விடைத்தாள் நகல் பெறலாம்
பிளஸ் டூ மாணவர்கள் நன்றாக தேர்வு எழுதி இருப்பார்கள். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்கு மதிப்பெண்கள் வந்திருக்காது. அந்த சூழலில் விதியை நொந்து கொள்வதை விட, தாங்கள் எழுதிய விடைத்தாள் நகலை வாங்கி சரிபார்க்கலாம். தங்களது விடைத்தாளின் நகலை அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து வாங்கி சோதனை செய்யலாம்.
இந்த விடைத்தாள் பிரதியை பெறுவதற்கு ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கலாம். தாங்கள் படித்த பள்ளிகளில் இருந்தும் விண்ணப்பங்களை பெறலாம். இதற்கான உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்தால், விடைத்தாள் நகல்களைப் பெறலாம். தவறுகள் நடந்து இருப்பின் அது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககத்தில் முறையிடலாம். இதற்கு பள்ளி நிர்வாகம் உதவி செய்யும்.
மதிப்பெண் மறுகூட்டல் செய்யலாம்
ப்ளஸ் டூ முடிக்கும் மாணவர்கள், தாங்கள் குறிப்பிட்ட பாடத்தில் குறைவான மதிப்பெண்கள் பெற்றிருப்பதாக சந்தேகம் கொண்டால், அந்தப் பாடத்தில் எழுதிய தேர்வு மதிப்பெண்களை மறுகூட்டல் செய்ய விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் அந்தந்த பள்ளிகளிலேயே கிடைக்கும். மறுகூட்டலுக்கான கட்டணத்தை பள்ளிகளிலேயே கட்டலாம். சில நேரங்களில் கூடுதலாக 10 முதல் 20 மதிப்பெண்கள் கூட கிடைக்கும். பல நேரங்களில் மாணவர்கள் மருத்துவம், பொறியியல் படிப்புகளில் சேர முடியாமல் தவிக்கும் போது, இதுபோன்ற மறுகூட்டலில் மதிப்பெண்கள் கூடுதலாக கிடைத்து, விரும்பிய பாடத்தைத் தேர்வு செய்த நிகழ்வுகளும் உண்டு. ஆதலால் மதிப்பெண்கள் குறைவாக வந்திருக்கிறது என்ற சந்தேகம் வந்தால் தாராளமாக மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம்.
மாற்றுச் சான்றிதழ் பெறலாம்
கிராமங்களிலிருந்து மற்ற மாவட்டங்களிலிருந்து தொலைதூர பயணம் செய்து, மேற்படிப்புக்கு விண்ணப்பிக்கும்போது ஏராளமான மாணவர்கள் பிளஸ் டூ மதிப்பெண் சான்றிதழ்களை தொலைக்கும் சம்பவங்கள் அடிக்கடி நிகழ்கின்றன. பல நேரங்களில் சான்றிதழ்கள் கிடைப்பதே இல்லை. இந்த சூழலில் உடனே காவல் நிலையத்தில் புகார் அளிக்க வேண்டும். விசாரணையின் முடிவில் சான்றிதழ் கிடைக்கவில்லை எனில், அதைத் தெரிவிக்கும் வகையில் காவல்நிலையத்தில் ஒரு சான்றிதழ் கொடுப்பார்கள். அதை வைத்துக்கொண்டு, தாங்கள் படித்த பள்ளியின் தலைமை ஆசிரியரின் பரிந்துரைக் கடிதத்தோடு உரிய கட்டணத்தையும் இணைத்து, அந்தந்த மாவட்ட கல்வி அதிகாரிக்கு விண்ணப்பிக்க வேண்டும். இதன்பின் உரிய செயலாக்கங்கள் நடந்து முடிந்த பின், மாணவர்களுக்கு புதிதாக மதிப்பெண் சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறலாம்
மதிப்பெண் சான்றிதழ்களைத் தொலைத்த மாணவர்கள், காவல் நிலையத்தில் புகார் அளித்து விட்டு இடைப்பட்ட காலத்தில் ஏதேனும் வாய்ப்புகள் வரும் பட்சத்தில், தற்காலிக சான்றிதழை அரசு தேர்வுகள் இயக்ககத்தில் இருந்து பெறலாம். இதற்கு சர்டிபிகேட் காபி ஆஃப் மார்க் ஷீட் என்று பெயர். இதுகுறித்து விண்ணப்பிக்க அல்லது மேலதிக விபரங்கள் தெரிந்து கொள்ள, அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியரோ அல்லது அரசு தேர்வுகள் இயக்கத்தையோ நாடலாம்.
சான்றிதழில் பெயர் மாற்றங்கள்
பல பேர் பல்வேறு காரணங்களுக்காக பெயரில் சில மாற்றங்களைச் செய்வார்கள். அல்லது இனிஷியலில் சில திருத்தங்களையும் மேற்கொள்வார்கள். அப்படிச் செய்யும்போது, பள்ளி சான்றிதழில் அந்த திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நினைத்தால், அதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டும். முதலில் உங்கள் பெயர் மாற்றத்தை அரசிதழில் பதியவேண்டும். அதற்கு தமிழக அரசின் எழுதுபொருள் அச்சுத் துறை வழங்கும் விண்ணப்பத்தில் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். அதில் பெயர் மாற்றத்திற்கான அல்லது பெயர் திருத்தத்திற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும். விண்ணப்பத்துடன் உரிய கட்டணத்தை செலுத்தி அதற்கான ஆவணங்களையும் இணைத்து அனுப்பலாம். அதன்பின் சரிபார்ப்புக்கு பிறகு அரசிதழில் பெயர் மாற்றம் அல்லது திருத்தம் குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். அந்த அரசிதழ் நகலையும் இணைத்து அரசு தேர்வுகள் இயக்ககத்தை அணுகி, சான்றிதழில் பெயரை அதிகாரபூர்வமாக மாற்றிக் கொள்ளலாம். இது குறித்து மேலதிக விபரங்களுக்கு www.stationaryprinting.tn.gov.in இணையதளத்தை காணலாம்.













