கொழும்பு தாமரை தடாகம் அரங்கில் திருமதி இலங்கை அழகிக்கான இறுதிப் போட்டி கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அந்த போட்டியில் புஷ்பிகா டி சில்வா, "திருமதி இலங்கை அழகி" ஆக தேர்வு செய்யப்பட்டார்.
உலக அழகி போட்டியில் கிரீடத்தை பெற்ற கரோலின் ஜுரி, புஷ்பிகா டி. சில்வா, திருமதி இலங்கை கிரீடத்தை பெற தகுதியற்றவர் என அதேமேடையில் பகிரங்கமாக அறிவித்தார்.
புஷ்பிகா டி சில்வாவின் தலையிலிருந்த கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்ட, கரோலின் ஜுரி, இரண்டாவது வெற்றியாளருக்கு அந்த கிரீடத்தை அணிவித்தார். இந்த சம்பவமானது, கடந்த இரு தினங்களாக பேசுப் பொருளாக மாறியுள்ளது.
போட்டியாளர் திருமணமானவராக இருக்க வேண்டும் என்பதுடன், அவர் விவாகரத்து பெற்றவராக இருக்க முடியாது என அறிவித்தே, புஷ்பிகா டி சில்வாவிடமிருந்து கரோலின் ஜுரி, கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டார்.
இந்த நிலையில், கரோலின் ஜுரியின் செயலுக்கு எதிராக, புஷ்பிகா டி சில்வா, கொழும்பு - கறுவாத்தோட்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
2020ம் ஆண்டு திருமதி உலக அழகியாக தெரியாகியுள்ள கரோலின் ஜுரியின் செயற்பாடு, கவலையை அளிப்பதாக உலக திருமதி அழகி போட்டியின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அழகு ராணி போட்டிகளில் தான் கண்ட மிகவும் மோசமான சம்பவம் இதுவென உலக முதலாவது திருமதி அழகுராணியான ரோஸி சேனாநாயக்க குறிப்பிடுகின்றார்.இதற்கிடையே, "திருமதி இலங்கை" கிரீடம் புஷ்பிகா டி சில்வாவிற்கு, மீண்டும் வழங்கப்பட்டது.
தனது கிரீடத்தை மீளப் பெற்றுக்கொண்டவர்கள் மீது தனக்கு எந்தவித கோபமும் கிடையாது என புஷ்பிகா தெரிவித்தார்.
திருமணமாகி, விவாகரத்து பெற்ற பெரும் எண்ணிக்கையிலான பெண்கள் உலகில் உள்ளதாகவும், இனிவரும் காலங்களில் அவர்களுக்காக தான் குரல் எழுப்பவுள்ளதாகவும் அவர் கூறினார்.
விவாகரத்து பெற்ற பெண்கள், தனியாக சாதனைகளை படைக்கும் இந்த தருணத்தில், அழகி போட்டிகளில் மாத்திரம் ஏன் அவர்கள் பங்களிப்பை வழங்கக் கூடாது எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
பெண்ணொருவரை வீழ்த்துவதற்காக, யாராவது ஒருவர் முயற்சிகளை மேற்கொள்வாராயின், அது அவருக்கான வெற்றி கிடையாது எனவும் கூறும் அவர், அதுவே அவரின் தோல்வி எனவும் தெரிவித்துள்ளார்.
தெரிவித்தார். தனது வாழ்க்கையில் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்றும் புஷ்பிகா டி சில்வா நம்பிக்கை வெளியிட்டார்.













