சமையலுக்கு ஏற்ற எண்ணெய் எது?

SOCIAL SHARE
Pin It

எண்ணெய் இல்லாமல் சமையல் இல்லை என்பது ஒரு சாரார் இருக்க, `எண்ணெய்’ என்றதும் எட்டடி தள்ளி நிற்கும் சிலரையும் பார்க்க முடிகிறது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமலேயே சிலர் எண்ணெயை ஓரம்கட்டி வருகிறார்கள். இதய நோயில் தொடங்கி உடல் பருமன் வரை சமையலில் எண்ணெயைத்தான் முதலில் தவிர்க்கிறார்கள். அப்படியானால் எண்ணெய் தவிர்க்கவேண்டிய ஒன்றா, எந்த எண்ணெயை எப்படிப் பயன்படுத்துவது? சமைக்க, சமைத்த உணவில் சேர்த்துக்கொள்ள, சருமத்துக்கு... என எண்ணெய் நம் வாழ்வில் முக்கிய அங்கம் வகிக்கிறது.

பொதுவாக, சமையலுக்குப் பயன்படுத்தப்படும் எண்ணெய் வகைகள், கொட்டைகள், விதைகள், பழங்கள், தாவரங்கள் அல்லது தானியங்களிலிருந்து அவை பிரித்தெடுக்கப்பட்டு, நசுக்கி, அழுத்தம் கொடுக்கப்பட்டு அல்லது பதப்படுத்தப்படுகின்றன. நிறைவுற்ற கொழுப்பு, மோனோசாச்சுரேட்டட் மற்றும் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட அவற்றின் அதிக கொழுப்பு உள்ளடக்கத்தால் அவை வகைப்படுத்தப்படுகின்றன.

சமையல் எண்ணெய்களை ஆற்றலின் பெட்டகம் என்று சொல்லலாம். மிகவும் குறைந்த அளவில் அதிக வெப்ப ஆற்றலைத் தரக்கூடியது எண்ணெய். கொழுப்பில் கரையும் தன்மையுள்ள உயிர்ச்சத்துகளை ஒரு இடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு எடுத்துச் செல்லும் ஊடகமாகச் செயல்படுகிறது. உணவுக் குழாய், இரைப்பையில் உள்ள மென் திசுக்களைப் புற்றுநோயில் இருந்து பாதுகாக்கத் துணைபுரிகிறது.

நம்மில் பலர் எண்ணெயும், கொழுப்பும் வேறு வேறு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், உண்மை என்னவெனில், எண்ணெய் என்பது திட நிலையில் உள்ள கொழுப்பு. கொழுப்பு என்பது திட நிலையில் உள்ள எண்ணெய். கொழுப்பும், எண்ணெயும் புறத்தோற்றத்தில்தான் வித்தியாசப்படுகின்றனவே தவிர, வேதியியல் மூலக்கூறு அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.

பொதுவாக ஒரு மனிதனுக்குத் தினமும் தேவைப்படும் சக்தியானது 1800 கலோரிகள் என வைத்துக் கொள்வோம். இந்த மொத்தக் கலோரிகள் தேவையில் சுமார் 4 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் சமையல் எண்ணெயை பாதுகாப்பாக அன்றாடம் பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது 72 கலோரிகள் அளவு வெப்பத்தைத் தரக்கூடிய சமையல் எண்ணெயைப் பயன்படுத்தலாம். கிராம் அளவில் கணக்கிட்டால் 9 கிராம் அளவு உள்ள எண்ணெய் போதும்.

இந்தியாவைப் பொருத்த மட்டில், ஒரு மாநிலத்தில் பரம்பரை பரம்பரையாக தேங்காய் எண்ணெயும், வடஇந்தியாவில் கடுகு எண்ணெய், மற்றொரு மாநிலத்தில் பாமாயில் என மாநிலத்திற்கு மாநிலம் சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய் வெவ்வேறாய் இருக்கிறது. இவை அனைத்தும் அந்தந்தச் சூழ்நிலை மற்றும் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற மாதிரி மாறுபடும்.

இருப்பினும் சமீபகாலமாக தேங்காய் எண்ணெயும், கடுகு எண்ணெயும் மிகப் பிரபலம் அடைந்துள்ளது. பழந்தமிழர்களின் பாரம்பரிய எண்ணெய் எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெய்தான்.அண்மையில் சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய், தவிட்டு எண்ணெய், பருத்திகொட்டை எண்ணெய் போன்ற எண்ணெய்களையும் சமையலுக்குப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கிறோம். சமையல் எண்ணெயின் தன்மை, அதில் அடங்கியிருக்கும் ஹைட்ரஜன் அணுக்களின் எண்ணிக்கையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கப்படுகிறது.

ஒரு எண்ணெயில் எந்த அளவு ஹைட்ரஜன் அணுக்கள் உள்ளனவோ அதை அடிப்படையாகக் கொண்டு கொழுப்பு செறிவுற்ற (Saturated), கொழுப்பு செறிவற்ற (Unsatuarated) என இரண்டு பிரிவுகளாகப் பிரித்துள்ளனர். கொழுப்பு எந்தவிதமான சிதைவு மாற்றங்களும் இல்லாமல் கெட்டியான நிலையில் இருக்கும்.

வெண்ணெய், நெய், விலங்கினங்களின் கொழுப்பு வகைகள், தேங்காய் எண்ணெய், பாமாயில் போன்றவை செறிவுற்ற கொழுப்புக்கு உதாரணங்கள். இவற்றில் தேங்காய் எண்ணெயும், பாமாயிலும் திரவ நிலையில் இருந்தாலும், வேதியியல் அடிப்படையில் செயல்படும் போது மற்றவகையான செறிவுற்ற கொழுப்பு போலவே இருக்கும்.

இந்தக் கொழுப்பு வகையில் வருகிற சமையல் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தும்போது மிக்க கவனம் தேவை. ஏனென்றால், இவ்வகையான சமையல் எண்ணெய்கள் ஓரளவு நன்மை தந்தாலும், இவற்றை அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்தினால் இதயம் மற்றும் இதயம் தொடர்புடைய ரத்தக் குழாய்களுக்குப் பலவகையான சிக்கல்களை காலப்போக்கில் ஏற்படுத்தக்கூடும்.

இவ்வகையான சமையல் எண்ணெய்கள் தோலுக்குத்தான் சிறந்தவை. இதயத்துக்கு அல்ல என்று சொல்வதுண்டு (Oil is good for the skin but bad for the heart). அளவுக்கு அதிகமாக தினசரி சமையலில் செறிவுற்ற எண்ணெயைப் பயன்படுத்துவதால் இதயத்தில் பலவகையான பாதிப்புகள் ஏற்படுகின்றன. குறிப்பாக இதயத் தமனிகள் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன.

இவ்வகையான எண்ணெய் ரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ராலாக அளவுக்கு அதிகமாகச் சேர்ந்துவிடுகிறது. அளவுக்கு அதிகமாகப் படியும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள்விட்டத்தை முழுமையாக அடைப்பதால் இதயத்துக்குச் செல்லும் ரத்தமானது தடைபட்டு இதயத் தமனி நோய் ஏற்படுகிறது.

பெயருக்கு ஏற்றார்போல் ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நம் உடலுக்கு இன்றியமையாதவையாக இருக்கின்றன. நம் உடலின் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் பல முக்கியமான பணிகளை நிறைவேற்றுவது இவைதான். ஒமேகா கொழுப்பு அமிலங்கள் நமது உடலில் உள்ள செல்களைப் பராமரிப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. மேலும் இவ்வகை அமிலங்கள், பிராஸ்டாகிளாண்டென் (Prosta Glanden) என்ற ஹார்மோன் சுரக்கத் துணைபுரிகிறது. ரத்த உறைவைத் தடுக்கவும் ரத்த அழுத்த அளவை சீராக வைத்துக் கொள்ளவும், நோய் தடுக்கும் ஆற்றல் அதிகமாக்கவும் இவை துணை புரிகின்றன. இதயத்தைப் பாதுகாப்பதிலும் ஒமேகா கொழுப்பு அமிலங்களுக்குப் பெரும் பங்கு உண்டு.

ஒமேகா கொழுப்பு அமிலங்களை தேவையான அளவில் அன்றாட உணவில் சேர்த்துக் கொண்டால் நன்மை தரும் கொலஸ்ட்ரால் உற்பத்தியை கல்லீரல் அதிகமாக்குகிறது. நன்மைதரும் கொலஸ்ட்ரால் இதயத் தமனிகளின் உள் பகுதியில் படியும் கொழுப்புத் துகள்களை அகற்றி, ரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்திருப்பதால்தான் இவற்றை ரத்தக் குழாய்களைத் தூய்மைப்படுத்தும் துப்புரவாளர்கள் என்று குறிப்பிடுவதுண்டு. எனவே ரத்தத்தில் நன்மை தரும் கொலஸ்ட்ராலின் அளவு அதிகமாவதால் இதயத் தமனி அடைப்புகளில் இருந்து இதயத்துக்குப் பாதுகாப்பு கிடைக்கிறது.

ஒமேகா 3 கொழுப்பு எண்ணெய்கள், மீன் வகை உணவுகளிலும், சோயா, மொச்சையில் இருந்து தயாரிக்கப்படும் எண்ணெயிலும் மிக அதிகமாக உள்ளன. இதுபோல் ஒமேகா 6 கொழுப்பு எண்ணெய்கள், சூரியகாந்தி எண்ணெய், மக்காச்சோள எண்ணெய்  போன்றவற்றில் மிக  அதிகமாக உள்ளது. ஒரு தனி மனிதனின் அன்றாட எண்ணெய்த் தேவையில் பியூஃபா வகை கொழுப்பு, மூன்றில் ஒரு பங்கு என்ற அளவில் சேர்க்கப்பட வேண்டும்.

மியூஃபா வகை கொழுப்பு கடுகு எண்ணெயிலும், கடலை எண்ணெயிலும் அதிக அளவில் உள்ளது. எண்ணெயில் பல வகைகள் இருந்தாலும், இதயத்துக்கு ஏற்ற மிகச்சிறந்த எண்ணெய் என்றால் ஆலிவ் எண்ணெயைத்தான்   சொல்ல வேண்டும். உலக அளவில் மேலை நாடுகளில் இதயத்துக்கு ஏற்ற சிறந்த சமையல் எண்ணெயாக ஆலிவ் எண்ணெய்தான் கருதப்படுகிறது.

இந்த எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தும் மேலை நாடுகளில் இதய நோய்களின் தாக்கம் மிகமிகக்குறைவாக இருப்பதாக பலவகையான ஆய்வு முடிவுகள் உறுதி செய்துள்ளன. ஆனால் இதன் விலை மிகவும் அதிகமாக இருப்பதால் நம் நாட்டுச் சூழலுக்கு இந்த எண்ணெய் ஒத்துவருவதில்லை. மேலும் இதன் மணமானது நம்முடைய சுவைக்கு ஏற்றதாகவும் இல்லை.

நம் நாட்டில் பெரும்பாலும் பலவகையான சாலடுகள் தயாரிக்கத்தான் ஆலிவ் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது. உலக அளவில் ஆலிவ் எண்ணெய் சிறந்ததாகக் கருதப்பட்டாலும் நம் நாட்டு மக்களின் சுவைக்கு ஏற்ப, நமது அன்றாடத் தேவைக்கு ஏற்ப, நமது சமையல் முறைக்கு ஏற்ப நமது உடல் நலத்துக்கு ஏற்ப, குறிப்பாக இதயத்தின் நலம் காக்கும் தன்மையுள்ள சிறந்த சமையல் எண்ணெய் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

எனவே நம் நாட்டில் பயன்படுத்தும் சிறந்த சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அன்றாட சமையலுக்கு ஏற்றபடி கலவையாகப் பயன்படுத்துவதுதான் சரியான வழிமுறை.செறியுற்ற கொழுப்பு என்றும் பியூஃபா கொழுப்பு என்றும் மியூஃபா கொழுப்பு என்ற இந்த மூன்று வகையான கொழுப்பு வகைகளில் இருந்து இதயத்தைப் பாதுகாக்கக்கூடிய எண்ணெய்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை 1: 1 : 1 என்ற அளவில் தினசரி சமையலுக்கு அளவாகப் பயன்படுத்தினால் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

அதாவது நல்லெண்ணெய் (எள் எண்ணெய்), சூரியகாந்தி எண்ணெய், கடலை எண்ணெய் இவற்றை இதயத்துக்கு ஏற்ற சிறந்த எண்ணெய்களாக நாம் தேர்வு செய்யலாம். இந்த எண்ணெய்களைத் தினசரி சமையலுக்கு மாறி மாறி தனித்தனியாக பயன்படுத்தலாம். அல்லது இந்த மூன்று எண்ணெய்களையும் 1: 1: 1:  என்ற சம அளவில் கலந்து தினமும் சமையலுக்குப் பயன்படுத்துவதால் இதயத்தின் நலனைப் பாதுகாக்க முடியும். சமையல் எண்ணெய்களைத் தேர்ந்தெடுக்கும்போது இன்னொரு விஷயத்தையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நமது உடல் அமைப்பு அன்றாட உடல் உழைப்பு, நமது அன்றாட தேவை இவற்றை அடிப்படையாகக் கொண்டு எண்ணெயை அளவோடு பயன்படுத்தினால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். 

ARUNACHALAM