நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் டிசைன் நுழைவுத்தேர்வு
பன்னாட்டளவில் டிசைனிங் துறையில் உள்ளவர்களுக்கு, மிகப்பெரிய அளவில் வேலை வாய்ப்புகள் உள்ளன. டிசைனிங் துறையில் ஆர்வமுள்ளவர்கள் என்ஐடி எனும் நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிசைன் பயிற்சி மையத்தில், நான்காண்டு இளங்கலை பட்டப்படிப்பை பயிலலாம். ஃபர்னிச்சர் டிசைன், கிளாஸ் டிசைன், கிராபிக் டிசைன், டெக்ஸ்டைல் டிசைன், வீடியோ கம்யூனிகேஷன் ஆகிய சிறப்புப் பாடங்களை எடுத்து பயிலலாம்.
பட்டப்படிப்புகள் மட்டுமின்றி பட்டயப் படிப்புகளும் இம்மையத்தில் கற்றுத்தரப்படுகின்றன. பிளஸ்-2 முடித்தவர்கள் இப்படிப்பில் சேரலாம். அனைத்து மாணவர்களுக்கு பொதுவான நுழைவுத் தேர்வு நடத்தப்படும். தேர்வு குறித்த முழு விவரங்களுக்கு www.nid.edu இணையதளத்தை அணுகலாம்
சட்டப் படிப்புக்கான நுழைவுத்தேர்வு
ப்ளஸ் டூ முடித்த பின் சட்டத் துறையில் ஈடுபட்டு, வழக்கறிஞர்களாக விரும்பும் மாணவர்களுக்கான க்ளாட் (CLAT) என்ற பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. தேசிய சட்டப் பள்ளி எனும் நேஷனல் லா ஸ்கூல் மூலம் நடத்தப்படும் இந்த பொது நுழைவுத் தேர்வில், கணிதம் சட்டம் குறித்த அடிப்படை அறிவு, ஆங்கிலம் ஆகியவற்றின் மீது கேள்விகள் கேட்கப்படும். தேர்வு செய்யப்படும் மாணவர்கள், 5 ஆண்டு ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புகளில் சேரலாம். மேலும் விபரங்களுக்கு www.clat.ac.in இணையதளத்தைப் சென்று பார்க்கவும்
ஹோட்டல் மேனேஜ்மென்ட் நுழைவு தேர்வு
சர்வதேச அளவில் ஹோட்டல்கள், பன்னாட்டு நிறுவனங்கள் என எங்கெங்கு காணினும் இந்த துறையினருக்கு வேலை வாய்ப்புகள் எப்போதும் காத்திருக்கின்றன. தொய்வில்லாத, எப்போதும் வளர்ச்சியைக் கொண்ட இந்தத் துறையில் ஈடுபட விரும்பும் மாணவர்கள், தேசிய அளவிலான நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். மத்திய சுற்றுலாத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான, நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் அண்ட் கேட்டரிங் டெக்னாலஜி மையத்தில், பிஎஸ்சி ஹாஸ்பிடாலிட்டி அண்ட் ஹோட்டல் மேனேஜ்மெண்ட் உள்பட பல்வேறு பட்டப் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளில் சேர விரும்புவோர் எழுதவேண்டிய நுழைவுத்தேர்வில், பொதுஅறிவு, நாட்டுநடப்பு, ஆங்கில மொழித் திறன், பகுப்பாய்வுத் திறன் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் கேள்விகள் கேட்கப்படும். நுழைவுத் தேர்வு குறித்த மேலும் விவரங்களுக்கு www.nchmct.org இணையதளத்தை காணவும்.
நாட்டின் பாதுகாப்புத் துறைக்கான நுழைவுத் தேர்வு
நாட்டின் பாதுகாப்புத் துறையில் பணியாற்ற விரும்பும் மாணவர்களுக்காக, என்டிஏ நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ராணுவம் மற்றும் கப்பற்படையில் சேர விரும்பும் பிளஸ் டூ படித்த மாணவர்கள், மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வை எழுத வேண்டும். படிப்பதற்கு கட்டணம் ஏதும் செலுத்த வேண்டியதில்லை. இங்கு சேரும் மாணவர்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படும். மாணவர்களின் படிப்புகளைப் பொறுத்து பிஏ அல்லது பிஎஸ்சி பட்டங்களை ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகம் வழங்கும். இது ராணுவத்தினருக்கான படிப்புகள்.
கப்பல் படையில் சேர நான்காண்டு பிடெக் படிப்பில் சேர வேண்டும். பொது அறிவு, கணிதம் ஆகியவற்றில் அதிகளவு கேள்விகள் கேட்கப்படும். நாட்டின் பாதுகாப்பு குறித்த பல்வேறு கேள்விகளும் தேர்வில் இடம்பெறும். நுழைவுத்தேர்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, உடற்தகுதி தேர்வு நடத்தப்படும். அதில் தகுதி பெறும் மாணவர்கள் மட்டுமே பயிற்சி மையத்தில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். நுழைவுத்தேர்வு குறித்த மேலும் விவரங்களுக்கு, www.upsconline.nic.in இணையதளத்தை காணவும்













