பருவநிலை மாற்றம் தடுப்பு நடவடிக்கைகள் - அமெரிக்கா, சீனா உடன்பாடு

SOCIAL SHARE
Pin It

உலகிலேயே அதிக அளவில் கார்பன் உமிழ்வை கொண்ட நாடுகளாக அமெரிக்கா மற்றும் சீனா உள்ளன. எனவே பருவநிலை மாற்ற விவகாரத்தில் இந்த இரு நாடுகளின் ஒத்துழைப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்தநிலையில் பருவநிலை மாற்றம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அமெரிக்காவின் பருவநிலைக்கான சிறப்பு தூதர் ஜான் கெர்ரி கடந்த வாரம் சீனாவுக்கு சென்றார். அங்கு அவர் ஷாங்காய் நகரில் சீனாவின் பருவநிலைக்கான சிறப்பு தூதர் ஷி ஜென்ஹூவாவை நேரில் சந்தித்து பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தி வந்தார். இந்த பேச்சுவார்த்தைகளின் முடிவில் இரு நாடுகளுக்கும் இடையில் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி பருவநிலை மாற்றத்தை தடுக்க ‌ ஒருவருக்கொருவர் ஒத்துழைக்கவும், பிற நாடுகளுடன் இணைந்து செயல்படவும் இரு நாடுகளும் உறுதி பூண்டன.

அமெரிக்கா மற்றும் சீனா காலநிலை நெருக்கடியை சமாளிக்க ஒருவருக்கொருவர் மற்றும் பிற நாடுகளுடன் ஒத்துழைக்க உறுதி பூண்டுள்ளன. இந்த பருவநிலை பிரச்சினை தீவிரத்தன்மை மற்றும் அவசரத்துடன் கவனிக்கப்பட வேண்டும். கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான கூடுதல் நடவடிக்கைகளுக்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன‌‌. அத்துடன் குறைந்த கார்பன் ஆற்றலுக்கு மாறுவதற்கு வளரும் நாடுகளுக்கு நிதியளிக்க இரு நாடுகளும் ஒப்புதல் தெரிவித்துள்ளன.

இருநாடுகள் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு பருவநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. சபையின் மாநாடு மற்றும் பாரிஸ் ஒப்பந்தம் உள்ளிட்ட பல தரப்பு செயல்முறைகளிலும் ஒத்துழைப்பை மேம்படுத்த அமெரிக்கா மற்றும் சீனா உறுதிபூண்டுள்ளன.

அமெரிக்காவில் அடுத்த வாரம் நடைபெறும் பருவநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாட்டை இரு நாடுகளும் எதிர்நோக்குகின்றன.

இதனிடையே வருகிற 22, 23 ஆகிய தேதிகளில் பருவநிலை மாற்றம் தொடர்பாக அமெரிக்கா உச்சி மாநாட்டை நடத்துகிறது என்பதும், இதில் கலந்து கொள்ளும்படி சீன அதிபர் ஜின்பிங் உள்பட உலக தலைவர்கள் 40 பேருக்கு ஜனாதிபதி ஜோ பைடன் அழைப்பு விடுத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த மாநாட்டில் அமெரிக்காவும், பிற நாடுகளும் கார்பன் உமிழ்வை குறைப்பதற்கான கூடுதல் தேசிய இலக்குகளை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ARUNACHALAM