பெண்களுக்கு அதிகம் பொருத்தமான துறைகளில் ஒன்று தான் உளவியல். உளவியல் துறை சார்ந்த பி.எஸ்சி (உளவியல்) பட்டப்படிப்பு இன்று ஆண், பெண் இருபாலரும் விரும்புகிற படிப்பாக மாறியிருக்கிறது. மேலும், வேலை வாய்ப்புகளிலும் அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
மனநலம் தொடர்புடைய இந்த உளவியல் துறையில் பல பிரிவுகள் உள்ளன. கிளினிகல் சைக்காலஜி, டெவெலப்மெண்ட் சைக்காலஜி, சோஷியல் சைக்காலஜி, பொதுவான சைக்காலஜி போன்ற பிரிவுகள் உள்ளன. இவற்றில் சைக்யாட்ரிஸ்ட், சைக்கோதெரபி என இருவகை உண்டு. எம்பிபிஎஸ் படித்த மருத்துவர்கள் மட்டுமே சைக்யாட்ரிஸ்ட் மருத்துவ முறையை கையாள முடியும். சைக்கோதெரபி என்பது உளவியல் பட்டப் படிப்பு, பட்ட மேற்படிப்பு முடித்தவர்கள் கையாளும் வகை.
உளவியல் ரீதியான மற்றும் உணர்வு ரீதியான பிரச்சனைகளைப் பெற்றிருப்பவருக்கு இத்துறை மூலம் தான் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
நடத்தை முறைகளையும் மாற்றி ஒருவரை சாதாரணமான நபராக மாற்றவும் இது உதவுகிறது. சிந்திக்கும் முறைகளை சைக்கோதெரபிஸ்டுகள் மாற்றுகிறார்கள். சைக்காலஜி என்னும் உளவியலில் பட்டப் படிப்பை முடித்திருப்பவர் பட்ட மேற்படிப்பில் உளவியலின் இந்த சிறப்புப் பிரிவைப் படிக்கலாம்.
உளவியல் பட்ட மேற்படிப்பு முடித்த பின்னும் இதைப் படிக்கலாம். சைக்கியாட்ரிஸ்டுகள் கட்டாயம் எம்.பி.பி.எஸ் முடித்த டாக்டர்களாக இருக்க வேண்டும். ஆனால் சைக்கோதெரபிஸ்டுகள் உளவியல் படித்தவராக இருந்தால் போதும். இதில் கிளினிக்கல் சைக்காலஜி, இன்டஸ்ட்ரியல் சைக்காலஜி போன்ற படிப்புப் பிரிவுகள் உள்ளன. இதுபோக ஆர்ட்ஸ் சைக்கோதெரபி என்னும் பிரிவும் உள்ளது.
இது கிராபிக்ஸ் போன்ற வடிவங்களின் ரூபத்தில் பிரச்சினைகளை கையாளுவதாகும். அடுத்தவர் மேல் பரிவுச் சிந்தனை இருப்பவர்களுக்கு இது ஒரு நல்ல துறையாக அமையும். இன்றைய வேகமான வாழ்க்கை முறையில் சைக்கோதெரபிஸ்டுகள் நமக்கு அண்மையில் இருப்பதை பலர் விரும்புகிறார்கள் என்பதை இங்கே கட்டாயம் குறிப்பிட வேண்டும்.
அவ்வளவு தேவை இருக்கிறது சைக்கோதெரபிஸ்டுகளுக்கு. மும்பை பல்கலைக்கழகம், நிம்ஹான்ஸ் (பெங்களூரு) மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆகியவற்றில் இது தொடர்பான படிப்புகள் வழங்கப்படுகின்றன.
மேற்கொள்ளக் கூடிய பணிகள்
அன்றாட வாழ்வின் பிரச்னைகளின் வெளிப்பாடாக சராசரி மனிதருக்கு ஏற்படும் பயம், பதட்டம், அழுத்தம் போன்றவற்றை களைவதற்கும் சக மனிதருடனான உளவியல் ரீதியிலான பிரச்னைகளை நீக்குவதிலும் உதவி செய்வது, நீரிழிவு, இதய நோய்கள், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு மன உறுதி அளித்தல். போதை, குடிப்பழக்கம் மற்றும் பிற மோசமான பழக்கங்களுக்கு அடிமையானவர்களுக்கு சமூக சீர்திருத்த மையங்களின் மூலமாக உதவி செய்து அவர்களை மாற்றுதல். குடும்ப உறவுகளில் ஏற்படும் பிரச்னைகளை சரி செய்ய உதவுதல். தேர்வு நேரங்களில் மாணவர்களுக்கு உளவியல் ரீதியில் தைரியம் அளித்தல் ஆகியவை இந்தத் துறையில் மேற்கொள்ளப்படும் பணிகள்.
அதிக வேலைவாய்ப்புள்ள பிரிவுகள்
இவற்றில், கிளினிகல் சைக்காலஜி படித்தவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. மனரீதியான நோய்களைக் கண்டுபிடித்து, காரணங்களை அறிந்து குணப்படுத்துவது இத்துறையின் முக்கிய அம்சம்.
அடுத்து, கவுன்சிலிங் எனப்படும் ஆலோசனையைப் பயன்படுத்தி உணர்வு ரீதியான பிரச்னைகளையும் சமூக மற்றும் உளவியல் ரீதியிலான மன அழுத்தம், பயம் போன்ற பிரச்னைகளை சரி செய்வது இப்பிரிவினர் தான்.
உளவியல் பட்டப்படிப்புகள் (பிஎஸ்சி), பட்ட மேற்படிப்புகள் (எம்எஸ்சி) பட்டப் படிப்புகள் மட்டுமின்றி, பட்டயப் படிப்புகளும் உள்ளன. இந்தத் துறையில் பட்ட மேற்படிப்புகளுடன் சிறப்பு சான்றிதழ் படிப்புகள் அல்லது ஆய்வுப் பட்டங்கள் பெறுவோர்க்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் உள்ள பெரிய மருத்துவமனைகள், சர்வதேச பள்ளிகள், நிறுவனங்களில் நல்ல வரவேற்பு எப்போதும் இருக்கும். தமிழகத்தின் பெரும்பாலான பல்கலைக்கழகங்களில் உளவியல் பட்டப்படிப்புகள் வழங்கப்படுகின்றன.













