அமெரிக்காவில் கடந்தாண்டு ஜார்ஜ் பிளாய்ட் என்னும் கறுப்பினத்தவர் உயிரிழந்தது தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட டெரிக் சாவின் என்ற போலீஸ்காரர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபோலிஸ் நகரில் கடந்தாண்டு மே 25-ம் தேதி ஜார்ஜ் பிளாய்ட் என்ற கறுப்பினத்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, டெரிக் சவுவின் என்ற போலீஸ்காரர், பிளாய்டை தரையில் தள்ளி அவரது கழுத்தில் காலை வைத்து பலமாக அழுத்தினார். இதில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பிளாய்ட் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அமெரிக்கா முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜார்ஜ் பிளாய்ட் மரணத்திற்கு நீதி கேட்டு, பல இடங்களில் போராட்டம் வெடித்தது.
இதற்கிடையே ஜார்ஜ் பிளாய்டின் குடும்பத்தினர் இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி டெரிக் சாவின் உள்பட 4 போலீசார் மற்றும் மினியாபோலிஸ் நகர நிர்வாகத்துக்கு எதிராக கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதில் டெரிக் சாவின் உள்பட 4 போலீசாரும் பணிநீக்கம் செய்யப்பட்டு, கொலை வழக்கில் கைது செய்யப்பட்டனர். டெரிக் சாவின் மீது கொலை குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. டெரிக் சாவின் மீதான விசாரணை மினசோட்டாவின் ஹென்னெபின் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்த வழக்கு விசாரணையின் முடிவில் டெரிக் சாவின் குற்றவாளி என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். மேலும், அவரின் குற்றத்துக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை ஜார்ஜ் பிளாய்டின் உறவினர்கள் வரவேற்றுள்ளனர். ஜார்ஜ் பிளாய்ட் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம் நிரூபணம் செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு 40 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.













