நேதாஜி படத்திற்கு பதில் நடிகரின் படத்தை திறந்த குடியரசுத் தலைவர்

SOCIAL SHARE
Pin It

'President of India' இந்திய அளவில் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது.

ஜனவரி 23ம் தேதி நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125-வது பிறந்தநாள் நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. இந்திய விடுதலை போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய சுபாஷ் சந்திர போஸை பெருமைப்படுத்தும் வகையில் ஜனாதிபதி மாளிகையில் அவரது உருவப்படத்தைத் திறந்துவைத்தார் இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த். இந்தப் படங்கள் அவரது அதிகாரப்பூர்வ சமூக வலைதள கணக்குகளில் வெளியிடப்பட்டது.

ஆனால், அது உண்மையில் சுபாஷ் சந்திர போஸின் படமல்ல, அது அவர் வேடத்தில் நடித்த நடிகர் ஒருவரின் படம் என திரிணமுல் காங். உள்ளிட்ட பல்வேறு கட்சி தலைவர்கள் சமூகவலைதளங்களில் பதிவிட்டனர். 2019-ல் ஆண்டு ஸ்ரீஜித் முகர்ஜி இயக்கத்தில் சுபாஷ் சந்திர போஸின் மர்மமான மரணம் பற்றி 'கும்னாமி' என்னும் பெங்காலி திரைப்படம் வெளியானது. இதில் சுபாஷ் சந்திர போஸாக நடித்தார் ப்ரோசென்ஜித் சாட்டர்ஜி. இவரது படத்தைத்தான் ராஷ்டிரபதி பவனில் திறந்து வைத்திருப்பதாகச் சிலர் குறிப்பிட இது சர்ச்சையாக வெடித்திருக்கிறது.

இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 'President of India' இந்திய அளவில் ட்ரெண்ட்டாகி வருகிறது. 'இந்த அளவுக்கா அலட்சியமாக இருப்பது?' என சிலர் விமர்சித்து வருகின்றனர். சிலர் அது நேதாஜி ஓவியம்தான் என்கின்றனர்.

இதுகுறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சுபாஷ் சந்திரபோஸ் குடும்பத்தினரிடம் இருந்து அவரது புகைப்படத்தை பெற்று பத்மஸ்ரீ விருது வென்ற ஓவியர் பரேஷ் மைதி வரைந்த ஓவியத்தை தான் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார். அந்த ஓவியம் குறித்து பல்வேறு கட்சி தலைவர்கள் குறிப்பிடும் கருத்து தவறானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ARUNACHALAM