கொரோனா முடிவுக்கு வர நீண்ட காலம் ஆகும்: உலக சுகாதார அமைப்பு

SOCIAL SHARE
Pin It

உலகம் முழுக்க கிட்டத்தட்ட 29 லட்சத்துக்கும் மேற்பட்ட உயிர்களை பலிவாங்கி உள்ள கொரோனா வைரஸின் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை தற்போது இந்தியா உள்ளிட்ட பல ஆசிய நாடுகளில் வேகமாகப் பரவி வருகிறது. இதன்காரணமாக தற்போது தடுப்பு மருந்துகள் உலகெங்கிலும் அதிகமாக விநியோகிக்கப்பட்டு வருகின்றன. 13 கோடியே 65 லட்சம்பேர் தற்போதுவரை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். உலகம் முழுவதும் தற்போது 780 மில்லியன் டோஸ் தடுப்பு மருந்து விநியோகிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா தாக்கத்தின் அழிவில் இருந்து உலகம் வெகு தொலைவில் உள்ளது என்று தெரிவித்துள்ளார் டெட்ரோஸ் அதனோம் கெப்ரயேசஸ். உலக மக்களின் முழு ஆதரவுடன் கொரோனாவின் தாக்கத்தை நாம் படிப்படியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

கடந்த ஜனவரி, பிப்ரவரி ஆகிய மாதங்களில் படிப்படியாக குறைந்து வந்த கொரோனாவின் தாக்கம், இரண்டாவது அலை காரணமாக பல ஆசிய மற்றும் மத்திய தரைக்கடல் நாடுகளில் மீண்டும் அதிகரித்தது. அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவ, முகக் கவசம் அணிய மக்களை வலியுறுத்துதல், சமூக விலகலை பின்பற்றுதல், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை தனிமைப்படுத்துதல், தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வெண்டிலேட்டர் சிகிச்சை அளித்தல், தடுப்பு மருந்தை விரைவில் பொதுமக்களுக்கு செலுத்துதல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மூலமாக உலக நாடுகள் தற்போது தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் பரவும் வேகத்திற்கு தற்போது உலகில் தடுப்பு மருந்துகள் தயாரிக்கும் வேகம் குறைவாகவே உள்ளது என்று அவர் கூறியுள்ளார். கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களுக்கு அவர்கள் வாழ்நாளில் என்னென்ன மாதிரியான பிரச்னைகள் வரும் என்று இன்னும் சரியாகத் தெரியவில்லை.

இது இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. இறப்பு சதவீதம் கணிசமாகக் குறைந்துள்ளது, மனிதகுலத்துக்கு சாதகமான விஷயம். ஒரு கட்டத்தில் இந்த வைரஸ் தாக்கத்தை முற்றிலுமாக நிறுத்தி விடலாம் என்ற நம்பிக்கையை இது தருகிறது என்று அவர் மேலும் கூறியுள்ளார். ஜெனிவாவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் உலக சுகாதார அமைப்பு தனது கோவாக்ஸ் திட்டத்தின் மூலமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய நாடுகளுக்கு தடுப்பு மருந்துகளை இலவசமாக விநியோகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

ARUNACHALAM