உடலெங்கும் டாட்டூ குத்திய முதியவர்!

SOCIAL SHARE
Pin It

ஒருவர் மீதான அன்பை, வெளிப்படுத்த பச்சை குத்திக்கொள்ளும் வழக்கம், அந்தகாலம் முதலே மனிதர்களிடையே இருந்து வருகிறது. தற்போது நாகரிக மாற்றத்திற்கு ஏற்ப அது டாட்டூவாக விஸ்வரூபம் எடுத்துள்ளது. பிடித்தவர்களின் இன்சியல், பெயர், எமோஜிக்கல் மற்றும் படங்களை டாட்டூ குத்திக் கொள்வது இப்போது பேஷனாக மாறி உள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த 72 வயது முதியவர் ஒருவர், தனது உடலில் 98 சதவீதம் டாட்டூ குத்தி அனைவரையும் அதிசயிக்க வைத்திருக்கிறார். தன்னை ஒரு காந்தம் என்று அழைத்துக் கொள்ளும் வொல்ப்காங் கிர்ச், என்ற இந்த ஜெர்மன் ஓய்வூதியதாரர், தனது கால்களின் பாதங்களில் மட்டும் டாட்டூ குத்தி கொள்ளவில்லை.

பெர்லினில் அஞ்சல் அலுவலராக பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், கடந்த 20 ஆண்டுகளாக டாட்டூ குத்தி வருகிறார். முதன் முதலில் கடந்த 1989 ஆம் ஆண்டு, பெர்லின் சுவர் தகர்ப்பின் போது டாட்டூ குத்தி கொண்டாராம். தபால் நிலையத்தில் பணியாற்றிய போது, தன்னால் டாட்டூ குத்தி கொள்ள முடியவில்லை என்று கூறும் கிர்ச், தனது முகம், கைகள், உடல், முதுகு மற்றும் கால்கள் என ஒவ்வொன்றிலும் டாட்டூ குத்துவதற்காக, 720 மணி நேரம் ஊசியின் கீழ் அமர்ந்திருக்கிறார்.

இதுகுறித்து கிர்ச் கூறுகையில், ‘என் 46 வயதில் முதலில் நான் டாட்டூ குத்தினேன். அப்போது என் கண்களில் கண்ணீர் வந்தது. டாட்டூ குத்துவதற்காகவே 25 ஆயிரம் யூரோக்கள் செலவு செய்திருக்கிறேன். கண் புருவங்களையும் கருப்பு நிறத்தில் டாட்டூ குத்தியிருக்கிறேன். கால்களின் பாதங்களில் மட்டுமே இன்னும் நான் டாட்டூ குத்தவில்லை. தெருவில் நான் நடந்து செல்லும் போது பலர் என்னிடம் ஆட்டோகிராப் கேட்கிறார்கள். என்னுடன் சேர்ந்து புகைப்படம் எடுக்க விரும்புகின்றனர்’ என மகிழ்ச்சியுடன் கூறினார்.

ARUNACHALAM