Editor's Choice

இந்த எண்ணுக்கு WhatsApp-யில் இருந்து ஒரே ஒரு மெசேஜ் அனுப்பினால் போதும், உங்கள் சொந்த மாநிலத்தில் அரசாங்க வேலை பற்றிய தகவல் விரல் நுனியில் கிடைக்கும்!!

கொரோனா தொற்றால் பலரும் தங்களின் வேலையை இழந்து நிதி நெருக்கடியில் திண்டாடி வருக்கின்றனர். நோய்தொற்று (Covid Pandemic) காரணமாக மக்கள் இயல்பாக வெளியில் பயணம் செய்து வேலை தேடுவதும் கடினமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில், மக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (Science and Technology Department) வாட்ஸ்அப்பில் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சியால், WhatsApp-யில் இருந்து ‘Hi’ என ஒரு மெசேஜ் அனுப்புவதன் மூலம், உங்களின் திறமைக்கு ஏற்ப, உங்களின் சொந்த மாநிலத்தில் அரசு வேலை பற்றிய முழு தகவல்களையும் பெற முடியும்.

அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தொழில்நுட்ப தகவல் முன்னறிவிப்பு மற்றும் பரிணாம கவுன்சில் (TIFAC) ஷ்ரம் சக்தி மன்ச் (SAKSHAM) என்ற போர்ட்டலை உருவாக்கியுள்ளது. இந்த போர்டல் மூலம், அந்த துறையின் தொழிலாளர்கள் WhatsApp மூலம் மைக்ரோ, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுடன்  இணைக்கப்படுவார்கள். இதற்குப் பிறகு மக்கள் தங்கள் பகுதியில் உள்ள வேலைகள் மற்றும் வாய்ப்புகள் பற்றிய வசதியான தகவல்களைப் பெறுவார்கள்.

இந்த வசதியைப் பயன்படுத்த, 7208635370 என்ற WhatsApp எண்ணுக்கு ‘Hi’ என அனுப்ப வேண்டும். அதன் பிறகு, உங்களின் பணி அனுபவம் மற்றும் திறமை பற்றிய தகவல்கள் அந்த நபரிடமிருந்து சாட்போட் மூலம் பெறப்படுகின்றன. பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு அமைப்பு பயனருக்கு தன்னைச் சுற்றியுள்ள வேலைகள் பற்றிய தகவல்களை வழங்குகிறது.

இந்த போர்டல் நாடு முழுவதும் உள்ள MSME களை அந்த பிராந்தியத்தின் வரைபடத்தின் மூலம் இணைக்கும். அதன்பிறகு, திறன் கிடைப்பது மற்றும் தேவையான திறன்கள் குறித்த தரவைப் பயன்படுத்துவதன் மூலம், போர்டல் தொழிலாளர்களுக்கு அவர்களின் பகுதிகளில் வேலை வாய்ப்புகள் குறித்து தெரிவிக்கும்.

தற்போது சாட்போட் ஆங்கிலம் மற்றும் இந்தி மட்டும் இரண்டு மொழிகளில் கிடைக்கிறது. இதை மற்ற மொழிகளுக்கும் விரிவுபடுத்தும் பணி நடந்து வருகிறது.

ஸ்மார்ட்போன்கள் இல்லாத பலர் இன்னும் உள்ளனர். அத்தகையவர்கள் 022-67380800 என்ற எண்ணில் தவறவிட்ட அழைப்பை வழங்குவதன் மூலம் ஆஃப்லைன் பதிப்பை அணுகலாம். இந்த போர்ட்டலை மின்சார வல்லுநர்கள், பிளம்பர்ஸ், விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் பலர் பயன்படுத்தலாம்.

Editor's Choice

பெண்ணை ஆடையுடன் தொடுவது பாலியல் துன்புறுத்தலில் சேராது என சர்ச்சை தீர்ப்பு வழங்கிய மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதி புஷ்பா கனேதிவாலாவின் பதவிக் காலத்தை ஓராண்டாக குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நீதிபதி புஷ்பா கனேதிவாலா வங்கிகள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுக்கான வழக்கறிஞர்கள் குழுவில் பணியாற்றினார். மேலும் அமராவதியின் பல்வேறு கல்லூரிகளில் கவுரவ விரிவுரையாளராகவும் இருந்தார். 2007-ல் நேரடியாக மாவட்ட நீதிபதியாக நியமிக்கப்பட்டவர். 2019-ல் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். ஜன., 19 அன்று போக்சோ சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்கை விசாரித்த இவர், தோலோடு தோல் தொடர்பின்றி சிறுமியின் மார்பகத்தை பிடிப்பது போக்சோ சட்டப்படி குற்றமில்லை என்ற அதிர்ச்சி தீர்ப்பு வழங்கினார்.

5 வயது சிறுமி பாலியல் தொந்தரவால் பாதிக்கப்பட்ட மற்றொரு வழக்கை விசாரித்தவர், சிறுமியின் கையை பிடித்திருப்பதோ, பேண்ட் ஜிப் திறந்திருப்பதோ பாலியல் வன்முறை ஆகாது என கூறி குற்றஞ்சாட்டப்பட்டவரை விடுவித்தார். இந்த தீர்ப்புகளை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், அவர் மீது வழக்கு தொடர அரசுக்கு அனுமதி வழங்கியது. இந்நிலையில் 2 ஆண்டுகளாக இருந்த அவரது கூடுதல் நீதிபதி பதவிக் காலத்தை ஓராண்டாக குறைத்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. முன்னதாக உச்ச நீதிமன்ற கொலிஜியம் அவரை நிரந்தர நீதிபதியாக்கும் பரிந்துரையை திரும்பப் பெற்றது.

Editor's Choice

கூகுள் மேப்ஸ் - கூகுள் எர்த் மூலம் நமக்கு வரைபடங்கள் வழங்கி, நமக்கு பாதைகள் குறித்த வழிகாட்டுதல்களை வழங்கி வழிசெலுத்தி புவிசார் சேவைகளை (maps, navigation and geospatial services) வழங்கி வருகிறது.

இந்நிலையில், மோடியின் கனவான தற்சார்பு இந்தியாவை நோக்கிய மற்றோரு முக்கிய நடவடிக்கையாக, கூகுள் மேப், கூகுள் எர்த் பின்னுக்கு தள்ளி விட்டு முன்னேறுகிறது ISRO-MapmyIndia. இனி நமக்கு கூகிளை சார்ந்து இருக்க வேண்டிய தேவை இருக்காது.

இந்தியர்களுக்கு இந்த சேவையை தரும் வகையில், மேப் மை இண்டியாவும் (MapmyIndia) இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ISRO நிறுவனத்துடன் கை கோர்த்து, இந்த  புதிய சேவையை வழங்கும். 

வரைபடங்கள் மற்றும் புவியியல் சேவைகளை உள்நாட்டு நிறுவனம் வழங்குவது அனைத்து வகையிலும் சிறந்ததாக இருக்கும். இதற்கு பல காரணங்கள் உள்ளன. "மேப்மைஇந்தியா, உள்ளூர், இந்திய நிறுவனமாக இருப்பதால், அதன் வரைபடங்கள் நாட்டின் உண்மையான இறையாண்மையை பிரதிபலிப்பதையும், தரவு பாதுகாப்பையும் உறுதிசெய்கிறது, இந்திய அரசு தகவல்களின் அடிப்படையில் இந்திய எல்லைகளை சித்தரிக்கிறது".

இஸ்ரோவுடனான ஒருங்கிணைந்த கூட்டாண்மை மூலம், மேப்மை இந்தியா தனது பயனர்களுக்கு வழங்கும் வரைபடங்கள் மற்றும் புவி சார் தகவல்கள், இப்போது இஸ்ரோவின் செயற்கைக்கோள் படங்கள் மற்றும் பூமி கண்காணிப்பு தரவுகளுடன் ஒன்றிணைக்கப்படும். 

வெளிநாட்டை சார்ந்த செயலிகள், இந்த சேவைகளை இலவசமாக வழங்குகிறது என கூறினாலும், அதற்கு நாம் மறைமுகமாக அதிக அளவில் பணம் செலுத்துகிறோம்.

மேப் மை இந்தியாவின் தாய் நிறுவனமான சி.இ. இன்ஃபோ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் (CE Info Systems Pvt. Ltd),  விண்வெளித் துறையுடன், இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

இதன் கீழ், விண்வெளித்துறை மற்றும் சி.இ. இன்ஃபோ சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட் இணைந்து  செயல்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Editor's Choice

கடந்த ஆண்டு ஜூன் மாதம் நாசாவால் அனுப்பப்பட்ட பெர்சவரன்ஸ் ரோவர் விண்கலம் பிப்., 18-ல் செவ்வாய் கிரகத்தில் தரையிறங்க உள்ளது. அது வெற்றிகரமாக தரையிறங்கினால் உயிர்கள் வாழ வாய்ப்பு இருக்கிறதா என ஆராயும்.

நாசாவின் ஜெ.பி.எல்., எனும் ஆய்வகத்தால் பெர்சவரன்ஸ் ரோவர் வடிவமைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30-ல் இவ்விண்கலம் புளோரிடாவில் உள்ள கேப் கெனவரல் விமானப்படைத் தளத்தில் இருந்து அட்லஸ் ராக்கெட் மூலம் செலுத்தப்பட்டது. 7 மாத பயணத்துக்கு பிறகு செவ்வாய் கிரகத்தை நெருங்கியுள்ளது. இவ்விண்கலம் பூமியிலிருந்து ரோபோட்டிக் கண்ட்ரோல் மூலம் இயக்கப்படும். செவ்வாய் கிரகத்தின் ஜெசீரோ கிரேட்டர் எனும் 40 கி.மீ அகல பள்ளத்தில் பிப்., 18-ல் தரையிறங்க இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

இந்த தரையிறக்கத்தை 'பயங்கரமான 7 நிமிடங்கள்' என நாசாவின் விஞ்ஞானிகள் கூறுகின்றனர். காரணம், செவ்வாயின் வளிமண்டலத்தை தொடும் பெர்சவரன்ஸ் ரோவர், அங்கிருந்து தரையை அடைய 7 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். வளிமண்டலத்தை நெருங்குவதற்கு சுமார் 10 நிமிடம் முன்பு விண்கலத்திலிருந்து ரோவர் விடுவித்துக்கொள்ளும். பிறகு 13 ஆயிரம் மைல் வேகத்தில் செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்திற்குள் நுழையும். அப்போது உராய்வினால் ஏற்படும் அதிக வெப்பத்தை போக்க வெப்பக் கவசம் அதிலுள்ளது. அதன் பிறகு ரோவர் மீண்டும் விண்கலமாக மாறி தன்னைத் தானே வழிநடத்தும்.

ரோவர் மெதுவான வேகத்தை எட்டியதும், நாசா விஞ்ஞானிகள் ஒரு சூப்பர்சோனிக் பாராசூட்டை பயன்படுத்துவார்கள். அது இயக்கம் பெற்று ரோவரின் வேகத்தை மேலும் குறைக்கும். வெப்பக்கவசத்தை விடுவித்ததும் ஜெசீரோ கிரேட்டர் பள்ளத்தில் பாதுகாப்பான தரையிறக்கம் சாத்தியமாகும் என்கின்றனர். நவீன நேவிகேஷன் தொழில்நுட்பம் மூலம் செவ்வாய் கிரகத்தின் தரையை காணும்.

அதன் அடிப்படையில், தரையிறங்கும் தளத்தை ரோவரே முடிவு செய்யும் நவீன தொழில்நுட்பம் இதிலுள்ளது.

Editor's Choice
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார்.  இதனை தொடர்ந்து, டிரம்ப் பதவி விலக வேண்டியிருந்தது.  ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்துள்ளது என குற்றச்சாட்டு கூறிய டிரம்ப், தனது ஆதரவாளர்களிடையே வன்முறையை தூண்டும் வகையில் தொடர்ந்து பேசினார் என குற்றச்சாட்டு எழுந்தது.
 
பைடனுக்கு அதிபர் பதவிக்கான அதிகாரம் அளிப்பதற்கான மற்றும் சான்றிதழ் வழங்கும் பணிகள் ஆகியவற்றிற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.  இதனால், ஆவேசமடைந்த டிரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இதில் வன்முறை ஏற்பட்டது.  போலீசாரின் தடியடி, கண்ணீர் புகை குண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன.  வன்முறையை தூண்டி விடும் வகையில் டிரம்ப் பேசினார் என கண்டனம் எழுந்தது.  இதனை தொடர்ந்து அவர் மீது கண்டன தீர்மானம் நிறைவேறியது.
 
அமெரிக்க செனட் சபையில் இந்த வழக்கு விசாரணை நடந்தது.  இதில், கடந்த ஜனவரி 6ந்தேதி வன்முறையை தூண்டும் வகையில் பேசிய டிரம்புக்கு எதிராக செனட் சபையை சேர்ந்த குடியரசு கட்சியினர் 7 பேர் வாக்களித்தனர்.
 
அவர்கள் ஜனநாயக கட்சியினருடன் இணைந்து டிரம்புக்கு எதிராக நின்றனர்.  எனினும் அவர் சார்ந்த குடியரசு கட்சியினர் பலர் டிரம்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.  இதனால், செனட் சபையில் 57-43 என்ற கணக்கில் ஆதரவு வாக்குகளை பெற்ற டிரம்ப் குற்றவாளி இல்லை என தீர்ப்பு கிடைத்து இந்த வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளார்.
 
இந்த கண்டன தீர்மான வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் டிரம்ப் கூறும்பொழுது, நம்முடைய அமெரிக்க வரலாற்றில் பெரிய சூன்ய வேட்டையின் மற்றொரு கட்டம் இது.  எந்தவொரு ஜனாதிபதிக்கும் இதுபோன்று நடந்தது இல்லை என கூறியுள்ளார்.
 
அமெரிக்காவை சிறந்த நாடாக மீண்டும் உருவாக்கும் நம்முடைய வரலாற்று சிறப்புமிக்க, தேசப்பற்று நிறைந்த மற்றும் அழகான இயக்கம் தற்பொழுது தொடங்கியுள்ளது என கூறியுள்ளார்.
 
அதிபராக இருந்த ஒருவருக்கு, கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு அதிக அளவாக 7.5 கோடி மக்கள் வரை வாக்களித்தனர் என்பதனை நம்முடைய எதிராளிகள் மறந்து விட முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
Editor's Choice

கடந்த இரண்டு வாரங்களாக சச்சின்தான் தலைப்பு செய்தி. ரிஹான்னாவின் ட்வீட்டுக்கு எதிர்வினை எத்தனையோ பேர் ஆற்றியிருந்தாலும், அடி பலம் என்னவோ சச்சினுக்குத்தான். சச்சின் மகன் அர்ஜுன் வெர்சஸ் ஆட்டோ ஓட்டுநர் மகன் என பரந்து விரிந்து விஸ்வரூபம் எடுத்த அந்த மீம் மீண்டும் வைரலாகியிருக்கிறது.

15 வயது சிறுவனான பிரனவ் தனாவடே ஜனவரி 2016-ம் ஆண்டு 1000 ரன்கள் அடித்து மீடியாக்களில் தலைப்பு செய்தியானார். எதிரணயினரின் ஒட்டுமொத்த ஸ்கோர் நூற்றுக்கும் குறைவு என்பதால், அது இன்னும் பெரிதானது. அதன் பின்னர், 16 வயதுக்கு உட்பட்டோருக்கான மேற்கு மண்டலத்துக்கான அணி அறிவிக்கப்படுகிறது. அதில் சச்சினின் மகன் அர்ஜுன் ஸ்குவாடில் சேர்க்கப்படுகிறார். ஆனால், அந்தப் பட்டியலில் பிரனவின் பெயர் இல்லை. அப்போது வைரலான மீம்தான் தற்போது மீண்டும் வைரலாகியிருக்கிறது.

"மேற்கு மண்டல அணியில் விளையாட, மும்பை அணிக்கு விளையாடி இருத்தல் அவசியம். பிரனவின் 1000 ரன்கள் சாதனையின் முன்பே, மும்பை அணிக்கான விளையாட்டு வீரர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டனர். சில போட்டிகளையும் மும்பை ஆடிவிட்டது. அதனால் தான் பிரனவால், மேற்கு மண்டல அணிக்கு ஆட முடியவில்லை. வீண் வதந்திகளைக் கிளப்ப வேண்டாம்." இது அப்போது பிரனவின் தந்தை கொடுத்த விளக்கம். அதையும் தாண்டி, பிரனவ் ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன். அர்ஜுன் டெண்டுல்கர் இடது கை வேகப்பந்து வீச்சாளர். 

சிறுவர்களுடனான போட்டியில் பிரனவ் 1000 ரன்கள் எடுத்தார் என்னும்போது அது வெறுமனே ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது. அதே அவரின் தந்தை ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்னும் செய்தியும் உள் சேர்ந்து, ஆட்டோ ஓட்டுநரின் மகன் என தலைப்புச் செய்தியாகும் போதுதான், அது இன்னும் பெரிதாக பேசப்படுகிறது.

உண்மையில் அர்ஜுன் டெண்டுல்கருக்கான வாய்ப்புகளும் வசதிகளும், பிரனவுக்கு வாய்த்திருக்குமா என்னும் கேள்வி அவசியம்தான். ஆனால், அர்ஜுனுக்கு இதுவரையில் அப்படி என்னென்ன வாய்ப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன எனப் பார்த்தால், அதற்கான விடை கிடைக்கும். 21 வயதான அர்ஜுன் டெண்டுல்கருக்கு இந்த ஆண்டுதான் சயத் முஷ்டக் அலி போட்டிகளில் மும்பை சார்பாக விளையாட வாய்ப்பு வந்தது. அதில் விளையாடிய ஒரேயொரு போட்டியிலும், அவர் ஒரு விக்கெட் மட்டுமே எடுத்தார். சச்சினுக்கு இருக்கும் செல்வாக்கிற்கு அவரால் இங்கிலாந்து போன்ற நாடுகளிலும், சீனியர் வீரர்களிடம் ஆலோசனை பெறத்தான் முடிந்ததே தவிர, அர்ஜுனை அணியில் சேர்க்க முடியவில்லை. சச்சின் போன்ற தந்தைகளைவிட செல்வாக்கிலும், பண பலத்திலும் குறைவாக இருக்கும் தந்தையினரின் மகன்கள்தான் அடுத்தடுத்த தொடர்களில் தேர்வாகிவருகிறார்கள். ஆம், அடுத்த வாரம் ஆரம்பிக்கவிருக்கும் விஜய் ஹசாரே போட்டிகளுக்கான மும்பை அணியில் அர்ஜுன் இல்லை.

பிரபலம், பண பலம் போன்றவற்றை வைத்து இங்கு வாய்ப்புக்கான முதல் கதவைத்தான் தட்ட முடியுமே தவிர, தொடர் வெற்றிகளுக்கு திறமை மிக மிக அவசியம். 20 ஆண்டுகளுக்கு முன்னர் சச்சினுக்கு இந்திய அணியில் ஆட கிடைத்த வாய்ப்புகளோ, அஜித் அகர்கருக்கு கிடைத்த வாய்ப்புகளோ, தற்போது ஒரு மும்பை வீரராக ரோஹித் ஷர்மாவுக்கு அவரின் ஆரம்ப காலங்களில் கிடைத்த வாய்ப்புகளோக்கூட அர்ஜுனுக்கு இன்னும் அமையவில்லை என்பதுதான் நிதர்சனம். ஆனாலும், சச்சினின் மகன் என்கிற நோய் அவரை துரத்திக்கொண்டே இருக்கிறது. 90 ரன்களைக் கடந்தால் சச்சினுக்கு வரும் மன அழுத்தத்தைவிட, சச்சின் மகன் என்கிற மன அழுத்தம் அதிகமானது.

அடுத்து நடக்கவிருக்கும் ஐபிஎல் ஏலத்தில் அர்ஜுன் பெயர் இருக்கிறது என்பதால், மீண்டும் சச்சின் விமர்சிக்கப்படுகிறார். அர்ஜுன் அவர் பெயரை ஐபிஎல் போட்டிகளில் விளையாட ஆர்வம் தெரிவித்து ரெஜிஸ்டர் செய்திருக்கிறார். அதுவும் அவரின் ஆரம்ப விலையாக அவர் நிர்ணயம் செய்திருப்பது 20 லட்சம் ரூபாய். அப்படியே அவரின் அப்பாவுக்காக வரும் கூட்டம், அர்ஜுனைப் பார்க்க வரும் என ஒரு அணி செலவு செய்து அர்ஜுனை எடுத்தாலும், அர்ஜுன் அந்தக் குறிப்பிட்ட போட்டியில் சிறப்பாக செயல்பட வேண்டும்.

பிரனவ் 1009 ரன்கள் அடித்தார் என்பதற்குப் பின்னர், அவர் மீதான அழுத்தம் இன்னும் அதிகரித்தது. மும்பை கிரிக்கெட் அசோசியேஷன் அவருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு மாதம் 10,000 ரூபாய் ஊக்கத்தொகை அளித்தது. பிரனவின் அந்தச் சாதனை பாடப்புத்தகத்தில் வந்தது. அந்தப் போட்டி தந்த கூடுதல் அழுத்தம் காரணமாக, அதன்பின்னர் அவர் பெரிதாக எதுவும் அடிக்கவில்லை. மும்பை சங்கம் கொடுத்த ஊக்கத்தொகையையும், பிரனவின் தந்தை திருப்பிக்கொடுத்துவிட்டார். இதெல்லாம் முடிந்து இரண்டாண்டுகளுக்குப் பின்னர் கல்லூரி போட்டி ஒன்றில், 200 ரன்கள் அடித்தார் பிரனவ். ஆனாலும், அவரால் மும்பைக்கான 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் இடம்பிடிக்க முடியவில்லை. இன்னமும், பிரனவ் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கிறார். அதற்குள், பிரனவ் கிரிக்கெட்டை விட்டு விலகிவிட்டார் என்கிறார்கள்.

கிரிக்கெட் என்பது காலம் காலமாக பெரு நகரத்தில் வாழும் மக்களின் விளையாட்டாகத்தான் இருந்திருக்கிறது. வாய்ப்புகளும், வசதிகளும் அங்கிருந்துதான் தொடங்குகின்றன. ஆரம்ப கால பயிற்சிகளுக்கு செல்லும் போது ஆசிஷ் நெஹ்ராவிடம் ஒரு வாகனம் கூட கிடையாது. முனாஃப் வீட்டிலும் ஏழ்மைதான். உமேஷ் யாதவ் உட்பட! ஆனால், அவர்களின் தொடர் திறமையால் தான் பிசிசிஐயின் இந்திய அணியில் அவர்களால் இடம் பெற முடிந்தது. இவர்கள் அனைவரின் வாழ்க்கை முறையும் கிரிக்கெட்டுக்குப் பின்னர்தான் மாறியது. அவ்வளவு ஏன், தமிழக வீரர் நடராஜன் அவரது திறமையால்தான் பஞ்சாப் அணிக்காக கோடிகளில் ஏலம் எடுக்கப்பட்டார்.

தந்தை ஒரு விளையாட்டில் ஜாம்பவான் என்பதாலேயே மகனும் அதே விளையாட்டில் அதைப் பிரதிபலிக்க வேண்டும் என்பது எந்த விதத்திலும் அவசியமில்லை. இல்லை அர்ஜுன் எல்லா பயிற்சிகளையும் சிறப்பாக மேற்கொண்டு, குறிப்பிடத்தக்க வகையில் சாதனைகள் செய்தால், இந்திய அணிக்கு நிச்சயம் ஒரு வேகப்பந்து வீச்சாளர் கிடைக்கலாம். அர்ஜுன் டெண்டுல்கர்களும், 1000 ரன்கள் கடந்த பிரனவ்களுமே, இந்த சமூகத்தின் விக்டிம்கள்தான். சிறுவயதில் அவர்கள் மேல் வைக்கப்படும் பெரிய அளவிலான அழுத்தமே, அவர்களை மூழ்கடித்துவிடுகிறது.

பக்கம் 38 / 74