கடற்படை நீர் மூழ்கி கப்பலை காணவில்லை: இந்தோனேசியா கடற்படை அறிவிப்பு

SOCIAL SHARE
Pin It

இந்தோனேசிய கடற்படையை சேர்ந்த கேஆர்ஐ நாங்கலா 402 என்கிற நீர் மூழ்கிக் கப்பல், 53 வீரர்களுடன் காணாமல் போய்விட்டதாக அந்நாட்டு பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

காணாமல் போன நீர்மூழ்கியின் பெயர் கேஆர்ஐ நாங்கலா 402. அக்கப்பலைக் கண்டுபிடிக்க போர் கப்பல்களை அனுப்பி இருப்பதாக இந்தோனேசியாவின் ராணுவத் தளபதி கூறியுள்ளார்.

இந்தோனீசியாவின் பாலி தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில், புதன்கிழமை அதிகாலை அந்த நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போனதாகக் கருதப்படுகிறது.

ஆழமான பகுதியில் மூழ்கிச் செல்ல, அந்த நீர்மூழ்கிக்கு உத்தரவு கொடுக்கப்பட்ட பிறகு தான், அக்கப்பலுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது எனவும் சில செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இந்தோனேசிய நாடு இயக்கிக் கொண்டிருந்த ஐந்து நீர் மூழ்கிக் கப்பல்களில் ஒன்று இது.

வரலாற்றிலேயே முதல் முறையாக இந்தோனேசியாவின் ஒரு நீர் மூழ்கிக் கப்பல் காணாமல் போயிருக்கிறது என இந்தோனேசிய கப்பல் படை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

இது போன்ற சம்பவங்கள் இதற்கு முன்பும் உலகத்தில் நடந்திருக்கிறது. கடந்த 2017-ம் ஆண்டு அர்ஜென்டினா பாதுகாப்புப் படையின் நீர் மூழ்கிக் கப்பல் 44 வீரர்களுடன் தெற்கு அட்லாண்டிக் கடல் பகுதியில் காணாமல் போனது.

கிட்டத்தட்ட ஓராண்டு காலத்துக்குப் பிறகு, காணாமல் போன நீர் மூழ்கிக் கப்பலின் பாகங்கள் கிடைத்தன. அதன் பின், அந்த கப்பல் அழிந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ARUNACHALAM