முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமெரிக்க மக்களுக்கான சில அறிவிப்புகள் அண்மையில் அறிவிக்கப்பட்டன. தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டுக்கொண்டவர்கள் வெளியே செல்லும்போது முகக்கவசம் அணியத் தேவையில்லை என அமெரிக்க அரசு அறிவித்துள்ளது.
திறந்த வெளியில், சிறிய அளவு மக்கள் கூடும் இடங்கள், சிறிய கூட்டங்களை உடைய பொது நிகழ்வுகள் ஆகிய இடங்களில், தடுப்பூசியை முழுமையாக போட்டுக்கொண்டவர்கள் முகக்கவசம் இல்லாமல் கலந்துகொள்ளலாம், பாதுகாப்பாக தொற்றுக்கு முன்னர் இருந்தது போன்ற வாழ்வை மீண்டும் துவக்கலாம் என கூறப்பட்டுள்ளது. எனினும், திறந்தவெளி அல்லாத இடங்களிலும், மூடிய வளாகங்கள் மற்றும் அறைகளிலும், அதிக மக்கள் கூடும் இடங்களிலும் முகக்கவசங்கள் கட்டாயம் என்றும் சமீபத்திய தகவல் எச்சரித்துள்ளது.
சி.டி.சியின் புதிய வழிகாட்டுதலின் படி, COVID-19 தடுப்பூசியின் இரண்டு பரிந்துரைக்கப்பட்ட டோஸ்களை செலுத்திக்கொண்ட நபர்கள் இனி நேரடி நிகழ்வுகள், இசை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகள், அணிவகுப்புகள் மற்றும் திறந்தவெளியில் நடக்கும் வேறு விதமான பொது நிகழ்வுகளில் முகக்கவசம் அணியாமல் கலந்து கொள்ள தகுதியுடையவர்களாகிறார்கள். மாடர்னா மற்றும் ஃபைசர் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களை செலுத்திக்கொண்டு இரண்டு வாரங்கள் ஆனவர்களும், அல்லது, ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியின் ஒரு டோசை செலுத்திக்கொண்டு இரண்டு வாரங்கள் ஆனவர்களும் இந்த தளர்வுகளுக்கு தகுதி பெறுகிறார்கள் என்று சி.டி.சி அங்கீகரிக்கிறது. ஜான்சன் & ஜான்சன் தடுப்பூசியை செலுத்திக்கொள்பவர்களுக்கு ஒரு டோஸ் பொதுமானது என்பது குறிப்பிடத்தக்கது.













