சென்னைக்குள் மியாவாக்கி காடுகள்...

SOCIAL SHARE
Pin It

ஜப்பானை சேர்ந்த இயற்கை ஆர்வலர் மூலமாக ‘மியாவாக்கி காடுகள்’ உலகெங்கும் பரவ தொடங்கின. இந்தியாவிலும் இத்தகைய காடுகள் துளிர்க்க ஆரம்பித்திருக்கின்றன.  துவக்கம் என்ற அமைப்பினர், சென்னை போன்ற பெருநகரங்களில் மியாவாக்கி காடுகளை அதிகளவில் உருவாக்கி வருகின்றனர்.

‘‘கட்டிடங்கள் நிறைந்திருக்கும் சென்னை போன்ற பெருநகரத்திற்கு மியாவாக்கி காடுகள் சிறந்தவை. மிகக்குறைந்த இடத்தில் அடர்த்தியான மியாவாக்கி காடுகளை உருவாக்கிவிடலாம். நிறைய மரங்களையும் வளர்க்கமுடியும், நிறைய ஆக்ஸிஜனையும் சுவாசிக்கமுடியும். அந்த முயற்சியில்தான், 2017-ம் ஆண்டு ஜெயின் பப்ளிக் பள்ளியில், 300 சதுர அடியில், 70 மரங்களை நட்டு பராமரிக்கப்பட்டது. மியாவாக்கி காடுகள் உலகளவில் பிரபலமாகி வந்த சூழலில், சோதனை முயற்சியாகவே இதை முயன்று பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பார்த்ததைவிட, சிறப்பாகவே காடுகள் வளர்ந்தன’’ என்று கூறுகின்றனர் துவக்கம் அமைப்பினர்.
 
‘‘சோதனை முயற்சிக்கு பிறகு, பூந்தமல்லி பகுதியில் 600 மரங்களை நட்டு மற்றொரு மியாவாக்கி காட்டை உருவாக்கினோம். அது இப்போது நிஜ காடு போலவே காட்சியளிக்கிறது. இதை அடுத்து, முகலிவாக்கம் பகுதியில், 2800 மரங்களை நட்டு பராமரித்தோம். இன்று இங்கு ஆள் உயர மரங்கள் வளர்ந்து நிற்கின்றன. அதுவும் பட்டாம்பூச்சி, பறவைகள் போன்றவை வந்து செல்லும் இயற்கை சோலைவனமாகவே காட்சியளிக்கிறது. இதற்கிடையில் தூத்துக்குடி நகரில் 2500 மரங்களை கொண்டு ஒரு அடர்வனத்தை உருவாக்கினோம். மணப்பாக்கம், கல்பாக்கம், சிறுசேரி, குரோம்பேட்டை போன்ற பகுதிகளிலும் அடர்வனங்கள உருவாக்கி உள்ளோம். தற்போது சோழிங்கநல்லூர் பகுதியில் 36 ஆயிரம் சதுர அடி பரப்பில், 5600 மரங்களை நட்டு, பராமரிக்க தொடங்கியிருக்கிறோம்’’ என்று துவக்கம் அமைப்பின் நினைவுகளை கூறினார் சிராஜ்.
 
‘‘சென்னை மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் உருவாக்கப்பட்ட ‘அடர்வனம் புராஜெக்ட்’ செழித்து வளர்ந்திருப்பதை தொடர்ந்து, மேலும் பசுமையாக்க திட்டமிட்டிருக்கிறோம். ஏற்கனவே உருவாக்கப்பட்ட காடுகளில் தேனீ வளர்ப்பு பெட்டிகளை அமைத்து தேனீ வளர்ப்பை முன்னெடுக்க இருக்கிறோம். மேலும் சூழலியல் ஆய்வாளர்களின் உதவியோடு, பட்டாம்பூச்சி வளர்ப்பையும் முன்னெடுக்க இருக்கிறோம். மியாவாக்கி முறையிலேயே கனி தரும் காடுகளை உருவாக்க இருக்கிறோம். கொய்யா, சப்போட்டா, சீத்தா பழ மரங்களை பராமரிப்பதினால், பசுமையையும் மீட்டெடுக்கமுடியும். காடுகள் அமையபெற்ற பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி கொடுக்கமுடியும்’’ என்று அசத்தலான திட்டங்களை பட்டியலிட்டார்.
இதேபோல் வியாசார்பாடி பகுதியில் மியாவாக்கி காடுகள் உருவாக்கப்பட்டு வருகின்ன.

 

ARUNACHALAM