Editor's Choice

ஃபேஸ்புக்கின் பதிவுகளை மதிப்பிடும் மதிப்பீட்டாளர் (Moderator)  முதன்முறையாக அயர்லாந்து நாடாளுமன்ற குழுவிடம் தனது வேலையால் ஏற்படும் மன அழுத்தம் குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளளார்.

இசெபெல்லா பிளங்கெட், ஃபேஸ்புக் நிறுவனத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக மதிப்பீட்டாளராகப் பணிபுரிகிறார்.

அவரது வேலை ஃபேஸ்புக் பதிவுகளில் வன்முறைக் காட்சிகள், தீவிரவாதம், வசவுகள், தற்கொலை போன்ற உள்ளடக்கங்கள் இருக்கின்றனவா என்பதை கண்காணிப்பது.

என்ன காட்சிகளைப் பார்த்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் தனது நண்பர்களிடத்திலோ, வீட்டில் உள்ளவர்களிடமோ அவர் பேசக்கூடாது. ஏனெனில் வேலைக்குச் சேரும்போதே அதற்கான ஒப்பந்தத்தில் நிறுவனம் கையெழுத்துப் பெற்றிருக்கிறது.

அப்படியிருந்தும் அவர் வெளிப்படையாகப் பேச வந்திருக்கிறார். அந்தத் துணிச்சல் குறித்து தொழில் மற்றும் வேலைவாய்ப்புக்கான அயர்லாந்து நாடாளுமன்றக் குழு பாராட்டியிருக்கிறது.

"எங்களுடைய வேலை குறித்து நாங்கள் எதுவும் பேசக்கூடாது என்பது எப்போதும் தெளிவுபடுத்தப்பட்ட ஒன்று. நண்பர்களிடமும் குடும்பத்தினரிடமும் வேலையைப் பற்றி எதுவும் கூறக்கூடாது. அது ரகசியங்களைக் கொண்ட அலுவலகம்"
 
"இரண்டு ஆண்டுகளாக வேலை செய்து வருகிறேன். மன நலனில் ஏற்படுத்தும் பாதிப்பால் இனியும் இந்த வேலை செய்ய முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை" என கூறுகிறார் இசெபெல்லா.

"அலுவலகத்துக்குச் சென்றோம், வீட்டுக்கு வந்தோம், அனைத்தையும் மறந்து மகிழ்ந்திருந்தோம் என்று இந்த வேலையில் இருக்க முடியாது. இது சாதாரண வேலையைப் போன்றதல்ல" என்கிறார் இசெபெல்லா.

இசெபெல்லா ஒரு நாளைக்கு சுமார் 100 "டிக்கெட்டுகளை" பரிசீலிக்க வேண்டும். அவை காணொளியாகவோ, படங்களாகவோ, எழுத்துகளாகவோ இருக்கலாம். பெரும்பாலும் அவை வன்முறைக் காட்சிகள், தற்கொலைகள், சுரண்டல்கள், வசவுகள் போன்றவையாக இருக்கும் என்கிறார் அவர்.

அயர்லாந்தில் ஃபேஸ்புக் நிறுவனத்தின் மிகப்பெரிய ஒப்பந்ததாரரான கோவேலன் என்ற நிறுவனத்தில் இசெபெல்லா பணியாற்றுகிறார்.

ஃபேஸ்புக் நிறுவனத்தில் நேரடியாக வேலை செய்யும் பிறரைப் போல தமக்கு வீட்டில் இருந்து வேலை செய்ய அனுமதி இல்லை என்கிறார் இசெபெல்லா.

அதனால் அதிக கொடூரமான காட்சிகளையும் பதிவுகளை அலுவலகத்தில் இருந்தபடி தாம் காண வேண்டியிருப்பதாகவும் இசெபெல்லா கூறுகி்றார்.

வீட்டில் இருந்து வேலை செய்வோருக்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்த கொடூர வன்முறை, குழந்தைகள் தொடர்பானவை, தற்கொலைகள் போன்ற பதிவுகளைப் பரிசீலிக்கும் பணி தரப்படாது.

வீட்டில் வேலை செய்ய வாய்ப்பிருந்தும், அலுவலகத்துக்கு வர நிர்ப்பந்திக்கப்பட்டதால், மனஅழுத்தம் அதிகமாகி அதற்கான மருந்துகளை எடுத்துக் கொண்டிருப்பதாக இசெபெல்லா கூறுகிறார்.

மனநல உதவிகள் 24 மணி நேரமும் இருப்பதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்தாலும் தமக்கு நல்வாழ்வு குறித்து ஆலோசனை வழங்குவோர் தகுதிபெற்ற மனநல நிபுணர்கள் இல்லை என்கிறார் இசெபெல்லா.

ஒப்பந்தப் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு வாரத்துக்கு ஒன்றரை மணி நேரம் நல்வாழ்வுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. பயிற்சியாளரிடம் பேசுவது. காலாற நடப்பது போன்றவற்றுக்கு அந்த நேரத்தைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

"இது போதாது. வேலையின்போது பார்க்கும் கொடூரக் காட்சிகள் என் கனவுகளில் வருகின்றன. நினைவில் தங்குகின்றன. அது கொடூரமானது." என்கிறார் இசெபெல்லா.

"காணொளிகளிலும் படங்களிலும் அடுத்து என்ன வரப்போகிறது என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால் முழுமையாக அனைத்தையும் பார்த்தாக வேண்டும். ஏனெனில் எங்காவது விதிமீறல் இருக்கலாம்."

சில ஃபேஸ்புக் மதிப்பீட்டாளர்கள், PTSD எனப்படும் பேரதிர்ச்சிக்குப் பிறகான மனஉளைச்சல் தொடர்பான பொறுப்புத்துறப்புப் பத்திரத்தில் கையெழுத்திட அறிவுறுத்தப்படுகிறார்கள். வேலையின்போது பார்க்கும் காட்சிகளால் மனநலம் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

பதிவுகளைப் பரிசீலிக்க மனிதர்களுடன் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது ஃபேஸ்புக். வருங்காலத்தில் மனிதர்களைக் குறைத்துவிட்டு முற்றிலுமாக செயற்கை நுண்ணறிவை மட்டுமே பயன்படுத்த முடியும் என்றும் ஃபேஸ்புக் நம்புகிறது.

ஆனால் இது ஃபேஸ்புக்கின் "அதீத கற்பனை" என்கிறார் இசெபெல்லா. தொழில்நுட்பம் இன்னும் அதற்கு அருகில் கூட வரவில்லை என்கிறார் அவர்.

ரகசியம் காக்கும் ஒப்பந்தத்தை வைத்துக் கொண்டு ஊழியர்கள் மிரட்டப்படுவதாகவும், அவர்கள் தங்களது வேலை போய் விடும் என அஞ்சுவதாகவும் நாடாளுமன்ற குழுவிடம் இசெபெல்லா கூறினார்.

ஃபேஸ்புக் ஊழியர்களுக்கான தளத்தில் வெளியே வந்து பேசும் சில ஊழியர்களின் பதிவுகள் அகற்றப்பட்டிருப்பதை இசெபெல்லா சுட்டிக்காட்டுகிறார்.

"தாங்கள் நடத்தப்படும் விதத்தையும் உள்ளே என்ன நடக்கிறது என்பதையும் ஊழியர்கள் பதிவிட்டிருந்தனர்" என்று நாடாளுமன்றக் குழுவிடம் இசெபெல்லா கூறினார். "ஊழியர்களின் கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டு நீக்கப்பட்டிருக்கின்றன. சில கணக்குகள் முடக்கப்படுகின்றன"

தன்னுடைய அனுபவமே தன்னை நாடாளுமன்ற குழு முன் சாட்சியம் அளிக்கத் தூண்டியதாகக் கூறும் இசெபெல்லா, "எனக்கு இதைச் செய்தாக வேண்டும் என்று தோன்றியது," என்கிறார்.

"ஊழியர்களுக்கு பல பொறுப்புகள் இருக்கின்றன. அவர்கள் ஆபத்தை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. அப்படி அஞ்சிக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்காக நான் பேச வேண்டியிருக்கிறது," என்கிறார் இசெபெல்லா.

Editor's Choice

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு (EPF) பங்களிப்பு செய்யும் பணியாளர்களுக்கு UAN பற்றி கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். ஒருவேளை UAN (Universal Account Number ) -ஐ உருவாக்கவில்லை என்றால், புதிதாக உருவாக்கலாம். ஏற்கனவே இருக்கும் UAN -ஐ மறந்துவிட்டாலும், அதனை கண்டுபிடிக்கலாம்.

1. முதலில் EPFO -வின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்துக்கு செல்ல வேண்டும். (epfindia.gov.in)

2. அந்த இணையதளத்துக்கு சென்றபிறகு Our Services என்ற ஆப்சனை தேர்ந்தெடுத்து For Employees என்ற ஆப்சனுக்குள் நுழைய வேண்டும்.

3. பின்னர் Member UAN/Online Service என்ற ஆப்சனுக்குள் சென்று Know Your UAN என்பதை தேர்தெடுக்க வேண்டும்.

4. தற்போது புதிய பக்கத்துக்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். அந்த பக்கத்தில் உங்களுடைய அடையாள அட்டை தகவல்களை பதிவிட வேண்டும். உதாரணமாக, ஆதார் அட்டை அல்லது பான்கார்டு எண் ஆகியவற்றில் தகவல்களை பதிவு செய்யுங்கள்

5. கீழே கொடுக்கப்பட்டுள்ள காலி பகுதிகளில் உங்களின் தனிநபர் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். உங்களின் பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண் ஆகியவற்றை பதிவிடவும்.

6. தகவல்களை உறுதி செய்வதற்காக கொடுக்கப்பட்டுள்ள Captcha பதிவு செய்தவுடன் ‘Get Authorisation Pin’ பகுதியை கிளிக் செய்ய வேண்டும்.

7. உங்களுடைய அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு UAN அனுப்பி வைக்கப்படும்.

8. இதுவரை நிறுவனம் உங்களுக்கு UAN - ஐ கொடுக்கவில்லை என்றாலும், நீங்களாகவே அதனை உருவாக்கிக்கொள்ளவும் முடியும். 

UAN -ஐ உருவாக்குவது எப்படி?

1) UAN போர்டலுக்கு நீங்கள் செல்ல வேண்டும். https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

2) அங்கே ‘Know your UAN Status’ என்பதை கிளிக் செய்ய வேண்டும். அப்போது ‘Know Your UAN’ பக்கம் என்ற புதிய பக்கம் உருவாகும்.

3) அந்தப் பக்கத்தில் உங்களின் மாநிலம் மற்றும் வருங்கால வைப்புநிதி அலுவலகம் (EPFO office) ஆகியவற்றை தேர்ந்தெடுக்க வேண்டும்.

4. பின்னர், உங்களின் பி.எஃப் எண் ஆகியவற்றுடன் தனிநபர் தகவல்களை பதிவு செய்ய வேண்டும். பெயர், பிறந்த தேதி, தொலைபேசி எண், ஆதார் எண் ஆகியவற்றை பதிவு செய்து Get Authorization Pin’ -ஐ கிளிக் செய்ய வேண்டும்.

5. உங்கள் மொபைலுக்கு தற்போது ஓ.டி.பி (OTP) பாஸ்வேர்டு வரும். அதனை பதிவு செய்தவுடன் Validate OTP -ஐ கிளிக் செய்யுங்கள்.

6. கடைசியாக உங்களுடைய அதிகாரப்பூர்வ மொபைல் எண்ணுக்கு UAN அனுப்பி வைக்கப்படும்.

Editor's Choice

கொரோனா தொற்று இரண்டாவது அலை இந்தியாவை உலுக்கி வரும் நிலையில், பல மாநிலங்களில் ஆக்சிஜன் தேவை, படுக்கைகள் என்பதுடன் கூடவே, வெண்டிலேட்டர் தேவையும் அதிகரித்துள்ளது. 

ஆக்சிஜனுக்காக பலர் மணி கணக்கில் வரிசையில் காத்துக்கிடக்கும் நெருக்கடி நிலையும் ஏற்பட்டுள்ளது.  டெல்லி, தமிழகம்  உள்ளிட்ட சில மாநிலங்களில் ஆக்சிஜன் கிடைக்காமல் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. 

இந்நிலையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) மிகக் குறைந்த விலையில் திறன் மிக்க 3 வகை வெண்டிலேட்டர்களை உருவாக்கி  சாதனை படைத்துள்ளது.

"இந்த மருத்துவ உபகரணங்கள் அனைத்தும் WHO தரத்திற்கு வடிவமைக்கப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ளன,  வென்டிலேட்டர்கள் மற்றும் ஆக்ஸிஜன் செறிவூட்டிகளுக்கான எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், மென்பொருள், போன்ற அனைத்தும் இளம் விஞ்ஞானிகளால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளன.

இந்த உபகரணங்கள் ஒரு வருடம் வரை இடைவிடாது செயல்பட முடியும். இதனை தொடர்ந்து பயன்படுத்த சந்தையில் எளிதில் கிடைக்கும் ரசாயனத்தை மாற்றினால் போதும்,

நிமிடத்திற்கு 10 லிட்டர் ஆக்ஸிஜனை வழங்கும் திறனுடன் கூடிய இந்த கருவியின் உதவியுடன், ஒரே நேரத்தில் இரண்டு சாதாரண நோயாளிகளுக்கு அல்லது திவீர சிகிச்சை தேவைப்படும் ஒரு நோயாளிக்கு சிகிச்சை வழங்க முடியும். இந்த வகை கருவியின் முன்மாதிரி ஏற்கனவே VSSC மருத்துவமனையில் செயல்பட்டு வருகிறது. இதனை தயாரிக்க 50 ஆயிரத்துக்கு மேல் ஆகாது என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Editor's Choice

உலகளவில் அதிக அளவில் வாட்ஸ்அப்பின் பயனர்களை கொண்ட இந்தியா, அதன் சேவைகளுக்கான மிகப்பெரிய சந்தையாகவும் இந்தியா திகழ்கிறது. அதன் தனியுரிமைக் கொள்கை சில மாதங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டது. 

இதற்கு பரவலாக எதிர்ப்புகள் எழுந்தது. இதனால், பல பயனர்கள் வாட்ஸ் அப்பிற்கு மாற்றான டெலிகிராம் மற்றும் சிக்னலுக்கு மாறினர்.

WhatsApp செயலியை திறந்தாலே, தனியுரிமைக் கொள்கை தொடர்பான அறிவிக்கைகள் தோன்றுகின்றன.  அதற்கு நாம் ஒப்புதல் அளிக்கவில்லை என்றால், மே-15-ம் தேதிக்கு பிறகு, WhatsApp செயலி இயங்காது, புதிய தனியுரிமையை ஏற்காதவர்களின் கணக்கு நீக்கப்படும் என வைரலாக ஒரு தகவல் பகிரப்பட்டு வருகிறது. 

ஆனால், WhatsApp-ன் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் இது குறித்து வெளியிட்டப்பட்டுள்ள தகவல்களில், வாட்ஸ் அப்பின் தனியுரிமை கொள்கையை பயனர்கள் ஏற்கவில்லை என்றால், அவர்கள் கணக்கு எதுவும் நீக்கப்படாது. ஆனாலும் சில அம்சங்களை பயன்படுத்த முடியாது என குறிப்பிட்டுள்ளது.

அதாவது பயனர்கள், சாட்டிங் தவிர போன்  மற்றும் வீடியோ கால் உள்ளிட்ட அழைப்புகளை மேற்கொள்ள முடியும், ஆனால், பழைய சாட்டிங் தகவல்களை பார்க்க முடியாது என கூறப்படுகிறது.

உங்களுக்கு WhatsApp செயலியை பயன்படுத்த விருப்பம் இல்லை என்றாலும், உங்கள் போனில் இருந்து WhatsApp செயலியை நீக்கினாலும் உங்கள் கணக்கு நீக்கப்படாது.

சில மாதங்களுக்கு முன், வாட்ஸ்அப் போன்ற தனியார் செயலிகள் பயனர்கள்  தொடர்பான தனிப்பட்ட தகவல்களைப் பகிர விரும்புகின்றன, இதனை நிறுத்த வேண்டும் என்பது குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இது ஒரு தனியார் செயலி என்று கூறிய டெல்லி உயர் நீதிமன்றம்  தனியுரிமை பாதிக்கப்படுகிறதென்றால், நீங்கள் வாட்ஸ்அப்பை நீக்கலாம் என கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Editor's Choice

அமெரிக்காவைத் தொடர்ந்து, செவ்வாய் கிரகத்தில் விண்கலனை வெற்றிகரமாக தரையிறக்கி சரித்திரம் படைத்துள்ளது சீனா. இந்தத் தகவலை சீனா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விண்கலனை தரையிறக்கும் பணியில் ஈடுபட்ட அனைவருக்கும் சீன அதிபர் ஜி ஜின்பிங் (Chinese President Xi Jinping) வாழ்த்து தெரிவித்தார்.

"சவாலை அனைவரும் தீரத்துடன் எதிர்கொண்டீர்கள். சிறப்பாக செயல்பட்டீர்கள். கிரகங்களை ஆய்வு செய்யும் நாடுகளின் பட்டியலில் நமது நாட்டை சேர்த்துள்ளீர்கள்" என்று சீன அதிபர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை (0100 பெய்ஜிங் நேரம் சனிக்கிழமை)  அன்று, தியான்வென்-1 (Tianwen-1) விண்கலம் சுற்றுப்பாதையை அடைந்தது. விண்கலனில் பொருத்தப்பட்டிருந்த தரையிறங்கும் தொகுதி மூன்று மணி நேரம் கழித்து சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்து செவ்வாய் கிரகத்தின் வளிமண்டலத்தில் நுழைந்தது என்று அதிகாரப்பூர்வ சீனா விண்வெளி செய்தி China Space News தெரிவித்துள்ளது.   

செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்வதற்காக, கடந்த ஆண்டு ஜூலை மாதம் சீனா அனுப்பிய தியான்வென்-1 (Tianwen-1) விண்கலன், கடந்த பிப்ரவரி மாதம் செவ்வாய் கிரகத்தின் சுற்றுவட்டப்பாதைக்குள் நுழைந்தது. 6 சக்கரங்களைக் கொண்ட ‘ரோவர்’ (rover) கருவியுடன் அனுப்பப்பட்ட இந்த விண்கலத்தின் எடை 240 கிலோ ஆகும்.

செவ்வாய்கிரகத்தின் புவியியல் அமைப்பு குறித்து இந்த தியான்வென்-1 (Tianwen-1) விண்கலம் ஆய்வு செய்ய உள்ளது. செவ்வாய்கிரகம் தொடர்பான புகைப்படங்களை எடுக்க சக்தி வாய்ந்த கேமராக்கள் இதில் பொருத்தப்பட்டிருக்கின்றன.

செவ்வாய் கிரகத்தின் பாறை தன்மைகள், நீர் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்கு தியான்வென்-1  ரோவர் விண்கலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கருவிகள் பயன்படும்.

Editor's Choice

லாங் மார்ச் -5 பி ராக்கெட் (Long March-5B rocket) ஏப்ரல் 29 ஆம் தேதி சீனாவின் புதிய விண்வெளி நிலையத்தின் முதல் தொகுதியை பூமியின் சுற்றுப்பாதையில் ஏவியது. அதன் 18 டன் எடை கொண்ட முக்கிய பிரிவு இப்போது விழும் நிலையில் உள்ளது. அது பூமியில் எங்கே, எப்போது நுழையும் என்று துல்லியமாக சொல்வது கடினம் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். 

பென்டகனின் கூற்றுப்படி, சனிக்கிழமையன்று சுமார் 2300 GMT மணியளவில் சீனாவின் ராக்கெட் பகுதி வரலாம். கணிக்கப்பட்ட இந்த நேரத்தில் இருந்து ஒன்பது மணிநேரம் கூடுதலாகவோ அல்லது குறைவான சமயத்திலோ பூமியின் எந்தப் பகுதியிலும் சீனாவின் ராக்கெட் வந்து விழலாம். 

மறு நுழைவில் பெரும்பாலான ராக்கெட் கூறுகள் அழிக்கப்படலாம் என்று சீன அதிகாரிகள் நம்புகின்றனர்.

"தீங்கு விளைவிக்கும் சாத்தியங்கள் மிகவும் குறைவு" என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ராக்கெட் - அல்லது அதன் சில பகுதிகள் - தரையிறங்கும் இடத்தைப் பற்றி ஊகங்கள் எழுந்துள்ள போதிலும், 70 சதவிகித நீரால் ஆன பூமி கிரகத்தில் கடலில் விழுவதற்கான வாய்ப்பே அதிகம் என்று கூறப்படுகிறது.  

"இது யாருக்கும் தீங்கு விளைவிக்காத இடத்தில் தரையிறங்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று பென்டகன் செய்தித் தொடர்பாளர் மைக் ஹோவர்ட் கூறினார்.

ராக்கெட் பிரிவை அமெரிக்கா கண்காணித்து வருவதாக ஹோவர்ட் கூறினார், ஆனால் "பூமியின் வளிமண்டலத்தில் அது எப்போது நுழையும் என்பதை சரியாக கணிக்க முடியாது என்று ஹோவர்ட் கருதுகிறார்.

இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் லாயிட் ஆஸ்டின் அதை சுட்டு வீழ்த்துவதற்கான எந்த திட்டமும் , அமெரிக்க ராணுவத்திடம் இல்லை என்று கூறினார். ராக்கெட் பூமியின் சுற்றுப்பாதையில் நுழையும் விஷயத்தில் சீனா அலட்சியமாக இருப்பதாகவும் கூறினார்.

"பொருளின் அளவைப் பொறுத்தவரை, பெரிய துண்டுகள் எஞ்சியிருக்கும்" என்று பாரிஸ்-பிஎஸ்எல் ஆய்வகத்தின் வானியலாளர் (astronomer) புளோரண்ட் டெலிஃபி (Paris-PSL Observatory) கூறினார்.

"மக்கள் வசிக்கும் பகுதியில் சிதைவுகள் விழுவதற்கான வாய்ப்புகள் மிகவும் குறைவே. அநேகமாக அந்த சாத்தியக்கூறு ஒரு மில்லியனுக்கு ஒன்று என்ற விகிதத்தில் தான் இருக்கும்."

2020 ஆம் ஆண்டில், மற்றொரு லாங் மார்ச் ராக்கெட்டிலிருந்து சிதைபாடுகள் ஐவரி கோஸ்டில் உள்ள கிராமங்களில் விழுந்தன, இதனால் கட்டமைப்பு சேதம் ஏற்பட்டது, ஆனால் மக்கள் யாருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

பக்கம் 5 / 21