தடுப்பூசி காப்புரிமையை நிறுத்தி வைக்க கோரிக்கை

SOCIAL SHARE
Pin It

''கொரோனா தடுப்பூசிக்கு காப்புரிமை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்' என, பின்தங்கிய நாடுகள், உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன.

பைசர், மாடர்னா, ஆஸ்ட்ரா ஜெனகா, ஜான்சன் அண்டு ஜான்சன், பாரத் பயோடெக் உள்ளிட்ட பல நிறுவனங்கள், கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்கின்றன. எனினும், இந்நிறுவனங்களால், உலக நாடுகளுக்கு தேவையான, கொரோனா தடுப்பூசி மருந்தை தயாரிக்க முடியாத நிலை உள்ளது. அதனால், 'கொரோனா தடுப்பூசி மருந்திற்கான காப்புரிமை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்' என, இந்தியா, தென் ஆப்ரிக்கா ஆகிய நாடுகள், உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை விடுத்துள்ளன. 'இதன் மூலம், மேலும் பல நிறுவனங்கள் தடுப்பூசி மருந்தை தயாரிக்க முடியும். இது, பின்தங்கிய, ஏழை நாடுகளைச் சேர்ந்த மக்களுக்கும் தாராளமாக தடுப்பூசி கிடைக்க உதவும்' என, இந்தியா வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, இந்த விண்ணப்பத்தை ஏற்கக் கூடாது என அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு நான்கு முதன்மை குடியரசு கட்சி செனட்டர்கள் அழுத்தம் கொடுத்துவருகின்றனர்.

மேலும் அமெரிக்க நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை ரத்து செய்வதன்மூலம் தாங்கள் பயனடையலாம் என்று பிற நாடுகள் நம்புகின்றன. ஆனால் காப்புரிமையை ரத்து செய்வதன் மூலம் கண்டுபிடிப்புகளுக்கான உத்வேகம் மட்டுப்படும். புதிய கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகள் நிறுத்தப்படும் அபாயமும் உள்ளது” என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மீண்டும் கொரோனா அதிகரித்துள்ள நிலையிலும், கொரோனா தொடர்ந்து உருமாற்றம் பெற்றுவரும் நிலையிலும் தடுப்பூசிகள் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்கான ஆராய்ச்சிகளும் கண்டுபிடிப்புகளும் தொடர்ந்து செயல்படுத் தப்பட வேண்டியது அவசியம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் காப்புரிமை ரத்து செய்யப்பட்டு யாரும் உற்பத்தி செய்யலாம் என்ற நிலையை உண்டாக்கினால் நோய் காக்கும் தடுப்பூசிகளின் தரம் குறித்த அச்சமும் உண்டாகும். கொரோனா பரவலைத் தடுப்பதில் தொடர்ந்து அனைத்து நாடுகளுக்கும் உதவிகளை அமெரிக்கா மேற்கொண்டுவருகிறது. அப்படியிருக்க அமெரிக்க கண்டுபிடிப்புகளின் காப்புரிமையை ரத்து செய்வதை ஒப்புக்கொள்வது கொரோனா பரவலைத் தடுப்பதில் எடுக்கப்பட்ட முயற்சிகளுக்கே எதிரானதாக மாறிவிட வாய்ப்புள்ளது. எனவே இந்த கோரிக்கைக்கு அமெரிக்கா ஒப்புக்கொள்ளக் கூடாது என்று அவர்கள் அதிபர் ஜோ பைடனிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

ARUNACHALAM