மருத்துவம் சார்ந்த அறிவியல் பட்டப்படிப்புகள்

SOCIAL SHARE
Pin It

மருத்துவர்களானால் தான் மருத்துவத் துறையில் சேவைகள் செய்ய முடியும் என்பது தவறான கருத்து. மதிப்பெண்கள் சற்று குறைந்தவர்கள், போதுமான நீட் மதிப்பெண்கள் பெற இயலாதவர்கள், மருத்துவர்களாக விரும்பாமல் மருத்துவ ஆய்வுகளில் ஆர்வமுள்ளோர்க்காக, ஏராளமான படிப்புகள் உள்ளன.  



செவிலியர் பட்டப்படிப்புகள்: பி.எஸ்.சி நர்சிங் (B.Sc.-Nursing) பட்டப்படிப்புகளை 5 அரசுக் கல்லூரிகள், 158 சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் 6 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் பயிலலாம். அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகளில் வேலைவாய்ப்புகள் பெறலாம்.

மருந்தாளுமைப் பட்டப்படிப்புகள்: பி. ஃபார்ம் எனும் மருந்தாளுநர் பட்டப்படிப்புகளை அரசுக் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் பயிலலாம். அரசு பதிவு பெற்ற மருந்தாளுநர் என்ற சான்றிதழுடன் தனியாக மருந்தகங்கள் வைக்கலாம், அல்லது மருத்துவமனைகளில் பணியாற்றலாம். 

பிசியோதெரபி மருத்துவப் பட்டப்படிப்புகள்: பி.பி.டி. (Bachelor of Physiotherapy - B.P.T) பட்டப்படிப்பிற்கு எப்போதும் அதிக வேலைவாய்ப்புகள் இருக்கும். முன்பெல்லாம் இந்த பட்டப்படிப்பு முடிக்கும் பிசியோதெரபிஸ்ட்களும் தங்கள் பெயருக்கு முன்பு டாக்டர் என்று போட்டுக்கொண்டிருந்தனர். ஆனால் நீதிமன்றம் தடைவிதித்த பின் டாக்டர் என்ற அடைமொழி இடுவதில்லை. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள், வெளிநாடுகளில் இந்த மருத்துவ நிபுணர்களுக்கு எப்போதும் வேலைவாய்ப்புகள் காத்திருக்கும். ஏராளமானொர் தனியாக கிளீனிக் நடத்தியும், வீடுகளுக்குச் சென்று பிசியோதெரபி சிகிச்சை அளித்தும் அதிக அளவில் சம்பாதிக்கின்றனர்.

வேலைவாய்ப்புகளை அள்ளித் தரும் அறிவியல் பட்டப்படிப்புகள்

மருத்துவத் துறையில் பின்வரும் பட்டப் படிப்புகள் பயின்றவர்களின் பங்களிப்பு எப்போதும் அவசியம். அதனால் உள்நாடு, வெளிநாடுகளில் இந்தப் படிப்புகளை முடித்தவர்களுக்கு மிகப் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் உள்ளன:

விபத்து மற்றும் அவசர சிகிச்சை தொழில்நுட்பம் (Accident & Emergency Care Technology)

ஆடியாலஜி மற்றும் ஸ்பீச் லாங்குவேஜ் பேதாலஜி (Audiology & speech Language Pathology)

இருதய பாதுகாப்பு தொழில்நுட்பம் (Cardiac Technology)

சிபிபி சிகிச்சை தொழில்நுட்பம் (Cardio Pulmonary Perfusion Care Technology)

தீவிர சிகிச்சை பிரிவு தொழில்நுட்பம் (Critical Care Technology)

சிறுநீரக டயாலிசிஸ் தொழில்நுட்பம் (Dialysis Technology)

நியூரோ எலெக்ட்ரோபிசியாலஜி (Neuro Electrophysiology)

மருத்துவ ஆய்வக தொழில்நுட்பம் (Medical  Laboratory Technology),

மருத்துவ சமூகவியல் தொழில்நுட்பம் (Medical Sociology)

அணு மருத்துவ தொழில்நுட்பம் (Nuclear Medicine Technology) 

அறுவை சிகிச்சை அறை & மயக்க மருந்து தொழில்நுட்பம் (Operation Theatre & Anaesthesia Technology)

கண் சிகிச்சை தொழில்நுட்பம் (Optometry)

மருத்துவர்களின் உதவியாளர் (Physician Assistant)

ப்ராஸ்தெடிக்ஸ் மற்றும் ஆர்தோடிக்ஸ் (Prosthetics&Orthotics)

ரேடியாலஜி இமேஜிங் தொழில்நுட்பம் (Radiology Imaging Technology)

ரேடியோதெரபி தொழில்நுட்பம் (Radiotherapy Technology)

மருத்துவ பதிவேடு அறிவியல் (Medical Record Science)

சுவாச சிகிச்சைத் துறை (Respiratory Therapy)

அனைத்து மருத்துவமனைகளிலும், ஆய்வுக்கூடங்களிலும் மேற்கண்ட படிப்புகளை முடித்தவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்புகள் உள்ளன. 

பொது மருத்துவம் மட்டுமின்றி, பல் மருத்துவம், கண் மருத்துவம் என ஒவ்வொரு துறைக்குமான பட்டப்படிப்புகள் உள்ளன.  உதாரணமாக:

பல்சிகிச்சை தொழில்நுட்பம் (Dental Hygienist, Dental Mechanic)

பல் அறுவை சிகிச்சை உதவியாளர் (Dental Operating Room Assistant)

இது மட்டுமின்றி ஏராளமான பட்டப்படிப்புகள் உள்ளன. அறிவியல் தொடர்பான பி.எஸ்.சி., பட்டப்படிப்புகளை முடித்தவர்கள், மேற்கண்ட துறைகளில் பட்டயப் படிப்புகளை முடித்து, வேலைவாய்ப்புகளைப் பெறலாம் .

ப்ளஸ் 2 தேர்வுகள் எழுதி முடித்ததும், மேற்கண்ட மருத்துவப் படிப்புகள் எந்தெந்த கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படுகிறது, மாணவர் சேர்க்கை விபரங்கள் ஆகியவற்றை விசாரிப்பது நல்லது. இது போன்ற அனைத்து தகவல்களையும் https://www.tnmgrmu.ac.in இணையதளம் சென்று அறிந்து கொள்ளலாம். 

இவற்றில் பி.எஸ்சி படிப்புகள் நான்கு ஆண்டுகளும், பட்டயப்படிப்புகள் இரண்டரை ஆண்டுகளும் நடைபெறும். தமிழகத்தில் 500 மருத்துவக் கல்வி நிறுவனங்கள் தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் பங்களிப்புடன் இந்தப் படிப்புகள் நடைபெறுகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக, மருத்துவராக வேண்டும் என்ற குறிக்கோள் நிறைவேறாமல் வேறு துறைகளை மாணவர்கள் தேர்வு செய்வதால், மேற்கண்ட மருத்துவ துறை படிப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு இல்லை. கடந்த ஆண்டு மட்டும் 50 சதவீதத்துக்கும் மேலான மருத்துவ பட்டப்படிப்பு இடங்கள் காலியாக இருந்தன. இந்த படிப்புகளுக்கு வேலைவாய்ப்புகள் உலகம் முழுக்க அதிகமாக இருப்பதால், மாணவர்கள் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம். மேற்கண்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நடைபெறும்.

அரசு பல்கலைக்கழகங்கள் மட்டுமின்றி, பல்வேறு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் செவிலியர், பிசியோதெரபி, மருந்தாளுநர் உள்ளிட்ட அறிவியல் பட்டப்படிப்புகள், பட்டயப்படிப்புகள், பல்வேறு சான்றிதழ் படிப்புகளும் இடம்பெற்றிருக்கின்றன. இப்படிப்புகளில் ஒன்றைத் தேர்வு செய்து மருத்துவத்துறையில் உடனடி வேலைவாய்ப்பைப் பெறமுடியும்.

மனிதர்களுக்கான மருத்துவம் தாண்டி, கால்நடைகளுக்கான மருத்துவப் படிப்புகளுக்கும் நல்ல வேலைவாய்ப்புகள் உள்ளன. கால்நடை அறிவியல் படிப்பு (B.V.Sc.) சென்னை வேப்பேரியில் உள்ள கால்நடை மருத்துவக் கல்லூரியிலும், இந்தப் பல்கலையின் கீழ் இயங்கும் நாமக்கல் கல்லூரியிலும் சொல்லித் தரப்படுகிறது. தவிர, B.F.Sc. எனப்படுகிற மீன்வளம் சார்ந்த விஷயங்களை பட்டப் படிப்பாக சொல்லித் தருவதற்கென, தூத்துக்குடியில் அரசு மீன்வளக் கல்லூரி ஒன்றும் உள்ளது. இந்தக் கல்லூரியும், கால்நடை மருத்துவப் பல்கலையின் கீழ்தான் செயல்படுகிறது. இது, சமீப ஆண்டுகளில் வரவேற்பை பெற்றுவரும் இன்னொரு புதிய படிப்பாகும்.

நேரடியாக மருத்துவம், மருந்தாளுகை தொடர்பான படிப்புகள் மட்டுமில்லாமல், தற்போதுள்ள சூழலில் மருத்துவ உளவியல், ஊட்டச்சத்து உள்ளிட்ட பல்வேறு படிப்புகள் சில ஆண்டுகளாகவே பிரபலமாகி வருகின்றன. இது போன்ற படிப்புகளை முடித்தவர்களுக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகள், மனநல மருத்துவமனைகள், நிறுவனங்கள், வெளிநாடுகளில் சிகப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது.

ARUNACHALAM