மருத்துவம் படிக்க முயலும் அத்தனை மாணவர்களும் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு (நீட் – NEET) எழுதியாக வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அகில இந்திய அளவில் நடைபெறும் இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள், மத்திய, மாநில அரசுகளின் இட ஒதுக்கீடுகள், தனியார் பல்கலைக்கழகங்களில் மருத்துவத்துக்கான சீட்டைப் பெறலாம்.
கிராமப்புறங்களிலுள்ள மாணவர்களுக்கும் பெற்றோர்க்கும் இன்றளவும் நீட் தேர்வின் விதிமுறைகள், கட்டுப்பாடுகள், தகுதிகள் பற்றிய விபரங்கள் முழுமையாகத் தெரிவதில்லை. அவர்களுக்காக
வயது வரம்பு
ப்ளஸ் 2 முடித்தவர்கள் நீட் தேர்வை எழுதத் தகுதியானவர்கள். 17 வயது முதல் 25 வயது வரையிலான மாணவர்கள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதாவது 31.12.2003 அன்றோ அதற்கு முன்னதாகவோ விண்ணப்பதாரர்கள் பிறந்திருக்க வேண்டும். எஸ்சி/எஸ்டி/ஓபிஎசி மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 5 ஆண்டுகள் விதிவிலக்கு உண்டு.
எப்படி விண்ணப்பிப்பது?
டிசம்பர் 2-ம் தேதி தொடங்கிய விண்ணப்பத் தேதி, டிசம்பர் 31-ம் தேதி உடன் நிறைவு பெறுகிறது. ntaneet.nic.in என்ற இணையதளத்தில் தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
தமிழில் எழுதுவோர் கவனத்துக்கு
தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி உள்ளிட்ட 11 மொழிகளில் ஓஎம்ஆர் முறையில் தேர்வு நடைபெறுகிறது. கருப்பு பால் பாயிண்ட் பேனா கொண்டு சரியான விடை உள்ள வட்டத்தை நிரப்ப வேண்டும். தென்னிந்திய மொழிகளில் தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் மட்டும் தேர்வு நடைபெறும்.
ஆங்கிலத்தில் தேர்வு எழுதுபவர்களுக்கு ஆங்கிலத்தில் கேள்விக் குறிப்பேடு வழங்கப்படும். தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் எழுதுபவர்களுக்கு சம்பந்தப்பட்ட மொழியோடு, ஆங்கிலக் குறிப்பேடும் அளிக்கப்படும்.
மொழிபெயர்ப்புக் கேள்வியில் குழப்பம் இருந்தால், ஆங்கிலக் குறிப்பேட்டுக் கேள்வியே இறுதியானது. தமிழில் தேர்வெழுத விரும்புபவர்கள் தமிழ்நாட்டில் அமைக்கப்படும் தேர்வு மையங்களில் மட்டுமே எழுத முடியும்.
மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போதே நாம் தேர்வெழுத விரும்பும் 4 நகரங்களைக் கவனத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். குறிப்பாக நகரங்களின் பின்கோடுகளைச் சரியாகக் குறிப்பிட வேண்டும். இதில் குழப்பம் ஏற்பட்டாலோ, 4 நகரங்களைக் குறிப்பிடத் தவறும்போதோ, மற்ற பிற நகரங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்படும் என்று நீட் தேர்வை நடத்தும் என்டிஏ தெரிவித்துள்ளது.
என்னென்ன விதிமுறைகள்?
01.09.2019 அன்றோ அல்லது அதற்குப் பிறகோ எடுக்கப்பட்ட புகைப்படத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வெள்ளைப் பின்னணியில், 80% முகம் தெரிவது போலவும் காதுகள் தெளிவாகத் தெரியும்படியும் புகைப்படம் இருக்க வேண்டும். புகைப்படம் எடுக்கப்பட்ட தேதி, படத்தில் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும்.
தொடர்ந்து கண்ணாடி அணிபவருக்கு மட்டுமே, கண்ணாடியை அணிந்து புகைப்படமெடுக்க அனுமதியுண்டு. புகைப்படம் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். வேறு நபர்களின் புகைப்படங்களைப் பதிவேற்றம் செய்யும்பட்சத்தில், கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்படும்.
வெள்ளைக் காகிதத்தில் கேப்பிடல் எழுத்துகளாக இல்லாமல், கருப்பு பேனா மூலம் கையெழுத்து போட வேண்டும். அதை ஸ்கேன் செய்து விண்ணப்பத்தில் பயன்படுத்த வேண்டும்.
அதேபோல இடது கட்டைவிரல் ரேகையையும் நீல மையால் நிரப்பி வெள்ளைக் காகிதத்தில் வைத்து, ஸ்கேன் செய்வது அவசியம்.
10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற சான்றிதழையும் 100 kb முதல் 400 kb என்ற அளவில் ஸ்கேன் செய்து பயன்படுத்த வேண்டும்.
முக்கியக் குறிப்பு: விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது முகவரி, பின்கோடு, மொபைல் எண், இ-மெயில் முகவரி சரியாக உள்ளதா என்பதை கவனத்துடன் சரிபார்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.













