தோல் என்பது உடலின் மிகப்பெரிய உறுப்பு ஆகும். இது மொத்த உடல் உறுப்புகளையும் வெளிப்புற சூழலில் இருந்து பாதுகாக்கும் முதன்மை கவசமாக செயல்படுகிறது. மேலும் தீங்கு விளைவிக்கும் கூறுகள், நுண்ணுயிரிகளிலிருந்து பாதுகாக்க மற்றும் உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது. இதனால் தான் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது மற்றும் அதன் நோய் எதிர்ப்பு சக்தியைப் பராமரிப்பது மிகவும் முக்கியமானது.
உங்கள் சருமத்தில் பாதுகாப்பு குறைந்துவிட்டால் பின்னர் தொற்றுகளின் விளைவுகளை சந்திக்க நேரிடும். உங்கள் சருமத்தில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் எந்த வித பாதிப்பும் இல்லாமல் தொடர்ந்து செழித்து வருவதை உறுதிசெய்ய, சில எளிய தோல் பராமரிப்பு உதவிக்குறிப்புகள் இருக்கின்றன. அதை பின்பற்றினாலே போதும் உங்கள் சருமம் வெளிப்புற சூழலால் பாதிக்கப்படாதவாறு பார்த்து கொள்ளலாம்.
உங்கள் தோல் பராமரிப்பு வழக்கத்தின் முதல் படியாக கிளீன்சிங் இருக்க வேண்டும். எந்தவொரு ஒப்பனை, அழுக்கு அல்லது அதிகப்படியான எண்ணெயை அகற்ற உங்கள் முகத்தை கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். இதற்கு PH-நடுநிலை அல்லது சோப்பு இல்லாத முகம் சுத்திகரிப்பான் (face purifier) ஒன்றைத் தேர்வு செய்ய வேண்டும். அதாவது இவை உங்கள் சருமத்தின் இயற்கையான எண்ணெயை அகற்றாமல் தோலில் உள்ள மாசுபாட்டை மட்டும் நீக்கும். எனவே, உங்கள் சருமத்திற்கு ஏற்றாற்போல சரியான முக சுத்தப்படுத்தியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
பொதுவாக உங்கள் சருமம் அதிகப்படியான வெளிப்புற அழுத்தங்களைக் கையாளுகிறது. அதனால் தான் வாரத்திற்கு ஒரு முறை எக்ஸ்போலியேசன் செய்வது அவசியம். இது சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தவும், அழுக்கு மற்றும் இறந்த சரும செல்களை அகற்றவும் உதவுகிறது. எண்ணெய் மற்றும் வறண்ட சருமத்திற்கு, லேசான ஸ்க்ரப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது.
ஒரு நல்ல மாய்ஸ்சரைசர் சருமத்தை இயற்கையான ஈரப்பதத்துடன் வைத்திருக்க உதவுகிறது. அதுமட்டுமல்லாமல் சரும செல்களை நீரேற்றமாக வைக்கிறது. நீரேற்றம் உங்கள் சருமத்தில் நீர் அளவை பராமரிக்கிறது.
தற்போது நிலவி வரும் கோடைகால வெயிலால், நாம் வீட்டிற்குள்ளே இருப்பதாலும் மற்றும் ஏ.சி.யை அதிகம் பயன்படுத்துவதாலும் சருமம் வறண்டு, ஈரப்பதம் இல்லாமல் போகிறது. எனவே 8 மணி நேர இடைவெளியில் இரண்டு முறை உங்கள் சருமத்தை மாய்ஸ்சரைசர் செய்வது அவசியம். இது சருமத்தை நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் அது வறண்டு காணப்படாது. இலகுரக, காமெடோஜெனிக் அல்லாத அல்லது அவகேடோ பழத்தின் ஹைட்ரேட்டிங் குணங்களைக் கொண்ட ஒன்றைத் தேர்வுசெய்து சருமத்தின் அமைப்பை ஈரப்பதமாக்க வைத்திருங்கள்.
சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி பயன்பாடு தீவிரமான சேதத்தை எதிர்த்துப் போராட சருமத்திற்கு உதவுகிறது மற்றும் சருமத்திற்கு ஒரு எதிர்ப்பு (Anti-Ageing) முகவராக செயல்படுகிறது.
வீட்டில் இருந்து வெளியே சென்றாலும், வீட்டிற்குள் இருந்தாலும் சரி உங்கள் சருமத்திற்கு சன்ஸ்கிரீன் அவசியம். உங்கள் சருமம் முழுவதும் சன்ஸ்கிரீன் தடவினால் அது ஒரு கவசமாக செயல்பட்டு சருமத்தை கதிர்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்கும். உங்கள் கழுத்தின் பின்புறம் மற்றும் உங்கள் கைகள் ஆகியவை சூரிய ஒளியால் எளிதில் பாதிக்கப்படுவதால் சன்ஸ்கிரீனை பயன்படுத்த மறக்காதீர்கள்.













