மதுரை மாவட்டத்தில் காய்கறி பயிர்களில் அதிகளவில் ரசாயன பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்துவதால் கேரளாவுக்கு செல்லும் காய்கறிகள் திருப்பி அனுப்பப்படுகின்றன.
விவசாயிகள் அறுவடை நேரத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளை தெளிப்பதால் மருந்தின் வீரியம் காய்கறிகளில் தங்கி விடுகிறது. 2019, 2020 ஆண்டுகளில் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்ட தமிழக காய்கறி லாரிகள் இக்காரணத்தால் திருப்பி அனுப்பப்பட்டன. தற்போது மீண்டும் அந்த நிலை உருவாகியுள்ளது.
தோட்டக்கலை பயிர்களில் பயன்படுத்தப்படும் பூச்சிக்கொல்லி மருந்துகளின் நச்சுத்தன்மையானது காய்கறிகளில் 40 நாட்கள் வரை நீடிக்கிறது. கால்நடைகளுக்கும் இதனால் தீங்கு ஏற்படுகிறது. அதிக ரசாயன பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தும் போது தீமை விளைவிக்கும் பூச்சிகளின் எண்ணிக்கை அதிகரிக்கிறது. நன்மை தரும் பூச்சிகளின் எண்ணிக்கை குறைகிறது. மேலும் மகரந்த சேர்க்கை நடைபெறுவதில் பாதிப்பு ஏற்பட்டு மகசூலும் குறைகிறது.
மொத்தத்தில் நிலத்தின் தரம் குறைந்து பயிர் உற்பத்தி பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் மாசுபடுகிறது. இதைத் தவிர்க்க ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்ற வேண்டும். விதை நேர்த்தி செய்யப்பட்ட தரமான விதையை பயன்படுத்தலாம். ஒரே பயிரை சாகுபடி செய்யாமல் சுழற்சி முறையில் மாற்றுபயிர் சாகுபடி செய்யலாம். வெவ்வேறு இனப் பயிர்களை வேலியோரமாக பயிர் செய்வதன் மூலமும் பூச்சிகளின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தலாம், என்றார்.













