டிஜிட்டல் – அச்சு எனும் இரண்டு வகைப்பட்ட வாசிப்பு அனுபவங்களின் முதன்மையான வேறுபாடு என்னவென்றால் அச்சு வாசிப்பில் வாசிக்கும் போது நீங்கள் அந்த புத்தகத்தின் கனத்தையும் வார்த்தைகளின் நீளத்தையும் உணர்கிறீர்கள். அச்சு புத்தகத்தினுடனான நேரடியான தொடர்பு அந்த புத்தகத்தின் எழுத்து மற்றும் கருத்து ரீதியான வரைபடத்தை நமது மூளை உணருமாறு செய்கிறது. மேலும் நாம் என்ன வாசிக்கிறோம் என்பதை நின்று நிதானித்து புரிந்து கொள்வதற்கும் அச்சு புத்தகம் உதவுகிறது. மறுபுறத்தில் டிஜிட்டல் வாசிப்பு என்பது நமது கண்களுக்கு அதிக அழுத்தத்தையும் வேலையையும் கோருவதால் வாசிப்பு என்பது கடினமாகிறது.
இதன் பொருட்டே நவீன தொழில்நுட்பம் நமது கண்களுக்கு அதிக வேலையை கொடுக்காத வண்ணம் திரைகளை கண்ணுக்கினியதாக மாற்றி வருவதும் உண்மைதான். அதன்படி கிண்டில் (Kindle) வாசிப்பு கணினித் திரை வாசிப்பை விட மேம்பட்டதாக இருக்கிறது. அதில் கண்கள் வெண்திரை வெளிச்சத்திற்கு ஏற்றபடி தன்னை மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் இருக்கிறது. மேலும் அதன் திரை கண்ணாடிக்கு பதில் வேறு ஒரு பொருளில் தயாரிக்கப்பட்டிருப்பதால் ஒளியின் எதிர்விளைவு (ரிஃபிளக்சன்) என்பது நிகழ்வதில்லை அல்லது ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கிறது.
எதை டிஜிட்டலில் வாசிக்க வேண்டும் எதை புத்தகத்தில் வாசிக்க வேண்டும் எதை மேலோட்டமாக படித்தால் போதும் அதை ஆழமாக அசைபோட்டு படிக்க வேண்டும் என்பதையெல்லாம் நீங்கள் முடிவு செய்யும் பட்சத்தில் இரண்டு வாசிப்பையும் முரண்படாமல் பயன்படுத்த முடியும்.
இந்த கட்டுரையை நீங்கள் டிஜிட்டல் வடிவத்தில் தான் வாசிக்கிறீர்கள் ஆனால் இது உங்களிடம் மேலோட்டமான சிந்தனையை ஏற்படுத்துகிறதா ஆழமான அசைவுகளை ஏற்படுத்துகிறதா யோசித்துப் பாருங்கள். இந்தக் கட்டுரையை கணினி சாராமல் பிரிண்ட் அவுட் போட்டு படித்துப் பார்த்தால் இதன் உள்ளடக்கம் இன்னும் மேம்பட்ட அளவில் நம்மில் உள்ளிறங்கும் என்பது உண்மைதானே?
டிஜிட்டல் வாசிப்பை விட புத்தக வாசிப்பு தான் மேம்பட்டது என்ற கருத்து நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப நாம் நம்மை தகவமைத்துக் கொள்கிறோம் என்று நவீன உண்மையை மறுக்கிறதா? ஏனெனில் இதற்கு முன் பல துறைகளில் இந்த பிரச்சனைகளை நாம் பார்த்திருக்கிறோம்.
இணையப் பத்திரிகைகள் வந்தபிறகு அச்சுப் பத்திரிக்கைகள் தங்களது வணிகத்தை இழந்து வருகின்றன என்பது மேற்கத்திய நாடுகளில் ஒரு தவிர்க்க இயலாத உண்மை. அதன் பொருட்டே கார்டியன் போன்ற பத்திரிகைகளெல்லாம் விளம்பரங்களை இழந்து மக்களிடையே நன்கொடை பெற்று ஊடகத்தை நடத்தும் நிலையைப் பார்க்கிறோம். இப்படி இருக்கையில் புத்தக துறையில் மட்டும் அச்சுப் புத்தகம் மட்டும் அதிகம் இருப்பதும் வாசிப்பதும் சாத்தியமா?
இப்போதைய கணினி வாசிப்பும் இருவேறுபட்ட திறன்களை கோருகிறது. எதிர்காலத்தில் இது குறித்து நாம் ஒரு தெளிவான புரிதலை பெற முடியும். அதாவது மாணவர்கள் டிஜிட்டல் வாசிப்பின் போது எத்தகைய வேறுபாட்டைக் கொண்டிருக்கிறார்கள் என்பது இப்போது நாம் புரிந்து கொண்டிருப்பது போல இருக்காது,
வாசகர்கள் டிஜிட்டல் வாசிப்பு குறித்து சிக்கலான மனநிலையை உருவாக்கிக் கொள்வதில்லை. மேலும் அவர்களது பார்வையின்படி டிஜிட்டல் வாசிப்பு என்பது இருபத்தோராம் நூற்றாண்டு வாழ்க்கையை கற்றுக் கொள்வதின் ஒரு பகுதி என்கிறார்கள். இரு வேறுபட்ட வகைகளில் நாம் வாசிப்பது என்பது பிரச்சினை இல்லை. மாறாக எப்போது நாம் டிஜிட்டல் வாசிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் ஒரு புரிதல் இருக்க வேண்டும் என்கிறார்கள்.
டிஜிட்டல் வாசிப்பு மட்டுமே அச்சு வாசிப்பை விட வேகமாக வாசிக்கக்கூடிய சாத்தியங்களை கொண்டிருக்கிறது. அதே நேரம் ஆழமாக புரிந்து கொள்வதற்கும் பொருள் அறிந்து புரிந்து கொள்வதற்கும் மாணவர்கள் குறிப்பிட்ட கட்டுரையை டிஜிட்டலில் இருந்து அச்சில் பிரிண்ட் அவுட் எடுத்து கொள்வது நல்லது. ஆகவே நாம் என்ன கற்கும் முறையை ஏற்கிறோம் என்பது எதை எப்படி கற்கப் போகிறோம் என்பதோடு தொடர்புடையது.
டிஜிட்டல் ஊடகம் என்பது நமது அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்து விட்டது. அது பேஸ்புக் ஆகவோ வாட்ஸ்அப் ஆகவோ அல்லது விவாதிக்கும் குழுமங்கள் ஆகவோ இருக்கலாம். இது குறித்து 180-க்கும் மேற்பட்ட ஆய்வாளர்கள் 33 நாடுகளில் ஒருங்கிணைந்து ஒரு ஆய்வு செய்திருக்கிறார்கள்.
இதற்கான விடை என்பது வாசிப்பு என்பதை நாம் எப்படி வரையறுக்கிறோம் என்பதைப் பொறுத்திருக்கிறது. இத்துறையில் இது குறித்த புள்ளி விவரங்கள் அனைத்தும் மேற்கண்ட வரையறையை பொறுத்தே அமைகிறது.
இதன்படி ஒவ்வொரு நாளும் நாம் மின்னஞ்சல்கள், அரட்டை செய்திகள், நடப்பு செய்திகள், அலுவலக ஆவணங்கள், பதிவுகள், விவாதங்கள் அனைத்தையும் படிக்கிறோம். சுவாரஸ்யமான முறையில் இசையும் சினிமாவும் கூட முற்றிலும் டிஜிட்டல் மயமாகி இருக்கிறது. இதை ஒப்பிடும் போது பல நாடுகளில் டிஜிட்டல் புத்தகங்கள் என்பது ஒட்டுமொத்த இணைய உலகில் 10 சதவீதத்திற்கும் குறைவான அளவைத்தான் கொண்டிருக்கிறது. பல வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டல் வாசிப்பின் அளவு அதிகரித்து வந்ததோடு தற்போது அது ஒரு முக்கியமான துறையாக நிலைநிறுத்தப்பட்டு வருகிறது.
கிண்டில் போன்ற தொழில்நுட்ப சாத்தியங்கள் தற்போது கிடைத்திருந்தாலும் அது இணையத்தோடு இணைக்கப்பட வில்லை என்றாலும் வாசகர்களைப் பொறுத்தவரை அச்சுப் புத்தகங்கள் படிக்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சியை இதில் அடைவதில்லை.
மிக நீண்ட கட்டுரைகள் நீண்ட ஆய்வுக் கட்டுரைகள் போன்றவற்றை படித்து உள்வாங்குவதற்கும் குறிப்பெடுத்துக் கொண்டு படிப்பதற்கும் பலரும் மாணவர்களும் கூட அச்சுப் புத்தகங்களையே விரும்புகிறார்கள். குறுகிய கட்டுரைகள் என்றால் அப்போது நிலைமை வேறாக இருக்கிறது
முதலில் நாம் படிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர வேண்டும். இல்லையேல் இந்த அச்சு, டிஜிட்டல் பிரச்சினையே இல்லை. அப்படி படிக்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொண்ட பிறகு இரு வகைகளுக்கும் ஏற்ற மாதிரி நமது வாசிப்பு பழக்கத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும்.













