கொரோனா இல்லாத குட்டித்தீவு - படையெடுக்கும் மக்கள்

SOCIAL SHARE
Pin It

நிச்சயமற்ற கோவிட் காலங்களில் உலகின் மிகச் சிறந்த இடத்தில் வாழ்வது எப்படி இருக்கும்? உண்மையிலே சொல்லும் அளவிற்கு அது சிறப்பாக உள்ளதா?

இது பெரும்பாலும் உண்மைதான். சிங்கப்பூரில் வாழ்க்கை மிகவும் நன்றாக இருக்கிறது.

சமீபத்திய மாதங்களில், அவ்வப்போது வெளிவரும் ஒருசில தொற்றுக்களை ஒடுக்க விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சமூக அளவில் தினசரி தொற்றுக்கள் கிட்டத்தட்ட ஏற்படுவதே இல்லை என்றே சொல்லலாம். ஆயினும் இந்த வாரத்தில் பல புதிய தொற்றுக்கள் ஏற்பட்டதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் உடனடியாக இறுக்கப்பட்டன.

கடுமையான பயண விதிகள் மற்றும் எல்லைப் பாதுகாப்பு ஆகியவை வெளியிலிருந்து வரும் தொற்றுக்களை உடனடியாக நிறுத்துகின்றன. உள்ளே வருபவர்கள் உடனடியாக தனிமைப்படுத்தலின் கீழ் வைக்கப்படுகின்றனர்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் அமல் செய்யப்பட்ட இரண்டு மாத "சர்க்யூட்-பிரேக்கர்" தவிர, ஒருபோதும் மீண்டும் பொதுமுடக்கத்தின் கீழ் இருக்கவில்லை.

வாழ்க்கை ஏறக்குறைய இயல்பாக உள்ளது. எப்போது வேண்டுமானாலும் எனது குடும்பத்தினரை நான் சந்திக்க முடியும். கூடவே உணவகத்தில் நண்பர்களைச் சந்திக்க முடியும். ஆனால் எட்டு பேருக்கு மேல் இருக்க முடியாது. எல்லா இடங்களிலும், வெளியில் கூட முகக்கவசம் அணிவது காட்டாயமாகும். ஆனால் நீங்கள் உடற்பயிற்சி செய்யும் போது அல்லது சாப்பிடும்போது அவற்றை கழற்றலாம்.

பள்ளிகளும், குழந்தை பராமரிப்பு மையங்களும் திறந்திருக்கின்றன. வார இறுதியில் குழந்தைகளை எங்கு வேண்டுமானாலும் அழைத்துச் செல்ல முடியும். பல இடங்கள் சமூக தூரத்தை உறுதி செய்வதற்காக வருவோர் எண்ணிக்கையை குறைத்திருந்தாலும், வார இறுதிக்குத் திட்டமிடுவது என்பது ஒரு ராணுவப் பயிற்சிக்கு தயார் செய்வது போன்றது.

ஆண்டின் தொடக்கத்திலிருந்து எங்கள் மக்கள்தொகையில் சுமார் 15% பேருக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இங்கு சுமார் ஆறு மில்லியன் பேர் மட்டுமே உள்ளனர். நன்கு செயல்படும் தன்மை, அரசின் மீது அதிக நம்பிக்கை மற்றும் தடுப்பூசி தயக்கம் குறைந்து வருவது போன்றவையே இதற்கான காரணங்களாகும்.

பாதுகாப்பாக இருக்கிறோம், சிறப்பாக செயல்படுகிறோம். கட்டாய முககவசம் அணிதல், தொடர்புகளை கண்டறியும் சிறப்பான வழிமுறை, பயணம் மற்றும் பெரிய கூட்டங்களுக்கு நீடித்த கட்டுப்பாடுகள் அனைத்தும் இவற்றில் உதவியுள்ளன. அதேபோல், எளிதில் கட்டுப்படுத்தக்கூடிய எல்லைகள், பெரிய நிதி வளம் மற்றும் கண்டிப்புடன் கூடிய திறமையான அமைப்புமுறை போன்றவையும் தங்கள் பங்களிப்பை அளித்துள்ளன.

சிங்கப்பூரில் பலர், வெளியே சென்று வரும் சுதந்திரத்தை அனுபவிக்கிறார்கள். ஆனால் நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமை இப்படி இல்லை. அவர்கள் பெரும்பாலும் தங்கள் பணியிடங்கள் மற்றும் தங்குமிடங்களில் கட்டுப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். சிறிய தங்குமிடங்கள் மற்றும் சுகாதாரமற்ற வாழ்க்கை நிலைமைகள் காரணமாக கடந்த ஆண்டு இவர்களிடையே நிறைய கொரோனா தொற்றுக்கள் ஏற்பட்டன.

அவர்கள் தங்குமிடங்களை விட்டு வெளியே செல்ல விரும்பினால் தங்கள் முதலாளிகளிடம் அனுமதி பெற வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொழுதுபோக்கு மையங்களில் மட்டுமே பெரும்பாலும் அவர்கள் கலந்துபழக முடியும்.

சிங்கப்பூர் மற்றும் பிற இடங்களில் கடுமையான தனிமைப்படுத்தல் விதிகள் காரணமாக பயணம் எளிமையானதாக இல்லை என்பதால் பலரும், தங்கக்கூண்டில் அடைப்பட்ட கிளியாக மாறியுள்ளனர்.

அருகிலுள்ள இந்தோனேசிய தீவுக்கு அல்லது அண்டை நாடான மலேசியாவின் எல்லை நகரங்களுக்கு வார இறுதி பயணமாக என்று வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வதற்கு சிங்கப்பூரில் பலர் பழகியுள்ளனர்.

கடந்த ஆண்டு தோல்வியுற்ற முயற்சிக்குப் பிறகு சிங்கப்பூர், ஹாங்காங்குடன் ஒரு ட்ராவல் பப்பிளை திறக்கிறது என்ற செய்தியை மக்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். ஆனால் இந்த வாரம் இரு நகரங்களிலும், சமூக தொற்றுக்கள் பதிவான பின்னர் நடப்பது நடக்கட்டும் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளது.

உலகின் சில பகுதிகளில் இந்த வைரஸ் எவ்வாறு காட்டுத்தீ போல பரவி வருகிறது என்பதைப்பார்க்கும்போது, சலிப்பு பற்றி புகார் செய்வது மடத்தனம்.

"சிங்கப்பூர் என்பது உலகமயமாக்கலின் பின்னணியில் வளமையடைந்த ஒரு நகரம். பொருளாதார வளர்ச்சியின் தன்மையையும் கருத்தில் கொண்டு பார்த்தால் நமக்கு  அதிக தார்மீக பொறுப்பு இருப்பதாக நான் உணர்கிறேன்."

ஆபத்தான உலகளாவிய தொற்றுநோயை வெற்றிகரமாக சமாளித்துறோம் என்று சிங்கப்பூரில் பலர் கூறுவார்கள்.

ஆனால் இந்தக்குமிழி எப்போது வேண்டுமானாலும் உடையக்கூடும். பொருளாதார மீட்சிக்காக நாடு மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு பலமுறை வலியுறுத்தியுள்ளதுடன், சீனா மற்றும் ஆஸ்திரேலியா போன்ற சில இடங்களிலிருந்து பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தவும் தொடங்கியுள்ளது.

சிங்கப்பூர் ஒரு நாள் உலகின் பிற பகுதிகளுடன் முழுமையாக மீண்டும் இணையும். அதுவே நமது கோவிட் மீட்சியின் உண்மையான சோதனையாக இருக்கும்.

ARUNACHALAM