'கொரோனாவுக்கு பிறகு டைப் 1 சர்க்கரை நோயால், பாதிக்கப்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கொரோனா நோய் மக்கள் மத்தியில் ஏற்படுத்திய அச்சம் ஒரு காரணம். ஏற்கனவே நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, ரத்த அழுத்தம் மற்றும் மன அழுத்தம் அதிகரித்துள்ளது. இதனால் உடலில் உள்ள ஹார்மோன் அளவு அதிகரித்து, வேறு பல நோய்கள் வர காரணமாகி உள்ளது. இதனால் மனதளவிலும், உடலளவிலும் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, சர்க்கரை நோயாளிகள் அதிகம் பாதித்துள்ளனர். இவர்கள் முறையாக மாத்திரைகள், ஊசி எடுத்து கொள்ளவில்லை. உணவு பழக்கமும் மாறி உள்ளது. கொரோனா தடுப்புக்காக எடுத்து கொண்ட மருந்து, மாத்திரைகள் கணையத்தை பாதித்து இருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த மூன்று ஆண்டுகளுக்குள், டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை மிகவும் அதிகம். முன்பெல்லாம் இந்த அளவுக்கு குழந்தைகள் பாதிக்கப்படவில்லை. குறிப்பாக, கொரோனாவுக்கு பிறகு டைப் 1 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகரித்துள்ளனர். குழந்தைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளனர். அரசு உடனே கவனித்து, தடுப்பு நடவடிக்கையில் இறங்க வேண்டும்.
குழந்தைகளை பொறுத்தவரை டைப் 1 சர்க்கரை அம்மா, அப்பாவிடம் இருந்து வருவதில்லை. உணவு காரணமாக இருக்கவும் வாய்ப்பில்லை. இது மரபணு மாற்றம் காரணமாகதான் வருகிறது. ஒரு வயது முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகள் சீரியசாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் பலருக்கு தினமும் நான்கு வேளை வாழ்நாள் முழுவதும், இன்சுலின் ஊசி போட வேண்டிய நிலை உள்ளது. ஒருவேளை ஊசி போடவில்லை என்றால் கூட, டயாபடிக் கோமாவுக்கு போகும் நிலை உள்ளது.
திருப்பூர், சேலம் பகுதியில் இந்த நோயால், குழந்தைகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எப்போதும் இல்லாத அளவுக்கு, இப்போது இவ்வளவு குழந்தைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்றால், ஏதோ ஒன்று நம்மை சுற்றி நடந்து கொண்டு இருக்கிறது. இதை ஆய்வு செய்தால் மட்டுமே அறிய முடியும்.
சரக்கரை நோய் என்பது பழைய நோய். காலங்காலமாக மக்கள் இந்த நோயால் பாதிக்கப்படுகின்றனர். வயதானவர்களுக்கு மட்டும் வரும் ஒரு நோயாகதான் இது இருந்தது. கடந்த, 50 ஆண்டுகளாக குழந்தைகள் சர்க்கரையால் பாதிக்கப்படவில்லை. இந்த, 10 ஆண்டுகளாகதான் குழந்தைகளை சர்க்கரை நோய் தாக்குகிறது. இப்போது நிலைமை இன்னும் மோசமாக உள்ளது. நாம் சாப்பிடும் உணவு மற்றும் தண்ணீரில், விஷத்தன்மை ஏற்பட்டு இருக்கிறதா என்பதை ஆராய வேண்டும்.













