அமெரிக்க இராணுவத்தில் பெண்களுக்கு ponytail, lipstick அனுமதி

SOCIAL SHARE
Pin It

அமெரிக்க இராணுவத்தில் பணியில் இருக்கும் பெண்களுக்கு ஒரு பெரிய நிவாரணமாக, அமெரிக்க ராணுவம் தனது சீருடை விதிகளை திருத்தியுள்ளது.

ராணுவத்தில் உள்ள பெண்கள் தங்கள் கூந்தலை போனிடெயிலாக போட்டுக்கொள்ளலாம் என்றும் லிப்ஸ்டிக் பயன்படுத்தலாம் என்றும் ஆண்கள் நக பாலிஷ்களை பயன்படுத்தலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்காகவும் சீருடைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இவர்கள் தற்போது உள்சட்டை ஒன்றை அணிய அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இந்த மாற்றங்கள் பிப்ரவரி 24 முதல் நடைமுறைக்கு வரும்.

இது பன்முகத்தன்மை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய போக்கை அதிகரிப்பதற்கான ஒரு முயற்சி என்று கூறிய அமெரிக்க இராணுவம், பெண் ராணுவ வீரர்களுக்கு ஏற்படும் மாறுபட்ட தாக்கங்களை நிவர்த்தி செய்வதற்காக அதன் சீர்ப்படுத்தும் தரத்தை புதுப்பித்துள்ளது.

கடந்த காலங்களில் நீண்ட தலைமுடி கொண்ட பெண்கள் அதை கொண்டையாக போட வேண்டியிருந்தது. இது அவர்களுக்கு அசௌகரியத்தை அளித்ததோடு, தலைக்கவசம் அணியும் போதும் அதிக பிரச்சனைகளைக் கொடுத்தது.

இராணுவத்தின் இந்த முடிவு சமூக ஊடகங்களில் கலவையான பின்னூட்டங்களைப் பெற்றது. பலர் இந்த நடவடிகையை பாராட்டினர். சிலர் இதை கிண்டலும் செய்தனர்.

சேவையில் உள்ள பெண்கள் எவ்வாறு தங்கள் கூந்தலை வைத்துக்கொள்ள வேண்டும் என்பது குறித்த அமெரிக்க விமானப்படை தனது விதிகளை மாற்றிய ஒரு வாரத்திற்குப் பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் (Joe Biden) திங்களன்று ஒரு உயர்நிலை ஆணையில் கையெழுத்திட்டார்.  இது அமெரிக்க இராணுவத்தில் பணியாற்றும் திருநங்கைகள் மீதான, அவருக்கு முந்தைய அதிபரால் விதிக்கபட்ட, சர்ச்சைக்குரிய தடையை ரத்து செய்தது. இது எல்.ஜி.பீ.டி.கியூ ஆதரவாளர்களால் உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டது. இதன் மூலம் தனது தேர்தல் வாக்குறுதி ஒன்றையும் ஜோ பைடன் பூர்த்தி செய்துள்ளார்.

அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிஸ் (Kamala Harris), பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் கூட்டுத் தளபதிகளின் தலைவர் ஜெனரல் மார்க் மில்லி ஆகியோர் உடனிருக்கையில் பைடன் ஓவல் அலுவலகத்தில் இந்த நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார்.

 

ARUNACHALAM