சீனாவில் உருவாக்கப்பட்ட கோவிட் தடுப்பூசியை செலுத்திய, 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள், சீனாவுக்கு செல்ல விசா வழங்க கோரி சீனத் தூதரகத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
சீனாவில் பணி மற்றும் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்த நூற்றுக்கணக்கான இந்தியர்கள் கோவிட் பரவலால் கடந்த ஆண்டு இந்தியா திரும்பியிருந்தனர். இந்நிலையில் கடந்த மார்ச் 15ம் தேதி, 'இந்தியா உள்ளிட்ட 20 நாடுகளை சேர்ந்தவர்கள் சீனா வருவதற்கு, கோவிட் தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக்கொள்ள வேண்டும்' என, சீன அரசு நிபந்தனையை விதித்தது.
சீனத் தடுப்பூசி இந்தியாவில் கிடைக்காததால், சீனா திரும்ப வேண்டிய இந்தியர்களுக்கு இந்த நிபந்தனை சிக்கலை ஏற்படுத்தியது. எனினும் சீனாவில் தங்கள் பணிக்கு திரும்பவும், குடும்பத்துடன் இணையவும் வேண்டி, 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் நேபாளம், மாலத்தீவு, துபாய் போன்ற அண்டை நாடுகளுக்குச் சென்று ஒரு மாதத்துக்கும் மேலாக தங்கி சீனத் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் செலுத்திக் கொண்டனர். ஆனால் சீனத் தூதரகம் அந்நாட்டுக்கு திரும்ப விசா வழங்காததால் அவர்களின் முயற்சி வீணானது.
தடுப்பூசி செலுத்திக் கொண்ட இந்தியர்கள் தங்களுக்கு விசா அளிக்கக் கோரி இந்தியாவுக்கான சீனத் தூதருக்கு கடிதம் எழுதியுள்ளனர். தங்களுக்கு உதவுமாறு சீனத் தலைநகர் பீஜிங்கில் உள்ள இந்தியத் தூதரகத்துக்கும் அவர்கள் கடிதம் அனுப்பியுள்ளனர். இந்தியா மற்றும் இதர பகுதிகளில் கோவிட் தொற்றின் 2வது அலை உருவானதால், இந்தியா - சீனா இடையிலான விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தியர்கள் வேறு நாட்டுக்குச் சென்று அங்கிருந்து சீனாவுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.













