ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சக சிஎஸ்கே வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பிய பிறகே நான் விமானத்தில் ஏறுவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார்.
கொரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் கடும் கட்டுப்பாடுகளுடன் போட்டி நடத்தப்பட்டு வந்தது. வீரர்களுக்கு 3 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வந்த நிலையில் மைதானத்தில் ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. கடந்த 24 நாட்களில் 29 லீக் போட்டிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் வேறு வழியின்றி ஐபிஎல் தொடரை பிசிசிஐ நிர்வாகம் ஒத்தி வைப்பதாக அறிவித்துள்ளது. மறுதேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படும் நடப்பு ஐபிஎல் தொடர் மீண்டும் எப்போது தொடங்கும் என்ற அறிவிப்புகள் ஏதும் வெளியாகவில்லை.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சக சிஎஸ்கே வீரர்கள் பாதுகாப்பாக வீடு திரும்பிய பிறகே நான் விமானத்தில் ஏறுவேன் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி தெரிவித்துள்ளார். இதனால்தான் தோனி உலகின் மரியாதைக்குரிய கிரிக்கெட் வீரராகக் கருதப்படுகிறார். இந்த முறை தன் அணியின் சக வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்கள் பாதுகாப்பாக தங்கள் ஊர் போய் சேர்ந்த பிறகே தான் விமானத்தில் கால்பதிப்பேன் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதனடையே, ஐபிஎல் போட்டி நடத்துவது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்த ஏற்பாடு செய்தது தவறு இல்லை. ஏனெனில் அதற்கு முன் இங்கிலாந்து தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். கடந்த முறை போல் இந்த முறையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த விவாதிக்கப்பட்டது. ஆனால் பிப்ரவரியில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இல்லை. அதன்பின் 3 வாரம் வேகமாக பரவி விட்டது. மீண்டும் ஐபிஎல்லை நடத்துவது பற்றி விரைவில் அறிவிப்போம். யுஏஇயில் நடத்தப்படுமா என்பது பற்றி எதுவும் சொல்ல முடியாது, என்றார்.













