Editor's Choice

உடல் ஊனமுற்றோர்

ஊனத்தின் தன்மை/அளவு பற்றிய மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வழங்கும் அடையாள அட்டை மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வழங்கும் பரிந்துரையின்படி இலவச பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

ஊனத்தின் தன்மை, அளவு, விகிதம் ஆகியவை 40 விழுக்காடு அல்லது அதற்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது.

ஆண்டு வருமானம் ரூ.12,000-க்கு மேற்படாமல் இருத்தல் வேண்டும்.

மேற்படி சலுகைக்கான பயண அட்டைகள் ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட வேண்டும்

12ஆம் வகுப்பு வரை ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்ககத்தின் சிறப்புப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சாதாரண மாணவ மாணவியருக்கு வழங்கப்படுவது போல் 100 விழுக்காடு இலவச பயண சலுகை 'இணைய வழியில் வழங்கப்படுகிறது. இப்பயணச்சலுகை ஒவ்வொரு கல்வி ஆண்டிற்கும் வழங்கப்படும்.

மனவளர்ச்சி குன்றியவர்கள்

ஊனத்தின் தன்மை/அளவு பற்றிய மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வழங்கும்அடையாள அட்டை மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வழங்கும் பரிந்துரையின்படி இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

ஊனத்தின் தன்மை, அளவு, விகிதம் ஆகியவை 40 விழுக்காடு அல்லது அதற்கு மேல் இருப்பவர்களுக்கு மட்டுமே இச்சலுகை வழங்கப்படுகிறது.

கடுமையாக மனநிலை பாதிக்கப்பட்டவருடன் துணைக்குச் சென்று வர அவரது உதவியாளர் ஒருவருக்கும் சேர்த்து இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

வருமான உச்ச வரம்பின்றி இலவசப் பயணச் சலுகை வழங்கப்படும்.

12ஆம் வகுப்பு வரை ஊனமுற்றோர் மறுவாழ்வு இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஊனமுற்றோர்க்கான சிறப்புப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சாதாரண மாணவ மாணவியருக்கு வழங்கப்படுவது போல் 100 விழுக்காடு இலவசப் பயணச் சலுகை இணைய வழியில் வழங்கப்படுகிறது.

பார்வையற்றவர்கள்

மருத்துவ அலுவலரின் சான்றிதழின்படி ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை வழங்கும் அடையாள அட்டை மற்றும் மாவட்ட மறுவாழ்வு அலுவலகங்கள் வழங்கும் பரிந்துரையின்படி இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

பார்வையற்றவர்களுக்கு அனைத்துத் தடங்களிலும் ஆண்டு முழுவதும் பயணம் செய்யக் கூடிய வகையில் இலவசப் பயணச் சலுகை வழங்கப்படுகிறது.

பார்வையற்றவர்களுக்கு வருமான உச்சவரம்பு இன்றி இலவசப் பயணச் சலுகை ஆண்டிற்கு ஒரு முறை வழங்கப்படுகிறது.

பார்வையற்றவர்களைப் பொறுத்தவரை அவர்களுக்கு மாற்றுப் பயண அட்டை ரூ.10 வசூலிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

விண்ணப்பப் படிவம்

இந்த இலவசப் பயணச் சலுகைக்கான விண்ணப்பப் படிவங்களை தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். இதனை முழுமையாக நிரப்பி அந்தந்த பகுதியிலிருக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் பரிசீலிக்கப்பட்டு இலவசப் பயணச் சலுகை அளிக்கப்படும். அந்த விண்ணப்பப் படிவத்துடன் கீழ்காணும் சான்றிதழ்கள் அவசியம் இணைக்கப்பட வேண்டும்.

இலவச பயணச் சலுகை பெறும் ஊனமுற்றவர்கள் மருத்துவமனை/கல்லூரி/பயிற்சிக் கூடம்/பணியிடம்/ சுயமாக வேலை செய்யும் இடம் இவற்றில் ஏதேனும் ஒருஇடத்திற்கு மட்டும் சென்று வர இலவச பயணச் சலுகைக்கு உரிய சான்றிதழை சமர்பிக்க வேண்டும்.

மாவட்ட மறுவாழ்வு அலுவலரின் பரிந்துரை பெற்று வரவேண்டும்.

விண்ணப்பதாரர் இலவசப் பயணச்சலுகை கோரும் விண்ணப்பத்துடன் தனது இரண்டு புகைப்பட நகல்களை
(தபால்தலை அளவு) சமர்ப்பிக்கவேண்டும்.

வருமானச் சான்றிதழ் வட்டாட்சியரிடமிருந்து பெற்று சமர்பிக்கவேண்டும்.

மேற்படி இலவச பயணச்சலுகை ஒவ்வொரு மாதமும் புதுப்பிக்கப்பட வேண்டும்.

நான்கில் ஒரு பங்கு பயண கட்டண சலுகை

சமூக நலம் - ஊனமுற்றோர் நலம் - அனைத்துவகை ஊனமுற்றோரும் பாகுபாடின்றி மாநிலம் முழுவதும் இரயில் கட்டணச் சலுகை போல் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயண எண்ணிக்கை உச்சவரம்பின்றி பயணம் செய்ய அனுமதி அளித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது. அரசு ஆணை எண் : G.O. Ms. No.18

Editor's Choice

மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், மாற்றுத்திறனாளிகளுக்கென்றே, தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் சார்பில் - எங்களது கல்வி மையம், இலவசமாக அனிமேஷன், மல்டிமீடியா, வெப் சைட் டிசைனிங் , Tally மற்றும் இன்ன பிற மென்பொருள் சம்மந்தப்பட்ட பாடங்களுக்கு ( software Courses) எங்களது மையத்தில், இலவசமாக பயிற்சியும் , பயிற்சி முந்தவுடன் வேலை வாய்ப்பு வசதியும் செய்து தருகிறோம்.

குறிப்பு : பயிற்சியின் போது, இலவச பஸ் பாஸ் வசதியும் செய்து தரப்படும்,

கல்வி தகுதி 10 /12 / ITI /டிப்ளமோ / ANY DEGREE

பயிற்சி காலம் : 45 - 50 நாட்கள் (250 மணி நேரம்)

அணுக வேண்டிய முகவரி:

கல்வி அறக்கட்டளை,

135 , கே கே நகர் முதல் மெயின் தெரு,

மதுரை - 625020

Editor's Choice

* மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சேவைகள் என்ன?.

- மாவட்டத்தில் 31 ஆயிரத்து 972 பேர் மாற்றுத்திறனாளிகளாக பதிவு செய்துள்ளனர். இவர்களது தேவையை அறிந்து அரசின் சலுகைகளை பெற்று தரப்படுகிறது.

* மன நலம் பாதித்தோருக்கு நிதி உதவி என்ன.

மன நலம் 45 சதவீதம் குன்றியோருக்கு, 75 சதவீதத்திற்கு மேல் கடுமையான கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், 40 மற்றும் அதற்கு மேல் தசை திசைவு நோயால் பாதிக்கப்பட்டோர், 40 சதவீதம் மற்றும் அதற்கு மேல் தொழு நோயால் பாதிக்கப்பட்டோருக்கு பராமரிப்பு உதவித்தொகையாக மாதம்தோறும் தலா ரூ.1500 வழங்கப்படுகிறது.

* சமூக பாதுகாப்பு திட்டம் மூலம் நிதி வழங்கப்படுகிறதா.
- கண் பார்வை, செவித்திறன், கை, கால் பாதித்தோருக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை வழங்கப்படுகிறது. வேலை வாய்ப்பற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு நிவாரண உதவி உண்டா.- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பற்றோர் நிவாரண உதவி தொகை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் பெற்றுத்தரப்படுகிறது.

* மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி தொகை தடையில்லாமல் கிடைக்கிறதா.

- 2020 ல் ஜூன் வரை வழங்கப்பட்டு விட்டது.

* வேறு சில நலத்திட்ட உதவிகள் என்ன.

- 40 சதவீதம் பாதிப்புள்ளோருக்கு தேசிய அடையாள அட்டை வழங்குதல், கை, கால் பாதித்த, காது கேளாதோர், பார்வையற்றோருக்கு நல்ல நிலையில் உள்ளவர்களை திருமணம் செய்து வைத்தல் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பிற மாற்றுத்திறனாளிகளிகளை திருமணம் செய்து கொண்டால் டிப்ளமோ, பட்டப்படிப்பு முடித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம், மற்றவர்களுக்கு ரூ.25 ஆயிரம் மற்றும் 8 கிராம் தாலிக்கு தங்கம் வழங்கப்படுகிறது.

* மாற்றுத்திறனாளிகளுக்கு கல்வி உதவித்தொகை.

- 1 முதல்- 5 ம் வகுப்பு ரூ.1000, 6 - முதல் 8 ம் வகுப்பு ரூ.2000, 9 முதல் - பிளஸ் 2 ரூ.3000, இளநிலை படிப்பு ரூ.4000, முதுகலை படிப்பு ரூ.7000 என கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது.

உயர் கல்வி பயில்வோருக்கு சலுகைகள் உண்டா.

- உயர் கல்வி நிலையங்களில் கல்வி கட்டணம் மற்றும் சிறப்பு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு அளித்தல்,சட்டப்படிப்பு பயின்ற மாற்றுத்திறனாளிகளுக்கு வழக்கறிஞராக பதிவு செய்வதற்கு, சட்ட புத்தகம் வாங்க ரூ.3000 வழங்கப்படுகிறது.

அரசின் பிற சலுகைகள் என்ன.

- அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளுக்கும் நான்கில் ஒரு பங்கு கட்டணத்தில் தமிழ்நாடு முழுவதும் இலவச பஸ் பயண சலுகை உண்டு. தனியாக பயணம் செய்ய இயலாத மாற்று திறனாளிகளுடன் உதவியாளர் நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன் பயணம் செய்யவும் சலுகை உண்டு.

சுய தொழில் துவங்க உதவி செய்யப்படுமா.

- பிரதமர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் 5 சதவீதம் தனிநபர் பங்கு தொகையை அரசு வழங்குகிறது. தேவிய ஊனமுற்றோர் நிதி மேம்பாடு நிறுவனத்தின் மூலம் சுய தொழில் துவங்க ரூ.25 ஆயிரம் முதல் ரூ.25 லட்சம் வரை குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.

மன வளர்ச்சி குன்றியோருக்கான காப்பகம் உள்ளதா.

- மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான காப்பகத்தில் சேர்ப்பதற்கு சிவகாசி ஈஞ்சார் விலக்கில் அரசு நிதி உதவியுடன் ஜீவக்கல் மன நல காப்பகம் இருபாலருக்கும் இலவமாக நடத்தப்படுகிறது.

* மன நலம் குன்றிய பெண்களுக்கு காப்பகம் உண்டா.-

விருதுநகர் குல்லுார் சந்தையில் அரசின் நிதியுடன் 14 வயதுக்கு மேற்பட்ட மன வளர்ச்சி குன்றியோருக்கான பெண்கள் காப்பகம், பயிற்சி மையம் உள்ளது என்றார்.

தொடர்புக்கு 04562 252 068.

Editor's Choice

தேசிய பார்வையற்றோர் இணையமும், அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையமும் இணைந்து, பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பயிற்சி அளித்து வருகின்றன. இவர்களுக்கு, போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவர்களே பயிற்சியளிப்பது, விழியிழந்த மாற்றுத்திறனாளிகளின் வாழ்வில் ஒளியேற்றும் முயற்சிக்கு பேருதவியாக அமைந்துள்ளது.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் போட்டித் தேர்வுகளில் கலந்து கொண்டு தேர்ச்சி பெறுவதற்கு ஏதுவாக, கோவை வரதராஜபுரத்தில் தேசிய பார்வையற்றோர் இணையத்தைச் சேர்ந்தவர்கள் இலவச பயிற்சி வகுப்பு நடத்தி வருகின்றனர்.

பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் சமூக, பொருளாதார ரீதியில் மேம்பாடு அடைய வேண்டும். சரியான வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுப்பதன் மூலம் மட்டுமே இது சாத்தியம் ஆகும். நாடு முழுவதும் 42 அரசுத் துறைகளில் உள்ள காலி இடங்கள் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளைக் கொண்டு நிரப்பப்பட உள்ளன.

அம்பேத்கர் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையம் அவர்களுக்கு இலவசமாக கற்றுத் தர முன் வந்தது. இதில், சிறப்பு என்ன வென்றால் அந்த மையத்தில் போட்டித் தேர்வுகளுக்கு பயின்று வரும் பட்டதாரிகளும், போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற பட்டதாரிகளும், இங்கு வந்து பார்வையற்றவர்களுக்கு சொல்லிக் கொடுத்து வருகின்றனர்.

இந்த பயிற்சியில் 10-ம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு முடித்த பார்வையற்ற பட்டதாரிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு தேவையான பயிற்சி, தங்குமிடம், உணவு ஆகியவற்றை இவர்களே கொடுக்கின்றனர். தற்போது 35 பேர் வந்து பயின்று வருகின்றனர். போட்டித் தேர்வுகளுக்கு தயாராக விரும்பும் பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் பயிற்சியில் கலந்து கொள்ளலாம் .

‘பொருளாதாரத்தில் பின் தங்கிய ஏழை பட்டதாரிகளுக்கு இலவச பயிற்சி கொடுத்து வருகின்றனர். கடந்த 3 ஆண்டுகளில் எங்களிடம் பயிற்சி பெற்ற 103 பேர் தேர்ச்சி பெற்று வங்கி, பொதுத் துறை காப்பீட்டு நிறுவனம் உள்ளிட்ட வற்றில் பணியில் உள்ளனர்.

பொதுவாக, சாதாரண மாணவர்கள், வகுப்பில் பாடத்தை கவனிக்கிறார்களா என்பதை அவர்களின் கண்ணை பார்த்து அறிவோம். ஆனால், இங்கு கற்றுத் தருவதை கேட்டு பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் காட்டும் முகபாவனைகள் கற்றுத் தருபவர்களுக்கு மேலும் ஊக்கம் அளிக்கிறது. இந்த முயற்சிக்கு இந்த மையத்தில் பயின்ற மாணவ, மாணவிகளும் மனப்பூர்வமான ஒத்துழைப்பு தருவதால்தான் இந்த முயற்சி சாத்தியம் ஆகியுள்ளது’.

Editor's Choice

அதிகம் படிக்காத மற்றும் பொருள் இல்லாத இளைஞர்களையும், இல்லத்தரசிகளையும் தொழில் முனைவோர்களாக்குவதில் முன்னோடியாகத் திகழ்கிறது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனம்.

மாணவ, மாணவிகளிடையே தொழில் முனையும் ஆர்வத்தை ஊக்குவிக்கும் பாடத் திட்டங்கள் மூலம் தொழில் முனைவோரை உருவாக்கும் வகையில், கடந்த 2004-ம் ஆண்டு திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் சுய வேலை மேம்பாட்டு நிறுவனம் (ஐ.இ.சி.டி) தொடங்கப்பட்டது.

100-க்கும் மேற்பட்ட திறன் வளர்ப்புப் பயிற்சிகளை உருவாக்கி, சுமார் 20 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்குப் பணி வாய்ப்பு வழங்க உதவியுள்ள ஐ.இ.சி.டி நிறுவனத்தின் இயக்குநர் பேராசிரியர் கோ. பார்த்தசாரதியுடன் உரையாடியது :

""ஒருவர் பணி வாய்ப்புப் பெற வேண்டும், தொழில்முனைவோராக வேண்டும் என்ற விருப்பம் மட்டும் தான் இந்நிறுவனத்தின் பயிற்சி சேர்க்கைக்கான முதல் தகுதி. அவரவர் விருப்பத்துக்கேற்ற திறன் மற்றும் அறிவை வளர்த்து, அவர்களைச் சொந்தக் காலில் நிற்கச் செய்வதே இந்நிறுவனத்தின் பிரதான நோக்கம்.

 
அடிப்படைக் கணினிப் பயிற்சி, தொடர்புத் திறன் பயிற்சி, மென்திறன் பயிற்சி, தொலைபேசியைக் கையாளுதல் பயிற்சி, சந்தையியல் பயிற்சி, மல்டி மீடியா என பல்வேறு சான்றிதழ் படிப்புகளும், பட்டய மற்றும் பெரும் பட்டயப் படிப்புகளும் (அட்வான்ஸ்டு டிப்ளமோ) இங்கு பயிற்றுவிக்கப்படுகின்றன.

வேலைவாய்ப்புக்கேற்ற புதிய படிப்புகளை அவ்வப்போது வகுத்து, அதற்கான பாடத்திட்டங்களை முறைப்படுத்தி கல்வியும், பயிற்சியும் அளிக்கப்படுகிறது. இங்கு பயிற்சி பெறுபவர்கள், தங்களின் எதிர்காலத் தொழில் திட்டம் குறித்து தானே திட்டம் தயாரிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகின்றன.

மேலும் அவர்களுக்கு மத்திய, மாநில அரசுத் திட்டங்கள் மூலம் கடன் கிடைக்கவும், வங்கிக் கடன் கிடைக்கவும் வழிவகை செய்யப்படுகிறது.

பாரதிதாசன் பல்கலைக்கழகக் கட்டுப்பாட்டுக்குள்பட்ட கல்லூரிகளில் பட்டப்படிப்பு, பட்டமேற்படிப்பு இறுதியாண்டு பயிலும் மாணவர்களில், கல்லூரிக்கு 100 பேர் வீதம் தேர்ந்தெடுத்து, அவர்களின் சுயதொழில் ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

இதில், மாணவர்களின் ஆர்வத்தின் அடிப்படையில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானோர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்குக் கூடுதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சி பெறும் மாணவர்களுக்குப் பன்னாட்டு நிறுவனங்களில் பணி வாய்ப்புப் பெற்றுத் தரும் நடவடிக்கைகள் பல்கலைக்கழகம் மூலம் மேற்கொள்ளப்படுகிறது. இதன் மூலம், சுமார் 30 ஆயிரம் முதல் 35 ஆயிரம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

ஏதேனும் ஒரு குறிப்பிட்ட பயிற்சியைப் பெற விரும்புவோர், பயிற்சி நேரம் மாலை 6 மணிக்கு வேண்டும் எனக் கோரினால் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் பயிற்சி அளிக்க வேண்டும் எனக் கோரினாலும் அதற்கேற்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. ஆர்வம் கொண்ட 20 முதல் 30 பேர் ஒரு குழுவில் இருந்தால் போதும். அவர்கள் விரும்பும் நாளில், விரும்பும் நேரத்தில் பயிற்சி அளிக்கப்படும்.

தொலைவு காரணமாக இங்கு வந்து பயிற்சி பெற முடியாத மாணவ, மாணவிகளுக்கும் இந்நிறுவனத்தின் பயிற்சி கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில், 34 நிறுவனங்களுடன் கல்வி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு, ஐ.இ.சி.டி பாடத்திட்டங்கள் மூலம் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, ஒவ்வொரு மாவட்டத்திலும், ஒரு கல்லூரி மாதிரி மையமாகத் தேர்வு செய்யப்பட்டு அந்தக் கல்லூரி மூலமும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாதிரி மையங்கள் மூலம் இதுவரை சுமார் 3,241 பேருக்குப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

கரூர் மற்றும் திருச்சி ஆகிய 2 மாவட்டங்களில் மாவட்ட வாழ்க்கை வழிகாட்டி மற்றும் ஆலோசனை மையம் மூலம் தொழிற்பயிற்சி அளிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டமும் சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. பள்ளி - பல்கலைக்கழகம் - தொழில் நிறுவனங்கள் இணைப்புத் திட்டம் (நமஐபந) என்ற திட்டம் 2010-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படுகிறது. பள்ளிக் கல்வியின் போதே குழந்தைகளுக்குத் தொழில் திறன் குறித்த புரிதல், அடிப்படை கணினிப் பயிற்சி அளிக்கும் இத்திட்டம் மூலம் இதுவரை சுமார் 1.37 லட்சம் பள்ளிக் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.
 

கிராமப்புற இளைஞர்கள், படிப்பைப் பாதியில் கைவிட்டவர்கள், படித்து பட்டம் பெற்றும் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், இல்லதரசிகள், மூத்தகுடிமக்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்துத் தரப்பினருக்கும் தொழிற்பயிற்சியும், சான்றிதழ் படிப்பையும் பயிற்றுவிக்கும் இந்த நிறுவனம் மூலம் இதுவரை சுமார் 1.93 லட்சத்துக்கும் அதிகமானோர் பயிற்சி பெற்றுள்ளனர்.

தொழில் முனைதல் மற்றும் திறன் மேம்பாடு மையத்தை ஐ.இ.சி.டி- மூலம் அமைக்க தமிழக அரசின் உயர்கல்வித் துறை கடந்த 2012-ம் ஆண்டில் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்ததும், மத்திய அரசின் குறு மற்றும் சிறு தொழில் அமைச்சகம் ஆர்.ஜி.யு.எம்.ஒய் திட்டத்தின் கீழ் இந்நிறுவனத்தை அங்கீகரித்ததும் ஐ.இ.சி.டி-யின் தொழில் பயிற்சி பணிகளுக்கு ஓர் சான்று'' என்றார் கோ. பார்த்தசாரதி.
Editor's Choice
மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு, சுங்க கட்டணத்தில் இருந்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் விலக்கு அளித்துள்ளது
 
மாநில, தேசிய நெடுஞ்சாலைகளில், மாற்றுத் திறனாளிகளின், மூன்று சக்கர வாகனங்களுக்கு, கட்டணச் சலுகை உள்ளது. ஆனால், கார் போன்ற மாற்றுத் திறனாளி வாகனங்களுக்கும், தேசிய நெடுஞ்சாலைகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. 'மாற்றுத் திறனாளிகளின் அனைத்து வாகனங்களுக்கும், சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்' என, பல அமைப்புகளும் வலியுறுத்தி வந்தன.
 
இந்நிலையில், ஜூன், 13 முதல், மாற்றுத் திறனாளிகளுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட, மாறுதல் செய்யப்பட்ட வாகனங்களுக்கு, சுங்க கட்டணத்தில் இருந்து விலக்கு அளித்து, தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உத்தரவிட்டு உள்ளது. ஆனால், இது பெரிதாக பயன் அளிக்காது என, மாற்றுத் திறனாளி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
 
இதுகுறித்து, அனைத்து வகை மாற்றுத் திறனாளிகளுக்கான கூட்டமைப்பின் பொதுச் செயலர் நம்புராஜன் கூறியதாவது:ஏற்கனவே, மாற்றுத் திறனாளிகளின் இரு சக்கர, மூன்று சக்கர வானங்களுக்கு கட்டணச் சலுகை உள்ளது. தற்போது, பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்கு சலுகை என்றால், மாற்றி வடிவமைக்கப்பட்ட கார்கள் என, கருதலாம். இவ்வாறு, கார் வைத்துள்ள மாற்றுத் திறனாளிகள், தமிழகத்தில், 100 பேர் கூட இருக்க வாய்ப்பில்லை.
 
கார் இல்லாத, கார் ஓட்டத் தெரியாத மாற்றுத் திறனாளிகள் வாடகை கார், மற்றவர்களின் கார்களை பயன்படுத்துவர். மாற்றுத் திறனாளிகள் செல்லும் அனைத்து கார்களுக்கும் சலுகை என, அறிவித்திருந்தால் பயனுள்ளதாக
இருந்திருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

பக்கம் 18 / 21