ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, நான்கு போட்டிகள் கொண்ட ‛பார்டர்-கவாஸ்கர் டிராபி' டெஸ்ட் தொடரில் பங்கேற்றது. முதல் மூன்று போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என, சமநிலையில் இருந்தது. நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் பிரிஸ்பேனில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 369, இந்தியா 336 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 294 ரன்கள் எடுத்தது. பின், 328 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணி, 4ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ரன் எடுத்திருந்தது. ரோகித் (4), சுப்மன் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.
ஐந்தாம் நாள் ஆட்டத்தில், 324 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 2வது இன்னிங்சை துவக்கிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா 7 ரன்கள் எடுத்தார். அபாரமாக ஆடிய சுப்மன் கில் 91 ரன் அடித்தார். கேப்டன் ரகானே 24 ரன்களிலும், நிதானமாக ஆடிய புஜாரா 56 ரன்களும் எடுத்தனர். மறுமுனையில் அசத்திய ரிஷாப் பன்ட் அரைசதம் கடந்தார். மயங்க் அகர்வால் 9 ரன்கள் எடுத்தார். லியான் 'சுழலில்' வாஷிங்டன் சுந்தர் 22 ரன்களில் போல்டானார். ஹேசல்வுட் 'வேகத்தில்' ஷர்துல் தாகூர் 2 ரன்களிலேயே வெளியேறினார். ஹேசல்வுட் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய ரிஷாப் பன்ட் வெற்றியை உறுதி செய்தார்.
இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 7 விக்கெட்டுக்கு 329 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரிஷாப் பன்ட் 89 ரன்களும், நவ்தீப் சைனி அவுட்டாகாமல் இருந்தனர். ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ் 4, லியான் 2 விக்கெட் கைப்பற்றினர். இதனையடுத்து நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி தொடர்ந்து 2வது முறையாக 'பார்டர்-கவாஸ்கர்' கோப்பை வென்றது. இம்மைதானத்தில் ஆஸ்திரேலிய அணி முதன்முறையாக தோல்வியை தழுவியது.
ஆஸ்திரேலியா உடனான தொடரை வென்று வரலாற்று சாதனை புரிந்தது மட்டுமல்லாமல், டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் 430 புள்ளிகளுடன் முதலிடத்தையும் இந்திய அணி பிடித்தது. இதனையடுத்து இந்திய அணிக்கு ரூ.5 கோடி பரிசளிக்கப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இந்திய அணிக்கு தலைவர்கள் அனைவரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.