`மக்கள் நீதி மய்யம் கட்சி ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்குச் சம்பளம் அளிக்கப்படும்' என்று கமல்ஹாசன் பேசியுள்ளார்.
கமல்ஹாசனின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்.பி-யுமான சசி தரூர் பாராட்டியிருந்தார். `இல்லத்தரசிகளுக்கு அரசாங்கம் ஊதியம் வழங்க வேண்டும் என்ற திட்டம் வரவேற்கத்தக்கது. இதனால் சமூகத்தில் இல்லத்தரசிகளின் மதிப்பும் அதிகாரமும் உயரும்” என்று சசி தரூர் குறிப்பிட்டிருந்தார்.
சசி தரூரின் ட்வீட்டை மேற்கோள் காட்டி கமல்ஹாசனின் திட்டத்துக்கு பிரபல பாலிவுட் நடிகை கங்கணா ரணாவத் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், “எங்களது அன்புக்குரியவர்களிடம் நாங்கள் கொள்ளும் உறவுக்கு விலை அட்டையை ஒட்ட வேண்டாம். எங்கள் பிள்ளைகளை நாங்கள் வளர்ப்பதற்கு எங்களுக்கு ஊதியம் வேண்டாம். எல்லாவற்றையும் தொழிலாகப் பார்க்காதீர்கள். எங்கள் வீட்டில் நாங்கள் ராணியாக இருப்பதற்கு விலை நிர்ணயம் எதற்கு? இதற்குப் பதிலாக உங்களை நேசிக்கும் பெண்ணை அன்பு, காதல் மற்றும் மதிப்புடன் நடத்துங்கள்” என்று பதிவிட்டுள்ளார்.
ஆதரவாகவும் எதிராகவும் பல குரல்கள் ஒலிக்க, இல்லத்தரசிகளின் வேலைகளுக்கு ஊதியம் வழங்குவது சாத்தியமா? இதுகுறித்து சிலரிடம் கேட்டபோது...
“பொதுவாக, வீட்டில் பெண்கள் செய்யும் வேலைகள் மதிப்பீடு செய்யப்படுவதே இல்லை. மாறாக அவர்களின் உழைப்பு அலட்சியப்படுத்தப் படுகிறது. அவர்கள் செய்யும் வேலைகளால் தான், வீட்டு ஆண்களும் பிள்ளைகளும் வெளியில் வேலைக்குச் சென்று சம்பாதித்து குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்த முடிகிறது என சில பெண்கள் தெரிவித்தனர்.
“இல்லத்தரசிகளுக்கு சம்பளம் வழங்கும் திட்டம் குறித்த விவாதங்கள் பல ஆண்டுகளாக நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இந்தத் திட்டத்தை நடை முறைப்படுத்துவதன் மூலம் பொருளாதார ரீதியில் எந்த மாற்றமும் நிகழ்ந்துவிடப் போவதில்லை. மாறாக, பெண்களின் திறமையும், அவர்களின் உழைப்பும்தான் மட்டுப்படுத்தப்படும். ‘அரசாங்கம்தான் இல்லத்தரசிகளின் வேலைக்கு சம்பளத்தை தீர்மானித்திருக்கிறதே, எதற்காக வேலைக்குப் போய் சம்பாதிக்க வேண்டும்’ என்று படித்த பெண்கள்கூட நினைக்கலாம். அல்லது ஆண்களும், அரசு கொடுக்கும் சம்பளத்தை வாங்கிக்கொண்டு, தன் மனைவியை வேலைக்கு அனுப்ப மறுக்கலாம்.இப்படியான சூழல் உருவாகும்போது, பெண்கள் மீண்டும் சமையலறைகளில் முடங்கிவிட வாய்ப்பு இருக்கிறது. இதற்குப் பதிலாக அவர்களின் திறனை வளர்க்கும், வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் பயிற்சிகள் வழங்குவது, மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் நிதியுதவி செய்து அவர்களின் தொழில்முனையும் ஆர்வத்தை ஊக்கப்படுத்துவது போன்றவற்றைச் செய்யலாம்” என வங்கி ஆலோசகர் தெரிவிக்கிறார்.
ஹாங்காங்கில் வீட்டு வேலை செய்யும் இல்லத்தரசிகளுக்கு தனியாக ஊதியம் கிடையாது. அங்கே பெரும்பாலான பெண்கள் வேலைக்குப் போகிறவர்கள். கணவனும் மனைவியும் வேலைக்குப் போவதால், வீட்டு வேலைகளைப் பார்க்க பணிப்பெண்களை அமர்த்திக்கொள்ளலாம். பணிப்பெண்கள் பெரும்பாலும் பிலிப்பைன்ஸ், இந்தோ னேசியா நாடுகளைச் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களது குறைந்த பட்ச ஊதியம் மற்றும் பணிக்கால விதிகளுடன்கூடிய ஒப்பந்தம், விசா விண்ணப்பத்துடன் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.பணிப்பெண்களை வேலைக்கு வைக்காதவர்கள், பேறுகால விடுப்பு முடிந்து பணிக்குப் போகும்போது குழந்தைகளைக் காப்பகங்களில் விட்டுச் செல்லலாம். அரசு காப்பகங்களில் கட்டணம் இல்லை. சில வீடுகளில் தாத்தா பாட்டிகள் பிள்ளைகளைப் பகல் வேளைகளில் பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் செலவழிக்கிற நேரத்துக்கு ஊதியம் வழங்கப்பட வேண்டும். இது விதியில்லை. சீன கலாசாரத்திலேயே உள்ளது.
ஹாங்காங்கில் கணவர்கள் வீட்டு வேலைகளைப் பகிர்ந்துகொள்வார்கள். சாக்கு போக்கு சொல்லித் தப்பிக்க முடியாது. ஏனெனில், அங்கே கணவர்களைத் தேர்ந்தெடுப்பது பெண்கள்தாம். கணவருக்கும் இரண்டு மாதங்கள் வரை பேறு கால விடுப்பு கிடைக்கும். மனைவி விரைவில் பணிக்குத் திரும்ப வேண்டியிருந்தால், கணவனின் விடுப்பை நிறுவனங்கள் அங்கே நீட்டித்துத் தருகிறார்கள்.
‘’இல்லத்தரசிகளுக்கு ஊதியம் வழங்கும் முறை ஐரோப்பிய நாடுகளில் இல்லை. இங்கு பெண்கள் வேலைக்குச் செல்லாமல் இருக்க மாட்டார்கள் என்பதால், பெண்களுக்குத் தேவையான மற்ற எல்லா உதவிகளையும் அரசாங்கம் செய்துவருகிறது. உதாரணத்துக்கு, கருத்தரித்த பெண் சில மாதங்கள் ஓய்வில் இருக்க வேண்டும். கணவர் வேலைக்குச் செல்ல வேண்டும். அந்த நேரத்தில் அவர்களுக்கு நிதி உதவி தேவைப்பட்டால், அரசாங்கத்திடம் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ளலாம்.
குழந்தையைக் காப்பகத்தில் விடுவதற்கான பண உதவியையும் அரசாங்கம் வழங்குகிறது. ஒருவேளை குழந்தை மாற்றுத்திறனாளியாக இருந்து, அம்மா எந்நேரமும் அக்குழந்தையுடன் இருக்க வேண்டும் என்ற நிலையில், அந்தப் பெண்ணால் வேலைக்குச் செல்ல முடியாது. இதற்கும் அரசாங்கம் உதவி செய்யும். வேலையில்லாமல் அடுத்த வேலைக்கு முயன்று கொண்டிருக்கும் சில மாதங்களுக்கும் அரசாங்கத்திடம் இருந்து பெண்கள் நிதி உதவி பெற்றுக்கொள்ளலாம்.
இப்படி, தேவைப்படுகிற கால கட்டத்தில்தான் அரசாங்கம் உதவிகளைச் செய்ய வேண்டுமே தவிர, அவர்களின் அன்றாட வீட்டு வேலைகளைக் கணக்கிட்டு, அதற்கு ஊதியம் வழங்குவது பெண்களின் வளர்ச்சியைத் தடை செய்துவிடும். இல்லத்தரசிகளுக்கு அரசாங்கமே ஊதியம் கொடுக்க ஆரம்பித்தால் ‘நீ வீட்டுவேலை மட்டும் செஞ்சா போதும்’ என்று கணவரும், கணவரின் குடும்பத்தாரும் பெண்களை வீட்டுக்குள் உட்கார வைத்துவிடலாம் என பெரும்பாலானோர் தெரிவித்துள்ளனர்.













