+2க்கு பிறகு என்ன படிக்கலாம்?

SOCIAL SHARE
Pin It

உலகின் எதிர்காலத்தை கட்டமைக்கப் போகும் சிற்பிகள்…மாணவர்கள்! அந்தக் கைகளுக்கு சென்று சேர வேண்டிய கல்வி எனும் உளி, சரியானதாக இருக்க வேண்டும்.

அதாவது தங்களது திறன்களுக்கு ஏற்ற துறை எது என்பதை அறிந்து கொண்டு, அதற்கேற்ற படிப்புகளை கையிலெடுக்கும் போது தான், மாணவர்களுக்கான வளர்ச்சியும் வெற்றியும் உறுதியாகும். ஆனால் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் தங்களது பிள்ளைகள் ஊர் மெச்சும் படிப்புகளில் சேர்ந்தால் போதும் என்ற அளவில் தான் மாணவர்களை மேற்படிப்புகளில் சேர்க்கின்றனர்.

குறிப்பாக பிளஸ் 2 முடித்ததும் தங்களது பிள்ளைகள் பட்டப்படிப்பு பாலிடெக்னிக் உள்பட எந்த படிப்புகளை கையில்  எடுத்தாலும், படித்து முடித்த உடனேயே அவர்களது கையில் வேலைக்கான ஆர்டர் வந்துவிடவேண்டும்…பிள்ளைகள் விரைவாக வாழ்க்கையில் செட்டிலாகிவிட வேண்டும் என்பதுதான், ஏறக்குறைய அனைத்து பெற்றோர்களின் கனவாகவே உள்ளது. குறிப்பாக, கடினமான சூழலில் பிள்ளைகளை பள்ளிகளில் சேர்த்து படிக்க வைக்கும் பெற்றோர், தங்களது பிள்ளைகள் படித்து முடித்த கையோடு வேலைக்கு வீடு, கார் போன்ற வசதிகளுடன் வாழ வேண்டும் என்பதை தங்கள் லட்சியமாகவே வைத்துள்ளனர்.

இதன் காரணமாகவே பிள்ளைகள் எந்தப் பாடத்தில் அதிக திறன் கொண்டுள்ளனர், எந்த படிப்புகளில் ஆர்வம் கொண்டுள்ளனர், எந்தத் துறைகளில் ஈடுபடத் துடிக்கின்றனர் என்பதை கருத்தில் கொள்ளாமல், தாங்களாகவே முடிவு எடுத்து அல்லது உறவினர்களின் பேச்சைக்கேட்டு பிள்ளைகளின் மேற்படிப்புகளை தேர்வு செய்கின்றனர். அல்லது எந்தப் படிப்புகளுக்கு அதிக மாணவர்கள் விண்ணப்பிக்கிறார்களோ, அது தான் நல்ல எதிர்காலம் கொண்ட படிப்பு என உறுதி செய்து கொண்டு, தங்கள் பிள்ளைகளையும் சேர்த்து விடுகின்றனர். சேர்த்த கையோடு, குடும்பத்தின் ஒட்டு மொத்த நம்பிக்கையையும் பிள்ளைகளின் தலை மீது வைத்து  விடுகின்றனர்.

இன்னும் பல பெற்றோர் தங்களது உறவினர்கள், நண்பர்களின் பிள்ளைகள் குறிப்பிட்ட ஒரு படிப்பை தேர்ச்சி பெற்று நல்ல வேலையில் அமர்ந்து விட்டால், அதே படிப்பை தங்களது பிள்ளைகளும் கையில் எடுத்து சிறந்து விளங்க வேண்டும் என்று பிள்ளைகளை வற்புறுத்தி, அளவுக்கு மீறி செலவுகள் செய்து சேர்த்து விடுகின்றனர். இன்று ஏராளமான இளைஞர்கள் தங்கள் படிப்புக்கேற்ற வேலை வாய்ப்பின்றி, அல்லது கையில் கிடைத்த ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து முன்னேற முடியாமல் தவிப்பதற்கு இது முக்கிய காரணம்.

பத்தாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பாடப்பிரிவுகள் தான். பத்தாம் வகுப்புக்குப் பிறகு மாணவர்கள் மிக மிக முக்கியமான முடிவுகளை எடுக்க வேண்டிய தருணத்திற்கு ஆளாகின்றனர். பெரும்பாலான பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை முதல் பிரிவான உயிரியல் அல்லது இரண்டாவது பிரிவான கணிப்பொறி அறிவியலில் தான் தங்களது பிள்ளைகள் படிப்பை தொடர வேண்டும் என்பதில் மிக தெளிவாக உள்ளனர். ஏனென்றால் முதல் பிரிவை எடுத்தால் மருத்துவம் அல்லது அது சார்ந்த படிப்புகளை கையில் எடுக்கலாம், அல்லது இரண்டாவது பிரிவை தேர்வு செய்தால் பொறியியல் சார்ந்த படிப்புகள் தேர்வு செய்யலாம், இந்த இரண்டில் மட்டும் தான் அதீத வேலை வாய்ப்புகள் உள்ளன, நிறைய சம்பாதிக்க முடியும், தங்களது பிள்ளைகள் விரைவாக வாழ்க்கையில் செட்டில் ஆக முடியும் என்று எண்ணுகின்றனர். அதனாலேயே தங்களது பிள்ளைகளின் எண்ணம் விருப்பம் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்ளாமல், கட்டாயப்படுத்தி அவர்களை அறிவியல் அல்லது கணிப்பொறி அறிவியல் பிரிவுகளில் சேர்த்து விடுகின்றனர்.

 பல மாணவர்களுக்கு மேலாண்மை, நிதி வர்த்தகம், கிரியேட்டிவ் துறை வணிகவியல், வரலாறு போன்ற பல துறைகளில் ஆர்வம் அதிகம் இருக்கலாம்… ஆனால் பெற்றோர் கட்டாயப்படுத்தியோ, அல்லது சரியான வழிகாட்டுதல் இல்லாமலோ அறிவியல் பாடப்பிரிவுகளை தலையில் சுமப்பதால் மன அழுத்தம் ஏற்பட்டு அதன் காரணமாக பிளஸ் 2 தேர்வுகளில் குறைவான மதிப்பெண்களை எடுக்கின்றனர். 

ப்ளஸ் டூ முடித்த பின் மருத்துவம் படிக்க அதிக மதிப்பெண்கள் தேவைப்படுவதாலும், நீட் உள்பட பல்வேறு கெடுபிடிகள் இருப்பதாலும், அந்தப் பாடப் பிரிவுகளில் தேர்வு எழுதிய மாணவர்கள் மருத்துவம் மற்றும் பொறியியல் துறைகளில் மிளிர்வதற்கு தவறுகின்றனர் அதேநேரம் பிளஸ் டூவில் தங்களுக்கு விருப்பமான பாடங்களை எடுத்து படிக்கும் மாணவர்கள், அதிகப்படியான வேலை வாய்ப்புகளைக் கொண்ட கணிதவியல், வணிகவியல், கணக்குப்பதிவியல் உள்பட பல்வேறு துறைகளில், மேற்படிப்புகளைப் படித்து வேலைவாய்ப்புகளை எளிதில் பெறுகின்றனர். உண்மையை சொல்லப்போனால் மருத்துவம், பொறியியல் படிக்கும் மாணவர்களைக் காட்டிலும் விரைவாகவும் எளிதாகவும் இவர்கள் வாழ்வில் முன்னேற்றம் காண்கின்றனர். 

ஆனாலும் இன்றளவும் ப்ளஸ் 2 படிப்பு முடித்த பின் கல்லூரிகளில் சேரும் போதுதான், எந்தெந்த துறைகளை மாணவர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும் என்ற தவறான எண்ணப் போக்கை கிராமப்புற மாணவர்கள், அவர்களது பெற்றோர், ஏன் பல பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களும் கொண்டுள்ளனர்.

இதனால் ஆர்வமில்லாமல் நுழைவுத் தேர்வுகளை எழுதும் மாணவர்கள் பெருமளவு சோடை போகின்றனர். பிளஸ் 2 தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் மற்றும் நீட் தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் இருந்தால் மட்டுமே, எம்பிபிஎஸ் படிப்புகளில் இடம் கிடைக்கும். கட்-ஆஃப் மதிப்பெண்களில் ஒன்றிலிருந்து குறைந்தாலும் மருத்துவம் படிக்க முடியாத சூழல் ஏற்படுவதால், மாணவர்கள் பெருத்த ஏமாற்றம் அடைவதோடு, மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர். பெற்றோரும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், ஏதேனும் ஒரு படிப்புகளில் மாணவர்களை சேர்த்து விடுகின்றனர்.

மருத்துவம் இப்படியென்றால், பொறியியல் படிப்புகளில் மாணவர்கள், பெற்றோர்களது பார்வை வேறு மாதிரியாக உள்ளது. பொறியியல் படிப்பென்றால் அது அண்ணா பல்கலைக் கழகம் தான். அங்கு இடம் கிடைத்தே ஆக வேண்டும் என்ற முனைப்பில் இருப்பதால், தமிழகத்தில் ஏராளமான நிகர்நிலை பல்கலைக் கழகங்கள், நூற்றுக்கணக்கான பொறியியல் கல்லூரிகளில் லட்சக்கணக்கான இடங்கள் காலியாக காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றன.

பிளஸ் 2 பாடப் பிரிவுகளில் உயிரியல் மற்றும் கணிப்பொறியியல் பாடப்பிரிவுகளை எடுத்துப் படித்த மாணவர்களுக்கு, மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளில் இடம் கிடைக்காமல் போகும் சூழல்களில், மருத்துவம் மற்றும் பொறியியல் தொடர்பான ஏராளமான பட்டப் படிப்புகள் பட்டயப் படிப்புகளில் சேரலாம். மருத்துவர், பொறியாளர் பதவிகளுக்கு இணையாக, இன்னும் சொல்லப் போனால் இவற்றை விட அதிகமாகவே வளர்ச்சியைக் காணமுடியும். ஆனால் இது குறித்த வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் முழுமையாக கிடைப்பதில்லை.

சரியான வழிகாட்டுதல்கள் கிடைக்கும் மாணவர்கள் பொறியியல், மருத்துவம் தவிர்த்து தற்போது மிக அதிக அளவில் வேலை வாய்ப்புகள் தரும் புதிய துறைகள் வந்திருப்பதை அறிந்து, அதற்கேற்ற படிப்புகளில் தங்களை ஈடுபடுத்திக்கொள்கின்றனர். குறிப்பாக அனைத்து துறைகளிலும் அத்தியாவசியமாக தேவைப்படும் மேலாண்மை, நிதி கட்டுப்பாடு, மின் வர்த்தகம், டிஜிட்டல் மார்க்கெடிங், டிஜிட்டல் ஊடகம் மற்றும் ஊடகம் சார்ந்த பல்வேறு படிப்புகள், ஹோட்டல் மேனேஜ்மென்ட், நவீன வேளாண்மை, உள்பட, வேகமாக முன்னேறி வரும் துறைகளில் விரைவாக வேலை வாய்ப்புகளைப் பெற்று முன்னேறுகின்றனர்.

உதாரணமாக கலை அறிவியல் கல்லூரிகளை தேர்ந்தெடுக்கும் மாணவர்கள், பிகாம், பிசிஎஸ், பிபிஏ, பிபிஎம் உள்பட பல்வேறு மேலாண்மை படிப்புகளை தேர்ந்தெடுத்து, அவற்றில் எம்பிஏ, எம்பிஎம் போன்ற மேற்படிப்புகளை முடித்து விட்டு, பன்னாட்டு நிறுவனங்களில் நல்ல பதவிகளில் நிறைவான சம்பளத்தில், வேலை வாய்ப்புகளைப் பெறுகின்றனர். இதேபோல உயிரியல் மற்றும் அது சார்ந்த பட்டப் படிப்புகள் பட்டயப் படிப்புகள் ஏராளமாக உள்ளன. உதாரணமாக நுண்ணுயிரியல், ரசாயனங்கள், ஊட்டச்சத்து குறித்த பட்ட மேற்படிப்புகள், பிசியோதெரபி, மருந்தியல், மருத்துவ உளவியல் உள்பட ஏராளமான படிப்புகள் உள்ளன. இவற்றுக்கு மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், ஆய்வுக்கூடங்கள் உள்பட பல்வேறு இடங்களில் எப்போதும் வேலை வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. திறமையான பணியாளர்கள் போதிய அளவில் இல்லாததால், எப்போதும் இந்தத் துறைகளில் டிமாண்ட் இருந்துகொண்டே இருக்கிறது.

ஆதலால், இந்தப் படிப்புகள் தான் உயர்ந்தவை… இவற்றைப் படித்தால் தான் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்ற போக்கை கைவிட்டு, மாணவர்களுக்குள் எம்மாதிரியான திறன்கள் அதிகம் பொதிந்துள்ளன, அவற்றிற்கு ஏற்ற படிப்புகள் என்னென்ன, அந்தப் படிப்புகளுக்கான வேலைவாய்ப்புகள் எந்த அளவில் உள்ளன என்பதை நன்கு அறிந்து கொண்டு, அதற்கு ஏற்றாற்போல மாணவர்களின் மேற்படிப்புகளை உறுதி செய்வதால், நிச்சயம் அவர்களது சிறப்பான, ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடலாம். 

இந்த வழிகாட்டி இதழில், எந்தெந்த துறைகளில் அதிகளவிலான வாய்ப்புகளும் வளர்ச்சிகளும் உள்ளன, எப்படி, எங்கே யாரை அணுகுவது போன்ற வாழ்க்கைக்கு வழிகாட்டும் விபரங்கள் பொதிந்துள்ளன. 

- பிரேம்குமார் அசோகன், கல்வி ஆலோசகர்

ARUNACHALAM