Editor's Choice

சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில் புது முயற்சியாக, தூய்மை பணியாளர் பிரிவில், 12 மாற்றுத்திறனாளிகளுக்கு பணி வழங்கப்பட்டது.
சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டலத்தில், 14 வார்டுகள் உள்ளன. இதில், 1,506 தெருக்களில், 87 ஆயிரத்து, 418 குடியிருப்புகள் உள்ளன; 3.83 லட்சம் பேர் வசிக்கின்றனர். தினமும் சேகரமாகும், 175 டன் குப்பையை, 1,200க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.மாநகராட்சியில், புது முயற்சியாக, திருவொற்றியூரில், இரண்டு வாரங்களுக்கு முன், ஒன்பது திருநங்கையர் துாய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்டனர்.

தொடர்ந்து, செவித்திறன் குறைபாடு உடைய, 12 மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர் பிரிவில் ஊழியர்களாக சேர்க்கும் நிகழ்ச்சி, நேற்று காலை, திருவொற்றியூர் குப்பை மேடு பகுதியில் நடந்தது.இதில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை ஆணையர்ஜானி டாம் வர்கீஸ், மண்டல உதவி ஆணையர்தேவேந்திரன் மற்றும் செயற்பொறியாளர் பால் தங்கதுரை பங்கேற்று, தூய்மை பணியாளர்களாக சேர்க்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, பாதுகாப்பு உடைகள் வழங்கினர்.பின், மாற்றுத்திறனாளிகளுக்கு, குப்பை தரம் பிரிப்பு, உரம் தயாரிப்பு போன்ற பணிகள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது.

பின், ஜானி டாம் வர்கீஸ் அளித்த பேட்டி:சென்னை மாநகராட்சியில், முதன் முறையாக, 12 மாற்றுத்திறனாளிகள், தூய்மை பணியாளர் பிரிவில், பணியமர்த்தப்பட்டுள்ளனர். புதிய முயற்சிகளை செயல்படுத்துவதில், திருவொற்றியூர் முன்மாதிரியாக திகழ்கிறது.மற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் பணி கிடைக்கும் வகையில், 12 பேரும் முன்மாதிரியாக பணியாற்ற வேண்டும் எனக் கூறினார்.

Editor's Choice

மாற்றுத்திறனாளிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கு தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் சுய வேலைவாய்ப்பு மூலம் ஆவின் பால் பூத் வைப்பதற்கு வங்கிக்கடன் பெற்று பயன்பெறும் திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மானிய தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாக நடப்பாண்டு முதல் உயர்த்தி வழங்க செயல்படுத்தப்பட்டு உள்ளது.

ஆவின் நிறுவனத்தின் மூலம் இதன் உற்பத்தி பொருட்களை விற்பனை செய்து பலன் பெறும் வகையில் உரிமையாளர் சில்லறை விற்பனை நிலையம் முகவர்களாக தமிழகத்தில் 200 நபர்களுக்கு உதவ முன்வந்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் ஆவின் நிறுவனத்தின் உற்பத்தி பொருட்களான பால், வெண்ணெய், நெய், ஐஸ்கிரீம் உள்ளிட்ட பொருட்களை கொள்முதல் செய்து குளிர்சாதன பெட்டிகளில் வைத்தும், இதர முறைகளில் பராமரித்து விற்பனை செய்ய ஏதுவாக இடத்தின் வசதியினை சொந்தமாகவோ, வாடகைக்கோ அல்லது பயனாளிகள் தமது சொந்த முயற்சியால் அனுமதி பெற்ற பின்னர் அலுவலகத்தில் கடனுதவி பெற விண்ணப்பிக்க வேண்டும்.

ஆவின் நிறுவனம் மற்றும் கடனுதவி வழங்கும் வங்கியின் ஒப்புதல் பெற்ற பின்னர் இந்த அலுவலகத்தின் மூலம் மானியம் வழங்கப்படும். 2019-20-ம் ஆண்டிற்கு பால் பொருட்களை விற்பனை செய்ய மானியத்துடன் கூடிய வங்கிக்கடன் பெறுவதற்கு விண்ணப்பங்களை பெற்று கொள்ளலாம். அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் திட்ட அறிக்கை மற்றும் இதர இணைப்புகளான மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல் மற்றும் பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் அந்தந்த மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் முறையாக விண்ணப்பிக்க வேண்டும். தகுதியுடைய மாற்றுத்திறனாளிகளுக்கு மாற்றுத்திறனாளிகள் நல மையம் மூலம் ஆவின் பால் பூத் வைக்க ஏற்பாடு செய்து கொடுக்கப்படுகிறது.

 

Editor's Choice
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாவட்ட தொடக்கநிலை இடையீட்டு சேவை மையம் மற்றும் குழந்தைகள் நலத்துறை சாா்பில் செவித்திறன் கண்டறியும் கருவி மக்கள் பயன்பாட்டுக்காக புதன்கிழமை வழங்கப்பட்டது.


நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி முதல்வா் ஜெ. முத்துக்குமரன் பங்கேற்று, செவித்திறன் கருவியை மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்து பேசியது:

இந்தக் கருவியால் குழந்தைகளின் காது கேளாமை குறைபாட்டை தொடக்க நிலையிலேயே கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு காது கேட்கும் கருவி அல்லது முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உட்செவிச்சுருள் பதியும் அறுவை சிகிச்சை முற்றிலும் கட்டணமில்லாமல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அவா்களின் காது கேட்கும் திறனும், வாய் பேசும் திறன் காப்பாற்றப்படுகிறது.

இவ்வாறு சிகிச்சை பெறாத குழந்தைகளின் காது கேட்கும் திறன் பாதிக்கப்படுகிறது. இவா்களுக்கு சிறுவயதிலேயே சிகிச்சை அளிக்காவிட்டால் காது கேளாமை மற்றும் வாய் பேசாமை குறைபாட்டுடன் குழந்தை பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த பரிசோதனைக்காக இதுவரையிலும் வெளியூா் செல்லும் நிலை இருந்தது. இனிமேல், டெல்டா பகுதி மக்கள் திருவாரூா் அரசு மருத்துவக்கல்லூரியில் இந்த பரிசோதனை செய்து கொள்ளலாம் என்றாா்.

நிகழ்ச்சியில், மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் ஜி. ராஜாராம், குழந்தைகள் நலத் துறை பேராசிரியா் ஆா். கண்ணன், துணைக் கண்காணிப்பாளா் எஸ். அப்துல் ஹமீது அன்சாரி, குழந்தைகள் நலத்துறை இணைப் பேராசிரியா் செந்தில்குமாா், நிலைய மருத்துவ அலுவலா் ராமச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

Editor's Choice

ஃபாஸ்டேக் அமலுக்கு வருவதற்கு முன்புவரை, மாற்றுத் திறனாளிகள் முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து கட்டணச் சலுகைகளைப் பெற்று வந்தனர். முறையான ஆவணங்கள் இல்லாதபட்சத்தில், அவர்களும் சுங்க வரி செலுத்த வேண்டியிருந்தது.

கட்டண வரிவிலக்கு மாற்றுத்திறனாளிகளின் எல்லா வாகனங்களுக்கும் பொருந்தாது. குறிப்பாக மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டுக்கு எனப் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட வாகனங்களுக்குத்தான், இந்தியாவில் கட்டண வரி செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்படுகின்றன. இந்த வரி விலக்கானது, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் இயக்கப்படும் அனைத்து நெடுஞ்சாலைகளிலும் உள்ள டோல் பிளாசாக்களுக்கும் பொருந்தும். மோட்டார் வாகனச் சட்டம், 1988-ன் பிரிவு 2 (18) படி, அத்தகைய வாகனங்களைத் `தவறான வாகனம்' என வரையறுக்கிறது. எனவே, உங்கள் வாகனத்தின் முன்பதிவுச் சான்றிதழில் (RC Book), அந்தத் தவறான வாகன பிரிவின் கீழ் பதிவுசெய்யப்பட்ட வாகனத்தைக் காட்ட வேண்டும்.

 ஒரு வழக்கமான காரில் பயணிக்கும் ஊனமுற்ற ஒருவர், சுங்க வரிக் கட்டணத்தைக் கண்டிப்பாகச் செலுத்த வேண்டி இருந்தது. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் 2 கோடியே 68 லட்சம் பேர் ஊனமுற்றவர்கள். ஆனால் இவர்களில், மிகக் குறைந்த நபர்கள் மட்டுமே வாகனம் ஓட்டுகிறார்கள். அவர்களை ஊக்குவிக்கும் விதமாக, கட்டண வரி விலக்கு மற்றும் கலால் வரிச்சலுகை போன்ற நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தி, குறைபாடுகள் கொண்டவர்கள் தங்கள் சொந்த வாகனங்களை ஓட்டுவதற்கும், சுய சார்புடையவர்களாக மத்திய அரசு மாற்றியது எனலாம்.

இதுவரை உள்ள நடைமுறையில் கட்டண வரிவிலக்கு கோரும்போது, தவறான வாகனத்தின் (invalid Carriage) ஓட்டுநர் தொடர்புடைய ஆவணங்களைக் காட்ட வேண்டியிருந்தது. இதன் தொடர்ச்சியாக டோல் பூத் ஆபரேட்டரை நம்ப வைப்பதும் நேர விரயத்தை உண்டாக்கியது என்பதே உண்மை. மத்திய அரசு (invalid-carriage) தவறான வாகனமாகப் பதிவுசெய்யப்பட்டவைக்கு இலவச ஃபாஸ்டேக்கை வழங்கி, இந்தப் பிரச்னையைச் சரிசெய்தது. தற்போது ஃபாஸ்டேக் அனைவருக்கும் கட்டாயம் என்றாகியுள்ள நிலையில், அவர்களுக்கு என்ன மாதிரியான சலுகைகள், எந்த முறையில் இருக்கின்றன என்பது குறித்து தெரிந்துகொள்ள, பவன்குமாரிடம் (NHAI - Chennai Regional Officer) கேட்டறிந்தோம்.

`ஃபாஸ்டேக் முறை டிசம்பர் 15, 2019-ல் இருந்துதான், நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு முன்பிலிருந்தே ஃபாஸ்டேக், மாற்றுத் திறனாளிகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டுவிட்டது. அதன் மூலமாகவே அவர்கள் தங்களின் வாகனங்களை, அந்தந்தப் பகுதியின் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் முறையான சான்றுகளைக் கொடுத்து, (In-Valid) தகுதியற்ற வாகனமாக மாற்றிப் பதிவுசெய்து, அதைக் கொண்டு ஃபாஸ்டேக் பெற்று, அனைத்து சுங்கச் சாவடிகளிலும் (Free Of Cost) கட்டண வரி விலக்கு பெற்று வந்தனர். தற்போது ஃபாஸ்டேக் அனைத்து சுங்கச்சாவடிகளிலும் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், மாற்றுத்திறனாளிகளைப் பொறுத்தவரையில், அவர்கள் இதுவரை பெற்றுவந்த கட்டண வரி விலக்கு எந்தவிதமான மாறுதலுமின்றி தொடரும். இதுவரை ஃபாஸ்டேக்கைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ளாத மாற்றுத் திறனாளிகள், தங்கள் அருகில் உள்ள சுங்கச்சாவடி அலுவலகத்துக்குச் சென்று, முன்பதிவு செய்து ஃபாஸ்டேக்கை பெற்றுக்கொள்ளலாம் " என்றார்.

மாற்று திறனாளிகள், தங்களுக்கென பிரத்யேக ஃபாஸ்டேக்கினை எப்படி பெறுவது ?

ஃபாஸ்டேக் பெற விரும்பும் மாற்றுத்திறனாளிகள், முதலில் தாங்கள் வசிக்கும் மாவட்டத்தின் மருத்துவமனையை அணுகி விண்ணப்பித்து, தங்கள் குறைபாட்டை நிரூபிப்பதுடன், அதற்கான முறையான ஆவணங்களைச் சமர்ப்பித்து Disability Certificate பெற்றுக்கொள்ள வேண்டும். பின்னர், தாங்கள் பயன்படுத்தும் வாகனத்தை, தங்களின் பயன்பாட்டுக்காகப் பிரத்யேகமாக மாற்றிவடிவமைத்து, அதை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் காட்டி, தங்கள் வாகனத்தை (Invalid-Carriage) ஆகப் பதிவு செய்துவிட வேண்டும். பின்னர் தேசிய நெடுஞ்சாலை துறையின் வட்டார அலுவலகத்துக்கு நேரில் சென்று Disability Certificate (ph), Invalid Carriage Registration Certificate, ஓட்டுநர் உரிமம் (Handicapped), ஆதார் அட்டை, பான் அட்டை, இருப்பிடச் சான்று, புகைப்படம் கொண்டு, மாற்றுத் திறனாளிகள் ஃபாஸ்டேக் பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பத்தின் உண்மை நிலை அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்ட பின்னர், தபால் மூலமாக ஃபாஸ்டேக் விண்ணப்பதாரரின் முகவரிக்கு அனுப்பிவைக்கப்படும். அவற்றை அவர்கள் வாகனத்தின் விண்ட்ஷீல்ட்டில் ஒட்டிவிட வேண்டும். டோல் பிளாசாக்களின் அருகே, அதாவது 20-25 மீட்டருக்குள் வாகனங்கள் வரும்போது, அங்கேயுள்ள ரேடியோ அதிர்வெண் தொழில்நுட்பச் சாதனம், ஃபாஸ்டேக் மூலம் வாகன விவரங்களை கண் இமைக்கும் நேரத்தில் கண்டறிந்து, வருகைப்பதிவு செய்து வாகனங்கள் முன்னே செல்வதற்கு அனுமதிக்கும். மற்றவர்களைப் போன்று வங்கி கணக்குகளுடன் ஃபாஸ்டேக்கை இணைத்துகொள்ள வேண்டிய கட்டாயமும், ரீசார்ஜ் செய்துகொள்ள வேண்டிய அவசியமும், மாற்று திறனாளிகளுக்கு கிடையாது!

 

Editor's Choice

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த மாற்றுத்திறனாளிகள் ஆவின் பால்பொருள் விற்பனை மையம் தொடங்கிப் பயன்பெற ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த கை, கால், செவித்திறன் பாதிக்கப்பட்டோா் மற்றும் பாா்வையற்றோா் ஆவின் நிறுவன பால் உற்பத்திப் பொருள்களை விற்பதற்கு ஆவின் முகவா்களாகும் வாய்ப்புள்ளது.

தோ்வு செய்யப்பட்டோருக்கு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வாயிலாக ஆவின் நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய முன் வைப்பு நிதியாக ரூ.25 ஆயிரம் மற்றும் ஆவின் பொருள் கொள்முதல் நிதியாக ரூ. 25 ஆயிரம் என மொத்தம் ரூ.50 ஆயிரம் மானியமாக வழங்கப்படுகிறது.

இதனடிப்படையில் ஆவின் உற்பத்திப் பொருள்களை கொள்முதல் செய்து கடை வைத்து வியாபாரம் செய்ய விண்ணப்பிக்கலாம்.

ஆவின் உற்பத்தி பொருள்களை விற்க வசதியாக வாடகை இடமாகவோ அல்லது சொந்த இடமாகவோ இருக்க வேண்டும். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், மாா்பளவு புகைப்படம்- 1 வங்கி கணக்குப் புத்தக நகல், ஆதாா் காா்டு ஆகியவற்றுடன் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், மாவட்ட நீதிமன்ற பின்புறம், கண்டோன்மெண்ட், திருச்சி-1 என்ற முகவரியில் நேரில் வரும் 30ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு 0431-2412590.

Editor's Choice

சிறு தொழில்கள் மற்றும் பெட்டிக்கடைகள் திட்டத்தின் கீழ் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கடனில் மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் தகுதி உள்ள மாற்றுதிறனாளிகள் விண்ணப்பிக்கலாம் என்று திருச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டத்தில் சுயதொழில் செய்ய விரும்பும் 18 வயதிற்கு மேல் 45 வயதுக்கு உட்பட்ட கை கால் இயக்க குறைபாடுடையோர், பார்வையற்றோர், காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாத மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் செய்ய விரும்பும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் 75 ஆயிரம் வரை வங்கி கடன் வழங்க சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் வங்கி மூலமாக வழங்கப்படும் கடன் தொகையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது அதிகபட்சமாக ரூபாய் 25 ஆயிரம் மானியம் வழங்கப்படும்.

மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் தங்களது மாற்றுத் திறனாளிக்கான தேசிய அடையாள அட்டையின் நகல் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் குடும்ப அட்டையின் நகல் மற்றும் ஆதார் அட்டையின் நகலுடன் நேரில் அலுவலகம் வந்து இத் திட்டத்தில் விண்ணப்பித்து தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக் கொள்ளலாம்.

மேலும் விவரங்களுக்கு திருச்சி கண்டோன்மெண்ட் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை அல்லது அலுவலக தொலைபேசி எண் 0431- 2412590 தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

பக்கம் 16 / 21