விமானத்தில் மாஸ்க் அணிய மறுத்து, சீட்டில் சிறுநீர் கழித்த பயணி!

SOCIAL SHARE
Pin It

கொரோனா பரவலால் உலகமே பின்னோக்கி சென்றுவிட்டது. தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், வைரஸ் பரவலை தடுக்க, மாஸ்க் அணிவதும், சமூக விலகலை கடைபிடிப்பதுமே தீர்வு என உலகம் இயங்கி வருகிறது. விமானத்தில் மாஸ்க் அணிவது கட்டாயம் என சட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், லாண்டன் கிரியர் என்ற 24 வயது பயணி ஒருவர் விமானத்தில் செய்த அட்டூழியம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

எப்.பி.ஐ அறிக்கையின் படி, அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானத்தில், சியாட்டிலிருந்து டென்வருக்கு பயணித்த கிரியர், விமான பயணத்தின் போது மாஸ்க் அணிய முடியாது எனக்கூறி சக பயணிகளுடனும், விமான பணிப்பெண்களுடனும் வாக்குவாதம் செய்திருக்கிறார். தொடர்ந்து அநாகரிகமாக, அனைவரின் முன்னிலையிலும், தனது சீட்டில் சிறுநீர் கழித்திருக்கிறார். பணிப்பெண் ஒருவர், அவ்வாறு செய்யாதீர்கள் என வேண்டுகோள் விடுக்க, நான் சிறுநீர் கழிக்க வேண்டும் என சண்டை செய்திருக்கிறார்.

விமானம் டென்வரில் தரையிறங்கியதும் புகாரை பெற்ற போலீசார், அவரை கைது செய்தனர். விசாரணையில், பயணத்துக்கு முன்பு தான் நான்கு பியர்களை குடித்ததாகவும், விமானத்தில் நடந்ததும், விமான ஊழியரை தாக்கியதும் தனக்கு நினைவில் இல்லை என்றும், சீட்டில் சிறுநீர் கழித்தது தெரியவில்லை எனவும் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.

தற்போது 10 ஆயிரம் டாலர் பிணைத்தொகையில் அவர் ஜாமின் பெற்றிருக்கிறார்.  இவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 2,50,000 அமெரிக்க டாலர் அபராதம் மற்றும் 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ARUNACHALAM