அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு பெண் விமானிகளால் மட்டும் ஏர் இந்தியா விமானம் ஒன்று இயக்கப்பட்டது. பெங்களூரு வந்தடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அமெரிக்காவின் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து பெங்களூரு வரையிலான 16,000 கி.மீ., நீளமுடைய சவால் நிறைந்த பாதையை பனிபடர்ந்த வடதுருவத்தின் வழியாக கடக்க வேண்டும். இத்தகைய சவால் நிறைந்த தூரத்தை கடப்பதற்கு அதிகப்படியான அனுபவமும், திறமையும் கூடிய தொழில்நுட்பத்தை நன்றாக பயன்படுத்தக் கூடிய விமானிகளால் மட்டுமே முடியும். பல காலமாக இத்தகைய நீண்ட விமான பயணத்திற்கு ஆண் விமானிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
இந்நிலையில் வரலாற்றில் முதன் முறையாக பெண் விமானிகள் கூட்டாக இணைந்து வட துருவத்தின் மேலான இந்த நீளமான பாதையில் விமானத்தை இயக்கினர். விமானப் பயணத்தை தலைமையேற்று வழிநடத்தும் பொறுப்பு சோயா அகர்வால் என்ற பெண் கேப்டனிடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 9ம் தேதி இரவு 8.30 மணிக்கு சான்பிராஸ்கோவில் இருந்து ஏர் இந்தியா விமானம் நான்கு பெண் விமானிகள் மற்றும் 238 பயணிகளுடன் புறப்பட்டது. பின்னர் வடதுருவத்தைக் கடந்து அட்லாண்டிக் கடல் வழியாக சுமார் 17 மணி நேரம் தொடர்ச்சியாகப் பயணித்த விமானத்தை இன்று அதிகாலை 3.20 பெங்களூர் கெம்பகவுடா சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாக தரை இறக்கியுள்ளனர் சோயா அகர்வால் தலைமையிலான பெண் விமானிகள்.
238 பயணிகளுடன் பாதுகாப்பாக பெங்களூரு வந்து இறங்கி வரலாற்று சாதனைப் படைத்த கேப்டன் சோயா உள்ளிட்ட நான்கு பெண் விமானிகளுக்கு கெம்பகவுடா சர்வதேச விமான நிலைத்தில் ரோஜாப் பூ கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இது குறித்து சோயா அகர்வால் கூறுகையில், "வட துருவத்தின் மேல் வெற்றிகரமாக பறந்துள்ளோம். சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் மற்றும் ஏர் இந்தியா நிறுவனம் என்மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதுவும் வட துருவத்தின் மீது உலகின் மிக நீண்ட விமானப் பாதையில் பறந்தது மகிழ்ச்சிக்கு உரியது. என்னுடன், அனுபவம் வாய்ந்த தன்மாய் பாபகரி, ஆகான்ஷா சோனவனே மற்றும் சிவானி மன்ஹாஸ் ஆகிய பெண் விமானிகள் இருப்பது மிகவும் பெருமையளிக்கிறது. எந்தவொரு தொழில்முறை விமானிக்கும் இது பெரும் சாதனை கனவாகும்” என்று கூறியுள்ளார்.













