கிராமி விருதில் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தந்த யூடியூபர்!

SOCIAL SHARE
Pin It

அமெரிக்காவில் நடந்த கிராமி விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்ட, கனடாவை சேர்ந்த யூடியூபர் லில்லி சிங், இந்தியாவில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து மாஸ்க் அணிந்து வந்தார். அவரது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பஞ்சாப், ஹரியானாவை சேர்ந்த விவசாயிகள் போராடி வருகின்றனர். கடுங் குளிர், கொட்டும் மழை, வாட்டி வதக்கும் வெயில் என எதுவும் பார்க்காமல், கடந்த 120 நாட்களுக்கும் மேலாக, டில்லி எல்லையை முற்றுகையிட்டு அவர்கள் போராடி வருகின்றனர்.

கடந்த மாதம் ஹாலிவுட் பிரபலம் ரிஹானா, சமூக ஆர்வலர் மலாலா உள்ளிட்ட பலரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க, இது உலக அளவில் கவனம் பெற்றது. இந்நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கிராமி விருது வழங்கும் விழா நடந்து முடிந்தது.

இதில் கலந்து கொண்ட கனடாவை சேர்ந்த யூடியூபரான லில்லி சிங், விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் மாஸ்க் அணிந்து வந்திருந்தார். அந்த மாஸ்க்கில், ‘நான் விவசாயிகளுக்க ஆதரவாக நிற்கிறேன்’ என எழுதப்பட்டிருந்தது. இந்த புகைப்படத்தை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட, 40 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்ஸ்களை குவித்துள்ள அந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.

ARUNACHALAM