ஆந்திரா மாநிலம், சித்தூர் அருகே மூட நம்பிக்கையின் உச்சகட்டமாக படித்த பெற்றோர் தனது மகள்களை பலி கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் புருஷோத்தம் நாயுடு - பத்மஜா. புருஷோத்தம் அரசு கல்லூரியில் வேதியியல் இணை பேராசிரியராக வேலைபார்த்து வருகிறார். எம்.எஸ்.சி கணிதத்தில் தங்கப்பதக்கம் வென்ற மனைவி பத்மஜா தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றி வருகின்றார்.
இவர்களது மகள்கள் அலெக்யா (27), சாய் திவ்யா (22).
கடந்த சில மாதங்களாக இவர்களது வீட்டில் பூஜைகள் நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை தனது இரண்டு மகள்களை உடற்பயிற்சி செய்யும் இரும்பு டம்பிள்ஸ் மூலம் அடித்து கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
அலறல் சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்று போலீசார் விசாரணை நடத்தியதில், ஆன்மீகத்தில் கொண்ட அதீத ஈடுபட்டால், மூடநம்பிக்கையில் இதுபோன்று கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளனர். இதில் வேறு ஏதாவது காரணம் உள்ளதா என்பது குறித்து தம்பதியிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
எதற்காக இந்த சம்பவம் நடந்தது என்பது என்பது பற்றிய முழு விவரங்களையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். தம்பதிகளிடம் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர்கள் எழுந்திருப்பார்கள் என்றும் அவர்களுக்கு ஒரு நாள் நேரம் கொடுக்குமாறு கேட்டுக்கொண்டதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.













