வாடகை செக்ஸ்: ராணுவத்தினருக்கு உதவும் நாடு

SOCIAL SHARE
Pin It

ஒருவரை பாலியல் துணைவராகப் பயன்படுத்தி நோயாளிக்குச் சிகிச்சையளிக்கும் முறை பல நாடுகளில் வழக்கத்தில் உள்ளது.  பரவலாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் இஸ்ரேலிய அரசாங்கம் காயமடைந்த ராணுவ வீரர்களுக்காக இந்த முறையை அனுமதிக்கிறது. அதுவும் அரசுப் பணத்திலேயே.

டெல் அவிவ் நகரில் பாலியல் சிகிச்சையளிக்கும் ரோனித் அலோனியின் அறை நீங்கள் எதிர்பார்த்தது போலவேதான் இருக்கும். வாடிக்கையளர்கள் அமர சொகுசான சோபா, விளக்கமளிப்பதற்கு ஆண், பெண் உறுப்புகளின் வரைபடங்கள் ஆகியவை உண்டு.

ஆனால் பக்கத்து அறையைப் பார்த்தால் வியப்படைவீர்கள். மெழுகுவத்தி வெளிச்சத்தில் படுக்கை இருக்கும். இங்குதான் வாடகைத் துணைவர்கள், அலோனியின் வாடிக்கையாளர்களுக்கு பாலியல் பாடம் எடுப்பார்கள். உறவில் நெருக்கமாக இருப்பது எப்படி என்பதைக் கூறுவார்கள். இணைசேரக் கற்றுத் தருவார்கள்.

"இணைசேரத் துணை இல்லாவிட்டால் பாலியல் சிகிச்சை முழுமையடையாது. துணை இல்லாதவர்களுக்கு அவர்களின் வெற்றிடத்தை வாடகைத் துணைவர் மூலமாக நிரப்புகிறோம்," என்கிறார் அலோனி

இந்தமுறையை விமர்சிப்பவர்கள் இதை விபச்சாரத்துடன் ஒப்பிடுகிறார்கள். ஆனால் இஸ்ரேல் அரசு இந்த முறையை முழுமையாக அனுமதிக்கிறது. வீரர் காயமடைந்து, பாலுறவு கொள்ளும் திறன் பாதிக்கப்பட்டால், அரசே அவருக்கு வாடகைத் துணை மூலம் சிகிச்சையளிப்பதற்கான மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்கிறது.

பிறருக்கு இன்பத்தை அளிக்க முடியும் அல்லது பிறரிடமிருந்து இன்பம் பெற முடியும் என்று அனைவரும் உணர வேண்டியிருக்கிறது என்கிறார் அலோனி. பாலியல் மறுவாழ்வுத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர் அவர்.

"சிகிச்சை பெறவே இங்கு வருகிறார்கள். இன்பமடைவதற்காக வருவதில்லை. அதனால் இது விபச்சாரம் இல்லை" என்கிறார் உறுதியாக.

"இங்கு 85 சதவிகிதம் நெருக்கம், தொடுதல், அளித்தல், பெறுதல், தொடர்புகொள்ளுதல் ஆகியவைதான். இணைசேருவதுடன் சிகிச்சை நிறைவுபெற்றுவிடுகிறது"

"இஸ்ரேல் உருவாக்கப்பட்டதில் இருந்தே எப்போதும் போர்ச்சூழல்தான் நீடித்து வருகிறது. இங்குள்ள ஒவ்வொருவருக்கும் காயமடைந்த, இறந்துபோன ஒருவரையாவது தெரியும். அதனால் காயமடைந்தவர்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் விரும்புகிறார்கள்" என கூறுகிறார் அலோனி.
 

ARUNACHALAM