நேபாளத்தில் கடந்த சில நாட்களாக காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது. இந்தியா - சீனா நாடுகளுக்கு இடையே இமயமலை பகுதியில் அமைந்துள்ள நேபாள நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.
அதுமட்டுமின்றி, குப்பையை தீ வைத்து எரித்தல், வாகனப்புகை, கட்டுமானத்துறை பணியின் போது ஏற்படும் மாசு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அந்நாட்டில் கடுமையான காற்று மாசுபாடு ஏற்பட்டுள்ளது. இந்தியா, சீனாவில் நிலவிவரும் காற்று மாசுபாடும் நேபாளத்தில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
காற்று மாசுபாடு காரணமாக பள்ளி செல்லும் மாணவ\மாணவிகளுக்கு, பொதுமக்களுக்கு பல்வேறு விதமான சுவாசப்பிரச்சனைகளும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து அதிகரித்து வரும் காற்று மாசுபாடு அதிகரித்து வருவதால் நேபாளத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் ஏப்ரல் 2 வரை மூடப்படுவதாக அந்நாட்டு கல்வித்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
காற்று மாசுபாடு காரணமாக நேபாளத்தில் பள்ளிகள் மூடப்படுவது இதுவே முதல்முறையாகும்.













