாக பணத்தைச் செலுத்தினால் செலவாகிவிடும் எனக் கருதி ஏப்ரல் மற்றும் மே மாதம் தனித் தனியாக வழங்கினோம் என்று கூறினார்.

((கட்டுரையாளர் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் ஆய்வியல் நிறைஞர் (M.Phil) பட்டம் பெற்றவர்().

https://www.viralmozhiyar.com/2020/06/m.html

 

ARUNACHALAM