உலகம் முழுவதுமே கொரோனா பரவலின் பிடியில் சிக்கியுள்ள நிலையில், ஜப்பான் நாட்டிலும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது.
தொற்று பரவலை தடுக்க ஜப்பான் அரசு, டோக்கியோ, ஒசாகா க்யோட்டா, ஹ்யோகோ ஆகிய பகுதிகளில் அவசரகால நிலையை மே இறுதி வரை நீட்டிப்பதாக அறிவித்துள்ளது. இருப்பினும் ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா இந்த கோடையில் டோக்கியோ ஒலிம்பிக்கை நடத்த இன்னும் சாத்தியக்கூறு இருப்பதாக கூறுகிறார்.
அவசர நிலை பிரகடனம் அமலில் இருந்த போதிலும், டோக்கியோ மற்றும் ஒசாகா போன்ற முக்கிய நகரங்களில் புதிய பாதிப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது.
ஜூலை 23 ஒலிம்பிக் விளையாட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஒலிம்பிகஸ் போட்டிகள் தொடங்குவதற்கு இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள நிலையில், இப்போது ஒலிம்பிக்ஸ் போட்டிகள் திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் நடப்பதாக திட்டமிட்டிருந்த ஒலிம்பிக் போட்டிகள் கொரோனா தொற்றுநோய் பரவல் காரணமாக இந்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
எனினும் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை கடுமையாக பின்பற்றி, பாதுகாப்பான முறையில் ஒலிம்பிக்கை நடத்த முடியும் என்ற தனது நிலைப்பாட்டை மீண்டும் ஜப்பான் வலியுறுத்தியுள்ளது.
ஒலிம்பிக்கை ரத்து செய்யக் கோரி ஜப்பான் அரசுக்கு ஆன்லைன் மூலம் 2,30,000 க்கும் மேற்பட்டோர் மனுவை அனுப்பியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜப்பான் மற்ற நாடுகளைப் போல தொற்றுநோயால் மோசமாக பாதிக்கப்படவில்லை. ஆனால் அதன் தடுப்பூசி போடும் பணிகள் முழு வீச்சில் நடைபெறவில்லை. ஜப்பானில் உள்ள 12 கோடியே 60 லட்சம் மக்கள்தொகையில் சுமார் 2% பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது.













