ஆந்திராவில் உள்ள விஜயநகரம் மாவட்டத்தில், 400 ஆண்டுகள் பழமையான, ராமதீர்த்தம் கோவில் உள்ளது. மலை மீது அமைந்துள்ள இந்த கோவிலில் உள்ள ராமர் சிலையை, விஷமிகள் சிலர், சமீபத்தில் சேதப்படுத்தினர். அதேபோல் அங்குள்ள ராஜ மூர்த்தி சுப்பிரமணிய சுவாமி கோவிலிலும் சேதப்படுத்தப்பட்டது. அடுத்த சில நாட்களில் விஜயவாடாவில் உள்ள சீதாராமர் கோவிலில் உள்ள களிமண்ணால் ஆன சீதா தேவி சிலை, மற்றொரு கோவிலில் இருந்த கேது சிலை ஆகியவை சேதப்படுத்தப்பட்டுள்ளன. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவில்களில் சிலைகள் சேதப்படுத்தப்படுவது கடந்த சில மாதங்களாகவே ஆந்திராவில் தொடர்ந்து நடைபெறும் சம்பவங்களாக அரங்கேறி வருகிறது. இதற்கு தெலுங்கு தேசம், பா.ஜ., உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
ஆந்திராவில் கடந்த 18 மாதங்களில் இதுவரை 127 கோவில்களில் இவ்வாறு சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. இதில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 5, 6 கோவில்களில் இச்சம்பவங்கள் நடந்துள்ளன. தொடர்ந்து நடக்கும் சம்பவங்களை கண்டித்தும், கோவில்களில் உள்ள ஹிந்து சிலைகளை பாதுகாக்குமாறும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.
இது குறித்த சம்பவங்களை டுவிட்டரில் பகிர்ந்து பலரும் கோவில்களை காப்பாற்றுமாறு #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக்கில் குரல் கொடுத்து வருகின்றனர். சிலர், கடந்த செப்டம்பரில் 60 ஆண்டு பழமையான பாரம்பரியமிக்க கோவில் தேர் தீவைக்கப்பட்டது, 12ம் நூற்றாண்டு நந்தி சிலை உடைப்பு என அடுத்தடுத்து கோவில்களில் சம்பவங்கள் நிகழ்வதால், ஆந்திராவில் கோவில்களுக்கு ஆபத்து' என பதிவிட்டுள்ளனர்.
ஹிந்து கோவில்களில் விஷமிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்த செயலை கண்டித்தும், டுவிட்டரில் பகிர்ந்து வருவதால் #SaveTemplesInAP என்னும் ஹேஸ்டேக் டிரெண்டானது. இதுவரை ஒரு லட்சத்து 41 ஆயிரம் பேருக்கு மேல் இந்த ஹேஸ்டேக் மூலமாக ஆந்திராவில் கோவில்களை காப்பாற்றுமாறு குரல் கொடுத்து வருகின்றனர்.













