ஆஸ்திரேலிய விவசாயிகளும், விவசாயம் சார்ந்த தொழில் துறையினரும் இது வரை இல்லாத அளவில், எலி படைகளின் தாக்குதலால் நிலை குலைந்து போயுள்ளனர்.
ஆஸ்திரேலியாவில், சமீபத்திய மாதங்களில், லட்சக்கணக்கான எலிகள் பயிர்களுக்கு பெரும் அழிவை ஏற்படுத்தி வருகின்றன. கிழக்கு ஆஸ்திரேலியாவில் சேமித்து வைக்கப்பட்டுள்ள தானியங்கள் அனைத்தும், எலிகளுக்கு இரையாகி, இப்போது அனைத்தும் வீணாகி விட்டன. சேமிப்பு கிடங்குகளில் மட்டுமல்லாது ஊரக பகுதிகளில் உள்ள மருத்துவமனைகளிலும் எலிகள் படையெடுத்து நோயாளிகளை கடித்து வருகிறது.
எலிகள் படையெடுப்பு தொடர்பான படங்களும் வீடியோக்களும் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.
ஆஸ்திரேலியாவின் மத்திய-மேற்கு பகுதி முழுவதும் எலிகள் தொடர்ந்து பேரழிவை ஏற்படுத்தி வருவதால், விவசாயிகள் அரசாங்கத்திடம் உதவி கோருகின்றனர். லட்சக்கணக்கான எலிகள், வீடுகள் மற்றும் பண்ணைகள் மீது படையெடுத்து வருகின்றன.
ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் லூசி தாக்ரே ஒரு வீடியோவைப் பகிர்ந்துள்ளார், இது ஆஸ்திரேலிய மாநிலமான நியூ சவுத் வேல்ஸில் இறந்த மற்றும் உயிருள்ள எலிகள் தரையில் கொட்டப்படுவதைக் காணலாம்.
"எங்கள் வீடுகளின் அனைத்து பகுதிகளையும் ஆக்கிரமித்துள்ள எலிகள், எங்கள் உடைகளையும், உணவையும் அழித்து விட்டது. அதோடு நோய்கள் பரவும் அபாயமும் உள்ளது. அரசு இதற்காக ஏதேனும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அவர் கூறுகிறார்
இதற்கிடையில், சமூக ஊடகங்களில் இன்னும் பல வீடியோக்கள் வெளிவந்துள்ளன, அதை பார்த்து மக்கள் திகிலடைந்தனர்.
நியூ சவுத் வேல்ஸ் அரசாங்கம் எலிகள் பிரச்சினையை சமாளிக்க 50 மில்லியன் டாலர் நிதியுதவிக்கு ஒப்புதல் அளித்துள்ளது.













